‘நிறம் மாறும் உலகில்’ – விமர்சனம்
உறவின் உன்னதத்தைப் புரியவைக்கும் நான்கு கதைகளின் திரை வடிவமே `நிறம் மாறும் உலகில்’.
கதை 1 :
சாதி ஆணவக் கொலையிலிருந்து தப்பி ஓடும் காதல் ஜோடிகளான ரிஷிகாந்த் – காவ்யா, மும்பை டான்களின் மோதலுகு இடையே சிக்கிக் கொள்கிறார்கள். அவர்களின் முடிவு சுபமா? சாபமா? என்பது க்ளைமாக்ஸ்.
கதை 2:
வயதான தம்பதியரான பாரதிராஜா – வடிவுக்கரசி இரண்டு மகன்களால் கைவிடப்படுகின்றனர். இறுதி நாட்களை நெருங்கும் அவர்கள், தங்களின் இளமை நாட்களை அசைபோடுகின்றனர். அவர்களின் முடிவு என்னவானது என்பது இரண்டாம் கதை.
கதை 3:
ரியோவின் அம்மாவைக் காப்பாற்ற கேன்சர் சிகிச்சைக்குப் பணம் தேவைப்படுகிறது. இந்த நிலையில், ஒரு கொலை செய்தால் பணம் கிடைக்கும் என்று உள்ளூர் தாதா சொல்கிறார். ரியோ எடுக்கும் முடிவு, மூன்றாவது கதை.
கதை 4:
உறவுக்காக ஏங்கும் ஆதரவற்ற ஆட்டோ ஓட்டுநரான சாண்டிக்குக் காதல் கைகூடுகிறது. கூடவே சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அம்மாவின் (துளசி) பாசமும் கிட்டுகிறது. இரண்டில் ஒன்றுதான் கிடைக்கும் என்றவுடன் சாண்டி என்ன முடிவெடுத்தார் என்பது நான்காம் கதை.
இந்த நான்கு கதைகளையும் சொல்லும் டிக்கெட் பரிசோதகராக யோகிபாபுவும், கதை கேட்கும் பயணியாக லவ்லினும் நடித்துள்ளனர். பெரிய வேலையில்லை என்றாலும், கொடுக்கப்பட்ட பணியைச் செய்திருக்கிறார்கள். காதலியைப் பாதுகாக்க கஷ்டப்படும் கையறுநிலையைச் சிறப்பாகக் கடத்தியிருக்கிறார் ரிஷிகாந்த். வாய் பேச முடியாத நபராக வரும் காவ்யா, சைகைகளில் உணர்வுபூர்வமான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்.
கேமியோ ரோல் என்றாலும் குறையில்லாத நடிப்பைக் கொடுத்திருக்கிறார் ஆடுகளம் நரேன். நட்டியின் நடிப்பில் செயற்கைத்தனம். பாரதிராஜாவின் நடிப்பும் மிகை நடிப்பாக மாறிப்போனது சோகம். ஏகன் – கலையரசி ஆகியோர் ஆறுதல் தருகிறார்கள்.
ரியோவும் கஷ்டப்பட்டு தனது உணர்வை திரையில் பிரதிபலிக்க முயல்கிறார். ஆட்டோ ஓட்டுநராக வரும் சாண்டி, அந்தக் கதாபாத்திரத்தை இன்னுமே சீரியஸாகக் கையாண்டிருக்கலாம்.
இசையமைப்பாளர் தேவ் பிரகாஷ் ரீகனின் பின்னணி இசை, ரிப்பீட் மோடு. பாடல்களும் ஈர்க்கவில்லை. நிறம் மாறும் கதைகளில் தேர்ந்த கேமரா கோணங்கள், ஒளியுணர்வு ஆகியவற்றைக் கொடுத்து, தங்கள் பணியைச் சிறப்பாகச் செய்திருக்கிறது மல்லிகா அர்ஜுன் – மணிகண்ட ராஜா ஒளிப்பதிவு கூட்டணி.
நான்கு கதைகளும் மனித உறவுகளின் சிக்கல்கள், சமூகப் பிரச்னைகள், தனிப்பட்ட போராட்டங்களைப் பற்றிப் பேசுகின்றன. ஆனால், அதை ஆழமாக ஆராயாமல் மேலோட்டமாகப் பேசி, கழிவிரக்கத்தை மட்டுமே கேட்டிருக்கிறார் இயக்குநர் பிரிட்டோ ஜெ.பி.
‘நிறம் மாறும் உலகில்’ நான்கு கதைகள். அதில் மனதில் நிலைக்கும் கதை ஒன்றுமில்லை!