‘ராபர்’ விமர்சனம்
வாழ்க்கையில் நல்ல வழி பிறக்கணும் என்ற எண்ணத்தில் இருக்கும் இளைஞர்கள் கொஞ்சம் வழி மாறினாலும் வாழ்க்கை வலி நிறைந்ததாக மாறிவிடும். இந்த கருவே ‘ராபர்’ கதையாகியுள்ளது.
கிராமத்திலிருந்து சென்னைக்கு வரும் இளைஞன்தான் நாயகன் சத்யா. கால்செண்டரில் வேலைக்குச் சேரும் சத்யாவுக்குள் சொகுசு வாழ்க்கையை ருசித்து பார்க்கும் ஆசை பேய் பிடிக்கிறது. வழி பறி, திருட்டில் ஈடுபடும் சத்யாவின் ஆடம்பர போதைக்கு ஒரு உயிரே பலியாகிறது. அந்த சம்பவம், சத்யா வாழ்வை சிதைக்கிறது. அதற்குப் பிறகாவது சத்யா திருந்துகிறாரா? அவரது வாழ்வு திசை மாறுகிறதா? என்ற கேள்விகளுக்கு விடை சொல்கிறது க்ளைமாக்ஸ்!
‘யமுனா’, ‘மெட்ரோ’ என ஏற்கனவே இரண்டு படங்களில் நடித்திருக்கும் சத்யாவுக்கு இது மூன்றாவது படம். முந்தைய படங்களை காட்டிலும் நடிப்பில் முதிர்ச்சி தெரிகிறது. கைத்தேர்ந்த வழிபறி கொள்ளையர் லாவகத்தை உடல்மொழியில் காட்டுவது அவரது திறமைக்குச் சான்று!
பல படங்களில் காமெடியனாக வந்த டேனியல் போப் முதல்முறையாக வில்லன் அரிதாரம் பூசியிருக்கிறார். இனி தொடர்ந்து நெகட்டிவ் ரோல் செய்யலாம் என்ற அளவுக்கு கெட்டவன் வேஷத்தை கச்சிதமாக செய்துள்ளார்.
ஜெயிலில் இருக்கும் சென்றாயன் சத்யாவின் ஃபிளாஷ் பேக் சொல்வதுபோன்றுதான் திரைக்கதை நகர்வு இருக்கிறது. இந்த கேரக்டரில் சென்றாயன் திறம்பட செய்துள்ளார்!
சத்யாவின் தாயாக வரும் தீபா சங்கர், மகளின் கொலைக்கு காரணமானவனை போட்டுத்தள்ள துடிக்கும் தந்தையாக ஜெயபிரகாஷ் சிறப்பு!
வழிப்பறி காட்சிகளுக்கு பொருத்தமாக சென்னை புறநகர் பகுதிகளில் புகுந்து விளையாடியுள்ளது என்.எஸ்.உதயகுமாரின் ஒளிப்பதிவு.
ஜோகன் சிவனேஷின் இசையில் பாடல்கள் பெரிதாக ஈர்க்கவில்லை. பின்னணியில் திரைக்கதைக்கு ஏற்றவாறு மிரட்டி இருக்கிறார்.
‘மெட்ரோ’ படத்தின் இயக்குநரான ஆனந்த கிருஷ்ணன் கதை, திரைக்கதை எழுதியிருக்கிறார். அதை கச்சிதமாக இயக்கி இருக்கிறார் எஸ்.எம்.பாண்டி.
படத்தை தயாரித்திருக்கும் கவிதா அடிப்படையில் ஒரு பத்திரிகையாளர். எனவே சமூக அக்கறையும் இருக்கும் ஒரு பொழுதுபோக்கு சினிமாவாக ‘ராபர்’ படத்தை உருவாக்கியிருக்கிறார்.
சில குறைகள் இருந்தாலும் ‘ராபர்’ பார்க்கலாம்!