‘கிங்ஸ்டன்’ விமர்சனம்!
தூத்துக்குடி மீனவ கிராமத்தைச் சேர்ந்த ஜி.வி.பிரகாஷ், (கிங்ஸ்டன்) சொந்தமாக ஒரு படகை வாங்க வேண்டும் என்ற ஆசையில், தாமஸுக்குக் கடல் அட்டைகளைக் கடத்தும் வேலையை செய்கிறார்.
ஒருநாள் கடற்படை இவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த, கூட்டாளிகளில் அப்பாவியாக இருக்கும் ஒருவரை இழக்கிறார் ஜி.வி.பிரகாஷ். அந்த மரணமும் அதன் மூலம் தெரியவரும் உண்மையும் ஜி.வியை உலுக்கிவிட, கடல் குறித்த மர்மங்களைக் கண்டறிய தன் நண்பர்களுடன் படகில் கிளம்புகிறான். ஜி.வியின் பயணத்தில் அடுத்தடுத்த காட்சிகளை கோர்த்தால் ‘கிங்ஸ்டன்’ ரெடி!
நல்லவரா – கெட்டவரா என்று இனம் காணமுடியாத வேடத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்துள்ளார். முழுக்கதையும் தோள்களில் தாங்கும் அளவுக்கான பாத்திரம் என்பதால் சற்றே தடுமாறியிருக்கிறார். ரோஸாக நாயகி திவ்யா பாரதி, காதல் பாத்திரமாக மட்டுமே வந்து போகாமல் கதையோடே பயணித்து சற்றே ஆறுதல்.
தாமஸாக, சபுமோன் அப்துசமத் வில்லத்தனம் ஓகே என்றாலும், அவரது பாத்திரத்திற்கான ஆழம் முழங்கால் அளவைக் கூட எட்டவில்லை. பின்கதைகளில் சாலமனாக வரும் சேத்தனும், ஸ்டீபனாக வரும் அழகம் பெருமாளும் தங்கள் பணிகளைச் சிறப்பாகவே செய்திருக்கிறார்கள்
கடலின் நடுவே நடக்கும் களேபர காட்சிகளில் இளங்கோ குமரவேல், ஆண்டனி, அருணாசலேஸ்வரன், ராஜேஷ் பாலச்சந்திரன் ஆகியோர் குறைசொல்ல முடியாத நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
கடற்கரை சூழல், மர்மமான கடல் பின்னணி, மாறி மாறி வரும் காலக்கோடு ஆகியவற்றுக்கு ஏற்ப ஒளியுணர்வைத் தந்து ஒளிப்பதிவில் ஸ்கோர் செய்திருக்கிறார் கோகுல் பெனாய்.
வேலியிடப்பட்ட கடற்கரை, படகு என்று எஸ்.எஸ்.மூர்த்தியின் கலை இயக்கம் கவனிக்க வைக்கிறது.கடற்கரை கிராமத்தை அடிப்படையாகக் கொண்டு, கடல் புனைவுத் திகிலை உருவாக்கும் அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷின் யோசனை புதுமையானது. இருப்பினும் முதல் பாதியின் கதை, கரையில் சாதாரணமாகவே நகர்கிறது.
நேர்கோட்டில் செல்லாத திரைக்கதை, உயர்ந்த லட்சியங்கள் கொண்ட எண்ணம் எல்லாம் சரியே… ஆனால் அதற்கு ஏற்ப எழுத்தில் வலு இல்லாததுதான் சிக்கலே! மேலும் தூத்துக்குடி வட்டார வழக்கோடு, சாதாரண பேச்சு வழக்கையும் சேர்த்து ஒருவாறாகக் கலந்தடித்துக் கொடுத்திருப்பது, நம் பொறுமையை வெகுவாகச் சோதிக்கும் முயற்சி.
திகில் காட்சிகள் படத்திற்கு திமிங்கல பலம். பொன் புதையலையும், கடல் பேய்களையும் ஒரு புள்ளியில் இணைத்த விதம் சிறுவர்களுக்கான கதை போல இருந்தது ஏமாற்றமே!
தொழில்நுட்ப ரீதியாகச் சிறப்பான அனுபவம், இரண்டாம் பாதியின் திகில் தருணங்கள் ஆகியவற்றைச் சிறப்பாகத் தந்தாலும், வலுவில்லாத திரைக்கதை, ஆழமில்லாத கதாபாத்திர வடிவமைப்பு ஆகியவற்றால் ‘கிங்ஸ்டன்’ சோதனை முயற்சியாகவே இருக்கிறது!