சினிமா செய்திகள்

வரலட்சுமியை பார்த்து பயந்த வைபவ் : ‘ காட்டேரி’ பட அனுபவம்

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில்  கே. ஈ. ஞானவேல் ராஜா மற்றும் அபி & அபி பிக்சர்ஸ்  சார்பில் தயாரிப்பாளர் அபினேஷ் இளங்கோவன் இணைந்து தயாரித்திருக்கும் படம்  ‘காட்டேரி’.  ‘ யாமிருக்க பயமே’  படத்தை இயக்கிய  டீகே இயக்கும் இப்படத்தில் வைபவ், ஆத்மிகா, வரலட்சுமி சரத்குமார், கருணாகரன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஆகஸ்ட் 5 ஆம் தேதி படம் வெளியாவதை முன்னிட்டு நேற்று பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. அப்போது படம் பற்றி இயக்குனர் டீகே பேசியதாவது :-

” இந்த படத்தின் தொடக்க விழாவின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று என்னிடம் இருக்கிறது. அந்த புகைப்படத்தில் இருக்கும் இரண்டு திரையுலக பிரபலங்களுக்கு திருமணம் நடந்தது. அதன் பிறகு அவர்கள் விவாகரத்தும் பெற்றுவிட்டார்கள். படத்தை தொடங்கும் முன் தயாரிப்பாளர் நான் கேட்க அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தார். படத்தில் பணியாற்றிய அனைவரும்  தங்களுடைய முழுமையான ஒத்துழைப்பை வழங்கினார்கள். நான் பலமுறை தயாரிப்பாளர் நான் ஞானவேல் ராஜாவிற்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி இருக்கிறேன். ஒவ்வொரு முறையும் சூழலை பக்குவமாக எடுத்துக் கூறி, என்னை சமாதானப்படுத்தி மகிழ்ச்சியுடன் காத்திருக்க வைத்தார். நீண்ட காத்திருப்புக்கு பின் ஆகஸ்ட் 5ஆம் தேதி வெளியாகும் ‘காட்டேரி’  நிச்சயம் வெற்றி பெறும்.” என்றார்.

வரலட்சுமி சரத்குமார் பேசுகையில், ” சின்ன வயதில் நடித்த படம். இயக்குநர் டீகே இயக்கத்தில் வெளியான ‘யாமிருக்கே பயமே’ படத்தை பார்த்து, சிரித்து சிரித்து ரசித்திருக்கிறேன் அவரின் இயக்கத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தவுடன், முழு கதையையும் கேட்டேன், பிடித்திருந்தது. நடிக்க ஒப்புக்கொண்டேன். படப்பிடிப்பு இலங்கையில் நடைபெற்ற போது, ஒரே வாகனத்தில் நானும், ஆத்மிகாவும் தங்கி படப்பிடிப்பில் கலந்து கொண்டோம். நகைச்சுவை படங்களில் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பமாக இருந்தது அந்த ஆசை ‘காட்டேரி’ படத்தில் நிறைவேறி இருக்கிறது.” என்றார்.

நடிகர் வைபவ் பேசுகையில்,” தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா என்னிடம் பெரிய படம் செய்கிறோம் என்றார். ஆனால் இத்தனை நீண்ட காலம் ஆகும் என்று எதிர்பார்க்கவில்லை. ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தில் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய கனவாக இருந்தது. அது இந்த படத்தில் இயக்குநர் டீகே மூலம் நிறைவேறியது.  வரலட்சுமி தற்போது மெலிந்து விட்டார். அவருடைய பேச்சும் தற்போது நிதானமாக இருக்கிறது. ஆனால் படப்பிடிப்பு தொடக்கத்தில் அவர் வேகமாக பேசுவார். எனக்குப் புரியாது. அதனால் தற்போது பல விசயங்கள் மாற்றம் அடைந்திருக்கிறது. இலங்கையில் படப்பிடிப்பு நடைபெற்ற தருணத்தில் இருள் சூழ்ந்த நேரத்தில் வரலட்சுமி ஒரு அடர் மஞ்சள் நிற சேலை உடுத்தி வந்தவுடன் பயந்துவிட்டேன். ஆகஸ்ட் 5ஆம் தேதி திரையரங்குகளில் ‘காட்டேரி’ படம் வெளியாகிறது. அனைவரும் கண்டு களித்து ஆதரவு தர வேண்டும்.” என்றார்.

தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பேசுகையில், ” காட்டேரி படத்துடன் நான்காண்டு கால அனுபவம் எனக்கிருக்கிறது. என்னுடைய மனைவிக்கு பிறகு நீண்ட செய்தியை அனுப்புவது இயக்குநர் டீகே தான். அதில் ‘உங்களுக்கு நல்ல நேரமே என்னுடைய படத்தின் மூலமாகத்தான் கிடைக்கும்’ என்பது கூட இருக்கும். ஆனால் அதனை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. உண்மையை சொல்ல வேண்டுமென்றால், நல்ல நேரம் தொடங்கிய பிறகுதான் இந்த ‘காட்டேரி’ வெளியாகிறது. இந்தப் படம் இயக்குநர் டீகே மற்றும் அவரது குழுவினரின் கடுமையான உழைப்புக்கு கிடைக்கும் பெரிய வெற்றி படமாக அமையும்.  அண்மைக்காலமாக பல பேய் படங்கள் வெளியாகி, சில வெற்றியையும், சில எதிர்பாராத தோல்வியையும் அளித்தது. ஆனால் இயக்குநர் டீகே அவர்களுடைய பிரத்யேக முத்திரையுடன் தயாராகி இருக்கும் ‘காட்டேரி’ ரசிகர்களை படத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை உற்சாகமாக காண வைக்கும்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE