சுவாரஸ்ய விரும்பிகளை சிக்கவைக்கும் ‘சுழல்’ : வெப் சீரிஸ் விமர்சனம்
by : jayarani amalan
அமேசான் பிரைமில் மீண்டுமொரு சுவாரஸ்ய க்ரைம் த்ரில்லராக 8 பகுதிகளாக வெளியாகியிருக்கிறது ‘சுழல்’!
தூத்துக்குடி.. கடற்கரையோர பங்களா.. சமூக ஆர்வலர் லால் கொல்லப்பட்டு கிடக்கிறார். கையில் துப்பாக்கியுடன் ஒளிந்திருக்கும் கெளரி கிஷன் கைதுசெய்யப்படுகிறார். விசாரணை அதிகாரிகளான கதிரும் சரவணனும் கெளரி கிஷனிடம் துருவி துருவி கேள்விகள் கேட்டும்.. டைம் வேஸ்ட்! கட் பண்ணினா லாலை கொன்றது நான்தான் என வெவ்வேறு இடங்களில் 7 பெண்கள் சரணடைகிறார்கள். ராட்டினத்தில் சுற்றியதுபோல் தலை சுற்றுகிறது போலீஸுக்கு. லால் கொலைக்கான காரணம்? கொலையாளி யார்? என்ற கேள்விகளுக்கு விடை சொல்கிறது க்ளைமாக்ஸ்!
ஏற்கனவே வெளிவந்து பார்வையாளர்களை கவர்ந்த முந்தைய சுழலின் தொடர்ச்சிதான் என்றாலும் புதிதாக பார்ப்பவர்களுக்கும் குழப்பமில்லாமல் தெளிவாக பயணிக்கிறது திரைக்கதை! புஷ்கர் – காயத்ரி கதையை துளியும் சொதப்பாமல் திறமையாக இயக்கி இருக்கிறார்கள் பிரம்மா – சர்ஜுன் கே.எம்
சப் –இன்ஸ்பெக்டராக கதிர் கச்சிதம்! மிகையில்லா நடிப்பை கொடுத்து கேரக்டருக்கு சிறப்பு சேர்த்திருக்கிறார்! இன்ஸ்பெக்டர் சரவணனும் நிஜத்தில் ஒரு காவல் ஆய்வாளரின் எதார்த்த உடல்மொழி எப்படி இருக்குமோ அப்படியொரு எதார்த்தத்தை தருகிறார்.
முந்தைய சுழலில் தனது சொந்த சித்தப்பாவை போட்டுத் தள்ளிவிட்டு சிறைக்குப் போகும் ஐஸ்வர்யா ராஜேஷின் பாயிண்ட் ஆஃப் வியூ சீன்ஸ் செம! மஞ்சிமா மோகன், கயல் சந்திரன், சம்யுக்தா, மோனிஷா, ஸ்ரீஷா, அபிராமி போஸ் என ஏகப்பட்ட கேரக்டர்கள் எல்லோருமே அவரவர் பங்களிப்பில் பக்கா!
எட்டு எபிசோடில் ஒன்றுகூட சோடையில்லை. அந்த அளவுக்கு தேடுதல் வேட்டையில் வேகமெடுக்கும் திரைக்கதையின் அழுத்தம், அடுத்த என்ன என்ற ஆவலை தூண்டுகிறது!
ஆபிரக்காம் ஜோசப்பின் ஒளிப்பதிவு பிரமாத பிரமாண்டம்! குறிப்பாக கோயில் திருவிழா காட்சிகளில் அத்தனை உழைப்பை கொட்டிக் கொடுத்து படத்தின் தரத்தை உயர்த்த உதவியுள்ளார். வழக்கம்போலவே சாம்.சி.எஸ். பின்னணி இசை ‘சவுண்ட் பார்ட்டி’யாக உள்ளது. அடுத்தடுத்தப் படங்களிலாவது அடக்கி வாசித்தால் நல்லது!
க்ரைம் பின்னணியில் வழிந்தோடும் சமூக அக்கறைக்காக கதாசிரியர்களான புஷ்கர் – காயத்ரியை பாராட்டத் தோன்றுகிறது!
மொத்தத்தில் இது சுவாரஸ்ய விரும்பிகளை சிக்கவைக்கும் ‘சுழல்’!