நகரச்செய்திகள்

நிதானமா போங்க நிம்மதியா இருங்க

வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம்.

ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய ‘Police laser speed gun (police lidar)’ என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப் பயன்படுத்தி வருவதைக் காணலாம்.

இதன் மூலம் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்லும் வாகன எண்களைக் கண்டறிந்து சம்பந்தப்பட்ட நபர் மீது அபராதம் வசூலிப்பது போன்ற சட்டப்படியான நடவடிக்கை எடுக்கலாம். இதற்கான அபராதத் தொகையை ஆன்லைன் பரிவர்த்தனை மூலமாகவோ அல்லது சம்பந்தப்பட்ட நீதிமன்றத்திலோ செலுத்தலாம்.

ஆனால், நெடுஞ்சாலைகளில் செல்லும்போது வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் சென்றால் வேகம் கண்டறியப்பட்டு அதற்கான அபராதத் தொகை அடுத்துவரும் சுங்கச் சாவடியில் (Tollgate) வசூலிக்கும் நடைமுறை தற்போது தமிழகத்தில் நடைமுறையில் இல்லை. இது தொடர்பான போலியான செய்திகள் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகமாகப் பரவி வருகின்றன. இது முற்றிலும் போலியான செய்திதான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE