‘பெருசு’ -விமர்சனம்
சுனில் – வைபவ் இருவரும் ஊரில் மதிப்பும் மரியாதையும் பெற்ற ஹாலாஸ்யத்தின் (பெருசு) மகன்கள். ஒரு நாள் ஆற்றில் குளித்துவிட்டு வீடு திரும்பும் பெருசு, திடீரென இறந்து போகிறார். ஆனால், அவரது சடலத்தை வெளியே காட்ட முடியாத சிக்கல். இதனால் குடும்பமே அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கிறார்கள்.
மிகவும் துக்கமான நாள் அதிர்ச்சி நிறைந்த நாளாக மாற, இதைப் பெரிய அவமானமாக நினைத்து ஊர் மக்களிடமிருந்து இதை மறைக்க நினைக்கின்றனர். இந்தக் குழப்பத்துக்கு இடையே இறுதிச் சடங்கை எப்படி முடிக்கின்றனர், அந்த இறுதிச் சடங்கின்போது வெளிவரும் உண்மைகள் என்னென்ன என்பதே ‘பெருசு’ கதை.
ஆரம்பத்தில் என்ன நடக்கிறது என்றே புரியாமல் தடுமாறும் இடம், ஓரளவுக்குப் பொறுப்புணர்வு நடந்து கொள்ளும் தன்மை என அண்ணன் பாத்திரத்துக்கு நியாயம் சேர்கிறார் சுனில். குறிப்பாகத் தந்தையிடம் இறுதிவரை பேசாமலே இருந்துவிட்டதை எண்ணி குற்றவுணர்வு கொள்ளும் இடத்தில் முதிர்ச்சியான நடிப்பைக் கொடுத்து ஸ்கோர் செய்திருக்கிறார் சுனில்.
அவருக்குத் தம்பியாகக் குடிகாரராக வரும் வைபவ், (நிஜத்திலும் தம்பி) இரண்டாம் பாதியில் சிரிக்க வைத்தாலும், முதல் பாதியில் கதாபாத்திரத்தோடு ஒட்டாத செயற்கையான உணர்வையே கொடுக்கிறார். பாலசரவணன், முனீஷ்காந்த் காமெடி கூட்டணி ஆங்காங்கே சில நிமிடங்கள் கிச்சு கிச்சு மூட்டுகிறது.
கேமராவைப் பார்த்துப் பேசுவது போலவே நடித்துள்ள நிஹாரிகா நடிப்பில் இன்னும் பயிற்சி தேவை. மற்றொரு நாயகியாக வரும் சாந்தினியின் நடிப்பில் குறையேதுமில்லை. இறுதிக் காட்சியில் தனம், சுபத்ரா ஆகிய இருவரும் போட்டிப்போட்டுக் கொண்டு நடித்திருப்பது கலகலப்பு! ஒரே ஒரு வசனத்தை ‘நறுக்’கென்று பேசி கைதட்டல் வாங்குகிறார் சுவாமிநாதன். இதுதவிர ரெடின் கிங்ஸ்லி, விடிவி கணேஷ், கருணாகரன், கார்த்திகேயன் சந்தானம் வந்து போகிறார்கள்.
ஒரு சிறிய வீடு, அதற்குள் எக்கச்சக்க கதாபாத்திரங்கள் எனச் சிறிய இடத்தில், நேர்த்தியான கேமரா கோணங்கள், சிறப்பான ஒளியுணர்வைக் கொடுத்துக் கவனிக்க வைக்கிறார் ஒளிப்பதிவாளர் சத்யா திலகம். அருண்ராஜின் பின்னணி இசை நகைச்சுவை உணர்வுக்கு உதவியிருக்கிறது. ஆனால், பாடல்கள் பெரிதாக வேலை செய்யவில்லை.
ஆரம்ப காட்சியிலே நேராகக் கதைக்குள் செல்லும் திரைக்கதை நம்மையும் ஈர்த்துக் கொள்கிறது. வார்த்தை விளையாட்டு, பிரச்னையையே கேலியாக மாற்றும் அவல நகைச்சுவை ஆகிய அஸ்திரங்களை வைத்து இதை அடல்ட் காமெடியாக மாற்ற முயன்றிருக்கிறார் இயக்குநர் இளங்கோ ராம்.
பாலாஜி ஜெயராமன் வசனங்கள் கிரேஸி மோகனின் கம்பிரஸ்ட் வெர்ஷனாக ஒரு சில இடங்களில் வெடித்து சிரிக்க வைத்தாலும், ‘பாயின்ட்’, ‘மேட்டர்’ என்று பல இடத்தில் வலுக்கட்டாயமாக மட்டுமே சிரிக்கச் சொல்கிறது. குடும்ப மானத்தை அப்பாவின் மரணத்திலும் தேடும் நபர்களுக்கு, அப்பா இரண்டு மனைவிகள் வைத்திருப்பது நெருடலாகத் தெரியாதது நகைமுரண்.
திடமற்ற திரைக்கதை ‘பெருசு’வை வலுவற்றதாக காட்டுகிறது!