ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்கு திடீர் மயக்கம்
தமிழ்நாட்டில் வீட்டுவரி, சொத்துவரி, மின் கட்டணம் முதலியவை உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய அரசின் கட்டாயத்தால் தான் இந்த வரி, கட்டண உயர்வு நடத்தப்பட்டுள்ளதாக திமுக அரசு சார்பில் கூறப்படுகிறது. இதையடுத்து, சென்னையில் மின்கட்டண உயர்வை கண்டித்து, அதிமுகவினர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “சொத்து வரி உள்ளிட்ட அனைத்து வரிகளையும் திமுக அரசு உயர்த்தியுள்ளது. திமுக ஆட்சியில் மக்கள் துன்பத்தில் உள்ளனர். எங்கள் பிரச்னைகளுக்கு குரல் கொடுங்கள் என பிரதான எதிர்க்கட்சியான எங்களிடம் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். தமிழ்நாட்டில், அதிமுக நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தை பார்த்து மு.க.ஸ்டாலின் நடுங்கிக் கொண்டிருக்கிறார். அதிமுக-வுக்கு இருக்கும் மக்கள் செல்வாக்கை மறைக்க, திசை திருப்ப திட்டமிட்டு திமுக முன்னணி நிர்வாகிகள், அமைச்சர்கள் மீது பொய் வழக்கு போட்டுக் கொண்டிருக்கிறார்.
கொரோனா தொற்றினால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சூழலில் ஸ்டாலின் மனதில் ஈவு, இரக்கமில்லாமல் மின் கட்டணத்தை உயர்த்தி இருக்கிறார். மக்களின் எதிர்பார்ப்பிற்கு தகுந்தாற்போல ஆட்சி செய்தவர் புரட்சித்தலைவி அம்மா. தேர்தல் அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மின் கட்டணத்தை உயர்த்துவோம் என ஒரு வரி குறிப்பிட்டிருந்தால், உங்கள் நிலைமையே தலைகீழாக மாறி இருக்கும். ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஒரு பேச்சு, ஆட்சிக்கு வந்ததுக்கு பிறகு ஒரு பேச்சு, அதுதான் திமுகவின் நிலைப்பாடு. அதுதான் திராவிட மாடல்” என்றார்.
அதிமுக ஆர்ப்பாட்டத்தின் போது வெயிலால் எடப்பாடி பழனிசாமிக்கு லேசான மயக்கம் ஏற்பட்டது. அதன் பிறகு அவருக்கு தண்ணீர் கொடுத்து மேடையில் அமர வைத்தனர்.