‘ராமாயணா – தி லெஜண்ட் ஆஃப் பிரின்ஸ் ராமா’ – விமர்சனம்
வாசிப்பு பழக்கம் அருகி காணொளி வடிவம் பெருகிவிட்ட சூழலில் அணிமேஷன் வடிவில் வந்திருக்கும் ராமாயண கதை இது.
ராமனின் வனவாசம்; சீதையின் கடத்தல் படலம்; சீதையை மீட்டு வருவதற்காக ராமன் நடத்தும் யுத்தம்; ராமனுக்கு உதவும் அனுமன்; அண்ணன் கிழித்த கோட்டை தாண்டாத தம்பி லஷ்மணன் என பல கோடி மக்களுக்கு தெரிந்த கதைதான். அதை சொல்லும் விதத்தில் இது ஒரு வகை.
அணிமேஷன் கதாபாத்திரங்களுக்கு செந்தில் குமார், டி.மகேஷ்வரி, பிரவீன் குமார், தியாகராஜன், லோகேஷ் மற்றும் ராமாயண கதையை விவரிக்கும் ரவூரி ஹரிதா என பின்னணி கலைஞர்கள் குரல் கொடுத்து படத்திற்கு உயிர் கொடுத்திருக்கின்றனர். கதைக்கு பொருத்தமான பின்னணி இசையை விதாத் ராமனும் சிறப்பு ஒலியூட்டலை நவோகோ அசாரியும் கொடுத்திருப்பது படத்தின் பலம்.
குத்து வெட்டு ரத்தம், வன்முறை தூக்கல், குமட்டல் வசனம் என்று வரிசை கட்டும் படங்களுக்கு மத்தியில் எல்லோருக்கும் ஏற்கனவே தெரிந்த கதையை உறுத்தல் இல்லாமல் கொடுத்தது பெரிய ஆறுதல். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடும்பத்துடன் அமர்ந்து பார்க்கும் அளவுக்கு படத்தின் தரம் உள்ளது. ஒட்டுமொத்த குழுவையும் இயக்கி சிறப்பாக வேலை செய்திருக்கிறார் இயக்குநர் விஜயேந்திர பிரசாத்.
அணிமேஷன் உலகம் கற்பனைக்கு எட்டாத அளவுக்கு வளர்ந்துள்ள இந்த சூழலில் கார்ட்டூன் தரத்திற்கு அணிமேஷனை உருவாக்கியுள்ளது படத்தின் குறை.
‘ராமாயணா’ பார்க்கலாம்.