திரை விமர்சனம்

யானையும் நல்லா நடிச்சிருக்குப்பா…‘ராஜ பீமா’ – விமர்சனம்

உணவுத் தேடி ஊருக்குள் நுழையும் காட்டு யானையை விரட்டி துரத்த நினைக்கும் மக்கள் பதற்றத்தில் இருக்க, நாயகன் ஆரவ் மட்டும் யானை அருகே தில்லாக செல்கிறார். அப்போது யானைக்கு அடிப்பட்டிருப்பதை அறிந்து அதற்கு மருந்துபோடுகிறார்.  யானையும் பல வருட பழக்கம் போல் ஆரவ்வின் அரவணைப்பில் அமைதியாகிறது. இறந்துபோன தனது அம்மாவே நேரில் வந்ததுபோன்று உணரும் நாயகன், யானைக்கு பீமா என பெயரிட்டு வளர்க்கத்தொடங்குகிறார். பீமா வந்த யோகம் ஆரவ் தொட்டதெல்லாம் ஹிட்டாகிறது. எல்லாம் ஸ்மூத்தா போய்க்கொண்டிருக்கும் நேரத்தில் அம்மா போல நினைத்த பீமா காணாமல் போகிறது. பீமா எங்கே போனது ?.. அதற்கு என்னாச்சு?.. என்னபதை அறிய நீங்கள் படத்துக்கு போகலாம்.

ஆஜானுபாகுவான தோற்றத்தில்  இருக்கும் ஆர்வ்வின் நடிப்பிலும் கம்பீரம். அம்மா சென்டிமென்டில் யானை பீமாவிடம் காட்டும் காட்சிகள் ஆர்வ்வின் நல்ல நடிப்புக்கு சாட்சிகள்.

ஆர்வ்வின் காதலியாக வரும் ஆஷிமா நர்வால் அழகாக இருக்கிறார்; பாடல் காட்சிகளில் அம்சமாக ஈர்க்கிறார். மற்றபடி வழக்கமான ஹீரோயினாக வந்துபோகிறார். ஒரு பாட்டுக்கு ஆட்டம் போட்டு காணாமல் போகிறார் ஓவியா.

ஆரவ்வின் தந்தையாக நாசர், அமைச்சர் ரோலில் வில்லத்தனம் காட்டும் கே.எஸ்.ரவிகுமார், துக்கடா காமெடிக்கு யோகிபாபு, ரிப்போர்ட்டர் ரோலில் எட்டிப்பார்க்கும் யாஷிகா ஆனந்த், அப்புறம் ஷாயாஜி ஷிண்டே என ஒரு டஜன் நட்சத்திரங்கள் அரிதாரம் பூசி இருக்கிறார்கள். ஆங்.. அந்த யானையும் நல்லா நடிச்சிருக்குப்பா…

கதை, களத்துக்கு பொருத்த ஒளிப்பதிவை செய்திருக்கும் ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர்.சதிஷ்குமாருக்கு பாராட்டுகள்! இசையமைப்பாளர் சைமன் கே. கிங் பின்னணி இசையில் கிங்காக வளர வாழ்த்துகள்!

எல்லா உயிர்களும் ஏங்குவது அளவற்ற அன்புக்கும் பாசாங்கற்ற பாசத்திற்கும்தான் என்ற ஒன் லைனை கையிலெடுத்த இயக்குநர், திரைக்கதை அமைப்பில் இன்னும் மெனக்கெட்டிருந்தால் ‘ராஜ பீமா’வை கூடுதலாக ரசித்திருக்கலாம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE