‘ஸ்வீட் ஹார்ட்’ – விமர்சனம்!
குடும்ப உறவுகள் மீது நம்பிக்கை இல்லாதவர் ரியோ ராஜ். காரணம் சிறுவயதில் அப்பா –அம்மாவுக்கிடையே இருந்த பிரிவு. ரியோவுக்கு நேரெதிர் குணம் உள்ளவர் நாயகி கோபிகா ரமேஷ். கருத்து முரண்பாடுகொண்ட இருவருக்குமிடையே காதல் மலர்ந்தால் என்னவாகும்? யெஸ்.. இருவரும் பிரேக்கப் செய்துகொள்ள முடிவெடுக்கும்போது கோபிகா கர்ப்பமானது தெரிய வருகிறது. இதை இருவரும் எப்படிச் சமாளிக்கப்போகிறார்கள் என்பதே அறிமுக இயக்குநர் ஸ்வினீத் எஸ்.சுகுமார் இயக்கியிருக்கும் ‘ஸ்வீட்ஹார்ட்!’.
தேவையில்லாத கோபம், ஆக்ரோஷம், கெத்து, ரொமான்ஸ், எமோஷன் எனத் தமிழ் சினிமாவில் பார்த்துப் பழகிய ஹீரோயிசம்தான் ஆனால் அதனை சரியாக செய்திருக்கிறார் ரியோ. பதற்றம், காதல், கோபம், ஆற்றாமை, அழுகை என எந்நேரமும் உணர்ச்சிகளோடு மல்லுக்கட்டும் கதாபாத்திரத்திற்குக் கச்சிதமாகப் பொருந்தி, படத்திற்குத் தூணாக நின்று வலுசேர்த்திருக்கிறார் கோபிகா ரமேஷ்.
ரீயோ ராஜின் நண்பராக வரும் அருணாச்சலேஸ்வரன், தன் உடல்மொழியாலும் கவுன்ட்டர்களாலும் படத்தின் காமெடி மோட்டருக்கு மைலேஜ் ஏற்றியிருக்கிறார். பாலாஜி சுப்பிரமணியத்தின் ஒளிப்பதிவு கலர்ஃபுல்லான, துறுதுறுப்பான முதற்பாதி திரைக்கதைக்குத் தேவையான திரைமொழியைக் கொண்டுவந்திருக்கிறது.
‘மார்டன் மேஸ்ட்ரோ’ யுவன் சங்கர் ராஜா இசையிலும், குரலிலும் ‘கதவைத் திறந்தாயே’ பாடலில் மட்டும் அவரின் ‘வைப்’பை ஓரளவிற்கு உணர முடிகிறது. க்ளைமாக்ஸ் காட்சிக்கு மட்டும் கைகொடுத்திருக்கிறது அவரின் பின்னணி இசை.
இரண்டு வெவ்வேறு குணங்களைக் கொண்ட கதாபாத்திரங்களை இணைக்கும் எமோஷனலான கதையை, கலகலப்பான திரைக்கதையாலும், பளபளப்பான திரைமொழியாலும் சொல்ல முயன்றிருக்கிறார் அறிமுக இயக்குநர் ஸ்வினீத் எஸ்.சுகுமார்.
திடீரென கதாபாத்திரங்கள் புதிது புதிதாகத் திரைக்கதையில் நுழைவதும், அவற்றின் மீது அதீத எமோஷனை ஏற்றி, திரைக்கதையின் பிரச்னைகளை ‘பைபாஸ் சர்ஜரி’ செய்ய முயன்றதும் சிறிது அயற்சியைத் தருகிறது.
திரைமொழியில் காட்டிய அக்கறை கதையின் அழுத்தத்தில் இல்லை. எனவே இந்த ‘ஸ்வீட்ஹார்ட்’டில் தித்திப்பு குறைவே.