‘வருணன்’ விமர்சனம்
சிறிய நகரங்களில்கூட இன்றைக்கு தண்ணீர் கேன் என்பது அத்தியாவசிய தேவையாகிவிட்டது. அப்படி இருக்கும்போது சென்னையின் தண்ணீர் கேன் தேவை சொல்லி தெரியவேண்டியதில்லை. தேவை அதிகமாக இருக்கும்போது உற்பத்தியும் அதிகரிக்கும். உற்பத்தி அதிகரித்தால் போட்டியும் அதிகரிக்கும்.
அந்தவகையில் சென்னை ராயபுரம் பகுதியில் தண்ணீர் கேன் விற்பனை செய்யும் இரண்டு தரப்பினருக்கும் இடையே நடக்கும் தொழில் போட்டி; அதனால் ஏற்படும் பகை; பகையால் சந்திக்கும் பிரச்சனைகளை அலசினால் ‘வருணன்’ ரெடி!
தண்ணீர் கேன் நிறுவனம் நடத்துபவர்களாக நடித்திருக்கும் ராதாரவி – சரண்ராஜ் இருவருமே அனுபவமான நடிப்பால் தங்கள் கேரக்டர்களை பேச வைக்கின்றனர்.
நாயகன் துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ் அவரது கதாபாத்திரத்தில் ஏற்றம் இறக்கமில்லாமல் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். நாயகி கேப்ரில்லாவும் சிறப்பு. மற்றொரு நாயகன், நாயகியாக பிரியதர்ஷன் மற்றும் ஹரிபிரியாவின் நடிப்பிலும் குறையொன்றுமில்லை.
வில்லனாக சங்கர்நாக் விஜயன் வில்லத்தனத்தை சரியாக வெளிப்படுத்தியிருக்கிறார். தவிர ஜீவா ரவி, மகேஸ்வரி, அர்ஜுனா கீர்த்திவாசன், ஹைட் கார்த்தி, கெளசிக், கிரண்மயி என அனைவருமே கவனம் ஈர்க்கின்றனர்.
லைவ் லொக்கேஷன்களில் ஒளிப்பதிவாளர் ஸ்ரீராம் சந்தோஷின் காமிரா சுற்றிச்சுழன்று காட்சிகளை படமாக்கியிருப்பதற்கு பாராட்டுகள்! குறிப்பாக கிளைமாக்ஸ் சண்டைக்காட்சியை படமாக்கி விதத்திற்கு சபாஷ்!
இசையமைப்பாளர் போபோ சசி, பெரிதாக ஈர்க்கவும் இல்லை; ஏமாற்றவும் இல்லை. என்.ரமணா கோபிநாத்தின் வசனம் கவனிக்கவைக்கிறது!
படத்தின் இயக்குநர் ஜெயவேல் முருகன். நாம் முதல் பாராவில் சொன்னதுபோன்று தண்ணீர் கேன் தொழிலை அடிப்படையாக வைத்து மையமாக வைத்து திரைக்கதை அமைத்திருப்பார் என்று நினைத்தால் ஏமாற்றமே மிச்சம்! தண்ணீர் கேன் போடும் இளைஞர்களின் காதல், திருமணம், அதைச்சார்ந்து வரும் மோதல் என்று தாம்பரம் போவதற்கு தஞ்சாவூரை சுற்றி டிராவல் செய்திருப்பது சறுக்கல்!
‘வருணன்’ வறட்சி!