அசகாய சூரன் விக்ரம் அப்ளாஸ் அள்ளுகிறார் : ‘வீர தீர சூரன்’ – விமர்சனம்!
உயிர் பயம்னா என்னான்னு தெரியாதவங்களுக்குக்கூட ஈரக்குலையை நடுங்க வைக்கும் ‘வீர தீர சூரன்’, நிழல் உலகத்தின் முகத்தை நிஜத்துக்கு நெருக்கமாய் காட்டும் படம்.
மதுரை… இவர் மேல கை வச்சா உயிர் காலி என்கிற அளவுக்கு மிரட்டிக்கொண்டிருக்கும் பெரியவர் (ப்ருத்வி) குடும்பம். அப்பனுக்கு தப்பாமல் பிறந்தவராய் ப்ருத்வியின் மகன் சுராஜ் வெஞ்சரமூடு. அப்பன் – மகன் கொட்டத்தை அடக்க துடிக்கும் போலீஸ் அதிகாரி (எஸ்.பி.) எஸ்.ஜே.சூர்யா. இந்த இருவரின் பகை நெருப்பில் ப்ருத்வியின் பழைய விசுவாசியான விக்ரம் கோர்க்கப்படுகிறார்.
ஒரு காலத்தில் வெட்டுக்குத்து கொலை என்று இருந்த விக்ரம், ஒருக்கட்டத்தில் திருந்தி காதல் மனைவி துஷாரா, இரண்டு குழந்தைகளுடன் மளிகை கடை வைத்து அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். இந்த நேரத்தில்தான் போலீஸால் குறிவைக்கப்பட்ட மகனை காப்பாற்ற விக்ரமிடம் கையேந்தி காலில் விழுகிறார் ப்ருத்வி. இறங்கி வந்த பெரிய மனுசனுக்காக கடைசியா ஒருமுறை களத்தில் இறங்குகிறார் விக்ரம். பிறகுதான் தெரிகிறது எஸ்.ஜே.சூர்யா – ப்ருத்வியின் ஆடு புலி ஆட்டத்தில் தான் பலி ஆள் என்பது. இப்போ விக்ரம் போடும் ஸ்கெட்ச்தான் மிச்ச படம்.
ஒரு கேரக்டருக்காக வாழ்வதும் வறுத்திக்கொள்வதும் விக்ரமிற்கு புதிதில்லை. இம்முறை ‘வீர தீர சூரனாகவும்’ மிரட்டி இருக்கிறார். காதல் மனைவி துஷாராவிடம் சில்மிஷம் செய்யும் இடத்தில் செம கூலாக இருக்கும் விக்ரம், எதிரிகளின் சூழ்ச்சியை புரிந்து அவர்களின் குடலை உருவி மாலையாக போடும் இடத்தில் காட்டும் ருத்ரம் மிரட்டல்!
காளி என்ற கேரக்டரை நேரில் சந்தித்தால் எப்படி இருக்கும்? அப்படியொரு எதார்த்த நடிப்பில் மீண்டும் ஜொலிக்கும் சீயானின் திறமைக்கு திருஷ்டி சுற்றி போடலாம். எஸ். ஜே.சூர்யாவின் ஜீப்பை வழிமறித்து நேருக்கு நேர் சந்திக்கும் இடம் மாஸ்! போலீஸ் ஸ்டேஷனுக்குள் புகுந்து ஊரையே மிரள வைக்கும் ஒருவரை போலீஸ் கண் முன்னே வச்சு செய்யும் இடத்தில் அசகாய சூரன் சீயானுக்கு அப்ளாஸ் அள்ளுகிறது!
விக்ரம் ஒரு ஏரியாவில் மிரட்ட, இன்னொரு பக்கம், வஞ்சம், சூழ்ச்சி போலீஸின் கிறுக்கு புத்தி என எஸ்.ஜே. சூர்யாவும் தன் பங்குக்கு பொளந்துகட்டுகிறார். குறிப்பாக மூன்று சீன்களை சொல்லலாம். போலீஸ் ஸ்டேஷனில் தன்னை சந்தித்து பேசும் பெரியவரை சாப்பிட்டுக்கொண்டே மிரட்டுவது; கல்யாண மண்டபத்தில் விக்ரமுடன் தனி அறையில் பேசி, காரியம் சாதிக்க போடும் பிளான்; தன்னிடம் வசமாக சிக்கிய சுராஜிடம் “என்ன கேட்டாலும் தருவியா… என்ன கேட்டாலும் தருவியா… எனக்கு உன் அப்பன்தான் வேணும்” என்று அதட்டுவது என அமர்க்களப்படுத்துகிறார்.
யேய்.. யப்பா நடிப்பு ராட்சசி துஷாரா பிரமாதம். ரவுடிகளிடம் மாட்டிகொண்ட விக்ரமை விடச்சொல்லி பத்ரகாளியாவதும், குழந்தைகளை காப்பாற்ற தாய் பறவையாய் துடிப்பதுமாக துஷாராவின் நடிப்பு, இதயம் தொடுகிறது.
வக்கிரம் கக்கும் கண்களும் வன்மம் பொங்கும் வார்த்தைகளுமாக சுராஜ் வெஞ்சரமூடு ஸ்கோர் செய்கிறார். இவரது தந்தையாக வரும் ப்ருதிவியும் பிரமாதம்.
ஒரே இரவில் நடக்கும் கதை என்று சொல்லப்பட்டாலும் பிளாஷ் பேக் காட்சியில் இன்னொரு இரவு பொழுதும் காட்டப்படுகிறது. இரவில் நடக்கும் காட்சிகளை சம்ப இடத்தில் நாமே இருப்பது போன்ற உணர்வுகளை தரும் தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு சபாஷ்!
கதை களம், கதாபாத்திரங்களின் தன்மையை பார்வையாளர்களுக்கு கடத்தும் ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசை பிரமிப்பு. சில இடங்களில் அமைதிக்கு இடமளிப்பதும் புத்திசாலித்தனம்!
போலீசுக்கும் சுராஜ் ஆட்களுக்கும் இடையே நடக்கும் க்ளைமாக்ஸ் சண்டை காட்சியில் பீனிக்ஸ் பிரபுவின் ஸ்கெட்ச் பக்காவாக பொருந்தி இருக்கிறது.
பண்ணையாரும் பத்மினியும்’ முதல் படத்திலேயே கவனிக்க வைத்து, ‘சித்தா’ மூலம் அடுத்தக் கட்டத்திற்குப் போன இயக்குநர் எஸ்.யூ. அருண்குமார், ‘வீர தீர சூரனில்’ வேற லெவல்.
தாதா, ரவுடிகள், எண்கவுண்டர், திருந்தி வாழும் ஹீரோவை திசை மாற்றும் சூழல், ஒரே இரவில் நடக்கும் கதை என களமும் கான்செப்டும் புதிதில்லை. எனினும், திரைக்கதை வடிவம், அதை படமாக்கிய விதம், நடிகர்களை கதை மாந்தர்களாகவே மாற்றிய மேஜிக், இறுதிவரை விறுவிறு டெம்ப்பிளேட்டை மெயிண்டெயின் செய்வது என மேக்கிங்கில் பக்கா பேக்கேஜ் தந்திருப்பதால் ‘வீர தீர சூரன்’ வெரி பெஸ்ட்!