விமல் – சூரியின் காமெடி கலாட்டா ‘படவா’ : விமர்சனம்
மழை வராத கிராமம். ஊர் மக்களின் வாழ்வாதாரமாக இருப்பது செங்கல்சூளை மட்டுமே. செங்கல்சூளை முதலாளியான கேஜிஎப் ராமுவுக்கு சீமைக் கருவேல மரங்கள்தான் குலசாமி. காரணம் செங்கல்லை சுடுவதற்காக சீமைக்கருவேல மரங்கள்தான் பயன்படுத்தப்படும்.
சீமை கருவேல மரத்தின் தீமை தெரியாத ஊர் மக்களுக்கு சூளை முதலாளிதான் தெய்வம். இப்படியான அந்த ஊரில் வேலையில்லாமல் அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டி பிழைக்கும் 420கள்தான் விமலும் சூரியும். அடுத்தவன் காசை ஆட்டையை போட்டு அலப்பறை கொடுக்கும் விமலுக்கு வெட்னெரி டாக்டர் ஸ்ரீத்தா ராவ் மீது காதல். பொறுப்பற்ற தறுதலையாக சுற்றிக்கொண்டிருக்கும் விமலுக்கு திடீரென கிடைக்கிறது ஊர் தலைவர் பதவி.
பிக்காளி பய கையில் தலைவர் பொறுப்பு கிடைத்தால் என்னாகும்? இப்படி ஒரு கேள்வி படம் பார்த்துக்கொண்டிருப்பவருகளுக்கு எழும். ஆனால் நடப்பதோ வேறு. அது என்ன என்பதை திரையில் காண்க!
விமலின் டிரேட் மார்க் டெம்பிளேட் கேரக்டர்தான். இருந்தாலும் சூரியுடன் சேர்ந்து அடிக்கும் லந்தில் சிரிக்காதவர் இருக்கமுடியாது. முதல் பாதியில் வெட்டி ஆபிசராகவும் இரண்டாம் பாதியில் பொறுப்பானவருமாக மாறி மனதை தொடுகிறார்.
ரொம்ப நாளைக்கு முன் எடுக்கப்பட்ட படம். எனவே பழைய சூரியை பார்க்க முடிகிறது. படம் முழுக்க காமெடியில் தெறிக்கவிட்டுள்ளார்!
விமலின் அக்கா – மாமாவாக தேவதர்ஷினி – நமோநாராயணன் வில்லனாக கேஜிஎப் ராம் அவரவர் கேரக்டர்களுக்கு சிறப்பு சேர்த்துள்ளனர்! அந்தோ பரிதாபம் கதாநாயகிக்கான முக்கியத்துவம், விமலை கட்டிப்பிடிப்பதற்கு மட்டுமே உதவுகிறது.
ஜான் பீட்டரின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசை மட்டும் சொதப்பல். பட்ஜெட் காரணமாகவும் இருக்கலாம். ராமலிங்கத்தின் ஒளிப்பதிவும் சிறப்பு!
முதல் பாதி படம் கமர்ஜியல் ஃபார்முலாவுக்கான காமெடியாக இருந்தாலும். இரண்டாம் பாதியில் சமுக அக்கறையுடன் அனுகியிருப்பது பாராட்டுக்குரியது!
சீமைக் கருவேல அரசியலை அலுத்தமாக பேசியிருக்கும் இயக்குநர் கே.வி.நந்தாவுக்கு வாழ்த்தும் பாராட்டும்!
சமூக அக்கறையுடன் கூடிய பொழுத்துபோக்கு சித்திரம் இந்த ‘படவா’.