‘மஹாவீர்யர்’ விமர்சனம்
18ஆம் நூற்றாண்டை சேர்ந்த ஒரு மன்னன் நிகழ்கால நீதிமன்ற கூண்டில் ஏற்றப்பட்டு விசாரிக்கப்பட்டால் எப்படி இருக்கும்?
அட.. படத்தின் ஒன் லைனே ஆர்வத்தை தூண்டினால் படம் எப்படி இருக்கும்?
வாங்க பார்க்கலாம்..
ராஜா லாலுவுக்கு ஒருநாள் இரவில் திடீரென தொடர் விக்கல் ஏற்படுகிறது. என்ன வைத்தியம் பார்த்தும் அது குணமாகவில்லை. இந்நிலையில் மந்திரி ஆசிப் அலியை அழைத்து, வைத்தியமெல்லாம் இனி வேண்டாம், இந்த நாட்டிலேயே அழகான பெண் ஒருத்தியை அழைத்து வா.. அவளுடன் சில காலம் சந்தோஷமாக வாழவேண்டும் என உத்தரவிடுகிறார்.. இளம்பெண்ணை தேடி கிளம்புகிறார் மந்திரி ஆசிப் அலி. இது ஒருபக்கம் இருக்க, கிராமம் ஒன்றுக்கு வருகை தரும் சாமியார் நிவின்பாலி மீது சாமி சிலையை திருட முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகிறார். அவருக்கு எதிராக சிலர் சாட்சி சொல்ல, தனக்காக தானே வாதாடி அவர்களது சாட்சியங்களை உடைக்கிறார் நிவின்பாலி.
இந்த நேரத்தில் தான் ராஜா லாலுவின் மீது கிராமத்து ஏழைப்பெண் கொடுத்துள்ள புகார் அதே நீதிமன்றத்துக்கு வர, ராஜாவும் நீதிமன்றத்தில் ஆஜராகிறார். ராஜாவுக்காக இளம் பெண்ணை தேடிப்போன மந்திரி ஆசிப் ஆலி, கிராமத்தை சேர்ந்த அழகிய பெண்ணான தான்வியை வலுக்காட்டாயமாக இழுத்து வந்து ராஜாவிடம் ஒப்படைக்கிறார். ராஜா தன்னை துன்புறுத்தியதாக தந்தை மூலமாக நீதிமன்றத்தில் புகார் அளிக்கிறார் தான்வி,.
நிவின்பாலியின் வழக்கு சற்று நேரம் தள்ளிவைக்கப்பட்டு ராஜாவின் வழக்கு விசாரிக்கப்படுகிறது,. ராஜா எதற்காக அந்த இளம்பெண்ணை அழைத்து வரச்சொன்னேன் என்கிற உண்மையை வெளிப்படுத்துகிறார். நீதிமன்றம் அவர் சொன்ன காரணத்தை கேட்டு, அவருக்கு உதவி செய்வதற்காக அந்த இளம்பெண்ணை சித்தரவதை செய்கிறது.. நம்புங்கள்.. நீதிபதியே அப்படி செய்ய உத்தரவிடுகிறார். இதை காண பொறுக்காத சாமியார் நிவின்பாலி, இதற்கு தான் சமூகமாக தீர்வு காண்பதாக கூறுகிறார். இளம்பெண் மூலமாக ராஜாவின் பிரச்சனைக்கு அப்படி என்ன தீர்வு கிடைக்க இருக்கிறது..? அதை அந்த இளம்பெண்ணால் வழங்க முடியாமல் போனது ஏன் ? நிவின்பாலி இந்த பிரச்சனைய எப்படி கையாண்டார் என்பது க்ளைமாக்ஸ்.
மன்னர் ஆட்சி காலத்தையும், தற்போதைய காலக்கட்டத்தையும் இணைத்து இப்படத்தின் கதை எழுதப்பட்டுள்ளது. வழக்கமான சினிமாவாக இல்லாமல் முழுக்க முழுக்க வித்தியாசமான சிந்தனையோடு உருவாகியிருக்கும் இப்படம் நாட்டில் நடக்கும் பல அவலங்களை தேலூரித்திருக்கிறது. சாமியார் வேடத்தில் நடித்திருக்கும் நிவின் பாலி, நீதிமன்ற காட்சிகளில் பேசும் வசனங்கள் நம்மை வயிறு வலிக்க சிரிக்க வைக்கிறது. முதல் பாதியில் நம் கனவத்தை ஈர்க்கும் நிவின் பாலி இரண்டாம் பாதி படத்தில் ஒரு பார்வையாளராக அமர்ந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இருந்தாலும் கதையின் முக்கிய திருப்புமுனையாக அவருடைய வேடம் இருப்பது அவரது ரசிகர்களுக்கு பெரும் ஆறுதல்.மன்னராக நடித்திருக்கும் லால், அமைச்சராக நடித்திருக்கும் ஆஷிப் அலி, நீதிபதியாக நடித்திருக்கும் சித்திக் ஆகியோர் நடிப்பு நேர்த்தி.
நாயகியாக நடித்திருக்கும் ஷான்வி ஸ்ரீவத்சவா, அனைவரையும் கவரும் அழகியாக இருக்கிறார். நீதிமன்றத்தில் அரைநிர்வாணத்தில் அவர் நிற்கும் போது அவர் மீது அனுதாபம் ஏற்படுகிறது. படம் முழுவதும் நீதிமன்றத்திற்குள் நடந்தாலும் அங்கு நடக்கும் நிகழ்வுகள் சிரிப்பு சரவெடியாக இருக்கிறது. படம் நம்மை சிரிக்க வைத்தாலும் பல இடங்களில் சமூகத்தின் அவலங்களை அலசியிருப்பது சிந்திக்க வைக்கிறது.
மொத்தத்தில், அரைத்த மாவையே அரைக்காமல் முழுக்க முழுக்க வித்தியாசமான முயற்சியாக உருவாகியிருக்கும் ‘மஹாவீர்யர்’ சிரிக்க வைக்கும் சினிமாவாக மட்டும் இன்றி சிந்திக்க வைக்கும் சமூக படமாகவும் இருக்கிறது.