‘தருணம்’ – விமர்சனம்
சி.ஆர்.பி.எப் காவல்துறை அதிகாரியான கிஷன் தாஸ், பணி இடைநீக்கம் செய்யப்பட்டவர். ஒரு திருமண விழாவில் ஸ்மிருதி வெங்கட்சந்திக்க அது காதலாகிறது. ஸ்மிருதியின் நண்பரான பக்கத்து வீட்டு ராஜ் அய்யப்பனுக்கு இது பிடிக்கவில்லை. ஸ்மிருதியின் மேல் இருக்கும் ஒருதலைக் காதலை அவரிடம் வெளிப்படுத்துகிறார். அதைப் பெரிதாகக் கண்டுகொள்ளாமல் வழக்கம் போல பழகுகிறார் ஸ்மிருதி. ஒருநாள் கிஷன் தாஸ் ஸ்மிருதியின் வீட்டிற்குள் வர, சமையலறையில் பிணமாகக் கிடக்கிறார் ராஜ் அய்யப்பன். குற்றம் நடந்தது என்ன? என்பதற்கு விடை தருகிறது அடுத்தடுத்த காட்சிகள்.
கம்பீரமான மேனரிசம், சிறப்பான ஸ்டன்ட் என்று CRPF அதிகாரிக்கான நடிப்பை கிஷன் தாஸ் கொடுத்திருந்தாலும், ரொமாண்டிக் கதாநாயகன் மோடிலிருக்கும் அவரது தோற்றம் அதற்கு ஒத்துழைக்கவில்லை. கொலையே பார்த்தாலும் சற்றே நிதானமாக இருக்கும் பாத்திரம் என்றாலும் எல்லா நேரமும் எந்த ஏற்ற இறக்கமும் இல்லாத பாவனைகளையே கொடுக்கிறார்.
கொலையைச் செய்துவிட்ட பதற்றத்தை ஒரு சில காட்சிகளில் சிறப்பாகக் கொடுத்தாலும், சில நிமிடங்களிலேயே பாத்திரத்தை விட்டு விலகிச் செல்வதும் மீண்டும் அதற்குள் வருவதுமாகக் கண்ணாம்பூச்சி ஆடுகிறார் நாயகி ஸ்மிருதி வெங்கட்.
நாயகனின் நண்பனாக வரும் பால சரவணன் சீரியஸான இடங்களில் போடும் நகைச்சுவை கதைக்கான பதற்றத்தையும் சேர்த்துக் குறைக்கிறது. அந்த இடத்தில் இப்படியான வசனங்களை வைத்திருக்கத் தேவையே இல்லை. வில்லனாக வரும் ராஜ் அய்யப்பன், கதாபாத்திரமாக வெறுப்பைச் சம்பாதித்துக் கொள்ளும் பணியைத் திறம்படச் செய்திருக்கிறார்.
இசையமைப்பாளர் தர்புகா சிவா இசையில் வரும் பாடல் பெரிதாக ஈர்க்கவில்லை. ஆனால், பின்னணி இசையில் பரபரப்பை உயர்த்த கை கொடுத்திருக்கிறார். கேமரா பெரிதாக வீட்டிற்கு வெளியே செல்லவில்லை என்றாலும் குறுகிய இடத்தில் ஒரு திரில்லர் படத்துக்கான ஒளியுணர்வை சிறப்பான கோணங்களால் கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ராஜா பட்டாசார்ஜி. டான் அசோக் மற்றும் சி.பிரபுவின் சண்டைக் காட்சிகள் அட்டகாசம். பார்க்கிங்கில் இரவு நேரத்தில் நடக்கும் அந்த ஸ்டன்ட் காட்சி படமாக்கப்பட்ட விதம் மாஸாக இருந்தாலும் நம்பகத்தன்மைக்கும் குறைவில்லாமல் இருப்பது ப்ளஸ்.
இயக்குநர் அரவிந்த் ஸ்ரீனிவாசனின் திரைக்கதையில் விஷயங்கள் வேகமாக நகர்வது போல் தோன்றினாலும், அது ஆழமில்லாமல் மேலோட்டமாக இருப்பது அடுத்து என்ன என்கிற ஆர்வத்தைத் தூண்டவில்லை. தொடக்கமே துப்பாக்கிச் சூடு நடைபெறுவதில் தொடங்குகிறது. ஆனால் அது படமாக்கப்பட்ட விதத்தில் நம்பகத்தன்மை மிஸ்ஸிங். ராணுவ சீக்ரெட் ஆபரேஷன் ஏதோ வீடியோ கேம் போல விரிவது ஏமாற்றமே. ஆங்காங்கே நாயகி பாத்திரத்தில் தெளிவின்மை இருப்பது புலப்படுவதால் கதையோடு முழுமையாகப் பயணிக்க முடியாமல் போய்விடுகிறது.
இரண்டாம் பாதி த்ரில்லராக மாறி கதாநாயகன் தனது காவல்துறை மூளையால் திறமையாகத் திட்டமிட்டுப் பல சம்பவங்களை நடத்துவதாக நகர்கிறது. ஆனால் அதில் எதுவும் சாதுர்யமிக்கதாக புலப்படாமல் லாஜிக்கற்ற நகர்வுகளாகவே விரிகிறது. ஆங்காங்கே சில ஐடியாக்கள் சுவாரஸ்யம் என்றாலும், அடுக்குமாடிக் குடியிருப்பில் இரண்டு இடங்களில்தான் சிசிடிவி இருக்கிறது என்பதும், தொப்பி அணிந்தால் கேமராவில் மாட்ட மாட்டோம் என்பதும் சுத்த போங்கு.
‘தருணம்’ தப்பாட்டம்!