ஹீரோயிச பந்தா இல்லாத அஜித் : ‘விடாமுயற்சி’ விமர்சனம்
அப்பாடா.. ஒருவழியாக ரிலீஸ் ஆகிவிட்டது ‘விடாமுயற்சி’. காய்ந்து போயிருந்த ரசிகர்களுக்கு இரண்டு வருடங்களுக்குப் பிறகு அஜித் படைத்திருக்கும் விருந்து இது.
கதை…
அஜர்பைஜான் நாடு.. ஒரு அத்துவான காடு.. அதில் ஒரு ரோடு. பழுதாகி நிற்கும் காரில் அஜித் – த்ரிஷா மட்டும். இல்லற வாழ்க்கையில் ஏற்பட்ட மனக்கசப்பால் இருவரும் பிரிய நினைக்கின்றனர். த்ரிஷாவை அவரது அம்மா வீட்டில் விட்டுவருவதற்காக புறப்பட்ட பயணத்தில்தான் கார் மக்கர் செய்து வழியில் நிற்கிறது. அப்போது அங்கு வரும் கன்ட்டெயினர் லாரியில் அர்ஜுன் – ரெஜினா ஜோடி. உதவிசெய்ய முன்வரும் அவர்கள், த்ரிஷாவை ஒரு ஓட்டலில் இறக்கிவிடுவதாகச் சொல்லி லிப்ட் கொடுக்கின்றனர்.
அவர்கள் சென்ற சிறிது நேரத்திலேயே அஜித்தின் கார் ஸ்டார்ட் ஆகிறது. வழியில் தனக்காக காத்துக்கொண்டிருக்கும் த்ரிஷா இருக்கும் இடத்திற்கு செல்பவருக்கு காத்திருக்கிறது அதிர்ச்சி! யெஸ்.. அந்த இடத்தில் த்ரிஷா இல்லை. எங்கே போனார்.. என்ன ஆனார்? என தேடும் அஜித் சந்திக்கும் பிரச்சனைகள் மீதி கதை.
நீண்ட இடைவெளிக்கு பிறகு வரும் அஜித் படம் என்பதால் ஏகே ரசிகர்கள், தியேட்டரை திருவிழாவாக்குகின்றனர். விசில் சப்தங்களுக்கிடையே எண்ட்ரி ஆகும் அஜித், ஹீரோயிச பந்தாவெல்லாம் காட்டாமல் அடக்கி வாசித்து மனசை தொடுகிறார். முதல் பாதி எவ்வளவு அடிச்சாலும் தாங்குவார் போல என்று நினைக்கும் அளவுக்கு யாரென்றே தெரியாத எதிரிகளால் உடல் அளவிலும் மனதளவிலும் தாக்குதலுக்கு உள்ளாகிறார். இதெல்லாம் இடைவேளை வரைதான்.அதன்பிறகு எதிரிகளை போட்டு பொளந்து ஆக்ஷன் விருந்து படைக்கிறார். மனைவியின் கருத்துக்கு மரியாதை கொடுத்து ஜெண்டில்மேனாக நடந்துகொள்ளும் இடத்தில் நிஜவாழ்வின் அஜித் கேரக்டரை நினைவுபடுத்துகிறார்.
வழக்கமான தண்டவாளத்திலேயே தடதடக்கிறது த்ரிஷாவின் நடிப்பு. இருந்தாலும் குறையொன்றுமில்லை!
வயசானாலும் பின்னி பெடலெடுக்கிறார் அர்ஜுன். ஒரு கட்டத்தில் அவரது கேரக்டரும் அத்துவான காட்டில் காணாமல் போகிறது. அர்ஜுன் மனைவியாக ரெஜினா அட்டகாசம்! நடிப்பும் மிடுக்குமாக மனசை அள்ளுகிறார். சொல்லப்போனால் த்ரிஷா கேரக்டரை தூக்கி சாப்பிடுவதுபோன்ற கேரக்டர் அமைந்திருக்கிறது ரெஜினாவுக்கு! ஆரவ், ரம்யா உள்ளிட்ட கேரக்டர்களும் சிறப்பு!
அஜர்பைஜான் நாட்டின் புவியில் அமைப்பை அசல் டோன் மாறாமல் அப்படியே கேமராவில் அள்ளித்தந்து ரசிக்க வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஓம்பிரகாஷ்! ஏற்கனவே ஹிட்டடித்த அனிருத்தின் “சவடிக்கா..” பாடல் ஆட்டம்போட வைக்கிறது. பின்னணி இசையும் தரம்!
கார் துரத்தல் காட்சியில் அஜித், ஸ்டண்ட் கலைஞர்களுடன் இணைந்து ரிஸ்க் எடுத்திருக்கும் சண்டை பயிற்சியாளர் உள்ளிட்ட யூனிட்டுக்கு பாராட்டுகள்! பிளாஷ் பேக் காட்சிகள்; கதைக்குள் விரியும் கதையும் மீட்டருக்கு மேல் வேலை செய்திருக்கிறது. அது படத்தின் சுவாரஷ்யத்தை தடம் புரள வைக்கிறது. காமெடியும் மிஸ் ஆகி ஏமாற்றுகிறது.
‘தடையற தாக்க’, ‘தடம்’, மீகாமன்’ படங்கள் மூலம் சிறந்த இயக்குநராக அறியப்பட்ட மகிழ் திருமேனிதான் ‘விடாமுயற்சி’ கேப்டன். ரேஸ் ப்ரியரான அஜித்துக்கு அளவெடுத்து செய்தது போன்ற ஒரு மேக்கிங்கை திறம்பட செய்துள்ளார்!
சில குறைகள் இருப்பினும் ஆங்கில படம் பார்ப்பதுபோன்ற உணர்வை தருவது ‘விடாமுயற்சி’யின் பலம்!
-ஜெயராணி அமலன்