‘அகத்தியா’ விமர்சனம்
சினிமாவில் கலை இயக்குநராக விரும்பும் ஜீவா, முதல் பட வாய்ப்புக்காகக் கடன் வாங்கி ஒரு பங்களாவை ரெடி செய்கிறார். ஷூட்டிங் வேலை நடந்து கொண்டிருக்கும்போதே ஒரு பியானோ அவர்களிடம் கிடைக்கிறது. அதை வாசிக்கத் தொடங்க, சில அமானுஷ்ய நிகழ்வுகளால் படப்பிடிப்பு நின்று போகிறது. இதனால் உடைந்த அகத்தியன், சொந்த ஊரான திருவண்ணாமலைக்குச் செல்கிறார்.
அங்கே பங்களாவை ஸ்கேரி ஹவுஸாக மாற்றி, காசு சம்பாதிக்கலாம் என்ற ஐடியாவை நாயகி ராஷி கண்ணா கொடுக்க, இம்முறை அந்த பங்களாவில் ஒரு பழைய பிலிம் ரோல் ஒன்று கிடைக்கிறது. அதில் அர்ஜுன் என்கிற சித்த மருத்துவர், 1940-ல் நடந்த கதையைச் சொல்லத் தொடங்குகிறார். அந்த கதையில் நடந்தது என்ன, நிகழ்காலத்தில் நடக்கும் அமானுஷ்யங்களுக்கும் அதற்கும் என்ன சம்பந்தம் என்பதைக் கலந்து கட்டிக் கொடுத்திருப்பதே ‘அகத்தியா’.
கதைக்குத் தேவையான நடிப்பை மிகையில்லாமல் கொடுத்திருக்கிறார் ஜீவா. ஒரு படத்தைத் தன் தோளில் சுமந்து செல்லும் திறன்மிக்க நடிகரான அவருக்கு, கதை தேர்வில் இன்னும் கூடுதல் கவனம் தேவை. பிரெஞ்சு நாட்டிலிருந்து பாண்டிச்சேரிக்கு வரும் சித்த மருத்துவராக அர்ஜுன். செயற்கையான கதாபாத்திரமாகத் தட்டுப்பட்டாலும், தன் கம்பீர நடிப்பால் அதை ரசிக்கும்படி மாற்றிவிடுகிறார். டெம்ப்ளேட் நாயகியாக வரும் ராஷி கண்ணாவுக்குப் பெரிதாக வேலையில்லை. மற்றொரு நாயகியாக நடித்துள்ள மாடில்டா, தன் கதாபாத்திரத்துக்கு நியாயம் செய்ய முயற்சி செய்திருக்கிறார்.
வில்லனாக எட்வர்ட் சோனென்ப்ளிக், சர்வாதிகாரிக்கான தோரணையுடன் மிரட்டுகிறார். வாய்ஸ் வால்யூமைக் குறைத்து, காமெடியையும் குறைத்திருக்கிறார் ஷாரா. காமெடி என்கிற பெயரில் நம் பொறுமையைச் சோதிக்கிறார் ரெடின் கிங்ஸ்லி.
யுவன் சங்கர் ராஜா இசையில் ’என் இனிய பொன்நிலாவே’ என்கிற இளையராஜா பாடலின் ரீமிக்ஸ் வெர்ஷனும், பின்னணி இசையில் பீத்தோவனின் ’பர் எல்லிஸ்’ பிஜிஎம்மும் மட்டுமே மனதில் நிற்கின்றன.
முதன்மை கதாபாத்திரங்கள் தவிர்த்து மற்ற பாத்திரங்கள் மந்திரம் போட்டதாக மறைகிறார்கள். உதாரணமாக ஜீவாவின் நண்பர்கள் கூட்டம், வில்லனுக்கு பில்டப் வர்ணனையைப் போட்டுக் காணாமல் போகும் நிழல்கள் ரவி ஆகியோரைச் சொல்லலாம்.
சித்த மருத்துவத்தைப் புகழ்வதில் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால் நம்பத்தகுந்த ஆதாரங்களோடு அதைச் சொல்வதே சிறந்தது. போகிற போக்கில் வாட்ஸ்அப் பார்வேர்டுகளை எல்லாம் அடித்து நொறுக்குவது ‘பக்’கென தூக்கிவாரி போடுகிறது.
ஒரு காட்சியில் ஏழு கோள்கள் ஒன்று சேரும் நேரத்தில் பிறந்தார் ஜீவா என்கிறார்கள், படத்தின் இறுதிக் காட்சியில் அதே நிகழ்வை 80 வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் அதிசய நிகழ்வு என்கிறார்கள். யப்பா.. இப்பவே கண்ண கட்டுதே காமெடிதான்!
சுவாரஸ்யமற்ற திரைக்கதை, ஆழமில்லாத கதாபாத்திர வடிவமைப்பு, தேவைக்கு அதிகமான லாஜிக் மீறல்கள் எனப் ‘அகத்தியா’ ரொம்ப பலவீனம்!