‘டெஸ்ட்’ விமர்சனம்
இந்திய கிரிக்கெட் அணியின் சூப்பர் ஸ்டார் சித்தார்த். ஒரு கட்டத்தில் ஃபார்மில் இல்லாமல் தடுமாற இந்தியா – பாகிஸ்தான் இறுதி டெஸ்ட் போட்டியுடன் அவரை ஓய்வு பெற வற்புறுத்துகிறது நிர்வாகம். அவரது பள்ளித் தோழியான நயன்தாரா, குழந்தையின்மையால் மனம் உடைந்து, தன் கணவன் மாதவனோடு கருத்தரித்தல் சிகிச்சை பெற்று வருகிறார். கிச்சைக்குப் பணம் தேவைப்படுகிறது.
அதே நேரத்தில், மனைவியிடம் கேன்டீன் நடத்துவதாகப் பொய் சொல்லி, தனது புதிய கண்டுபிடிப்பு கனவுக்காகப் பெரும் தொகையைக் கடனாக வாங்கியிருக்கிறார் விஞ்ஞானி மாதவன். அந்தக் கடன் பிரச்னை அவரை இக்கட்டான சூழலுக்கு இழுத்துச் செல்கிறது. இப்படி மூன்று கோனங்களில் விரியும் கதைக்களம் ஒரு புள்ளியில் இணைவதே ‘டெஸ்ட்’ கதை.
தோல்வியை ஒப்புக்கொள்ளாத திமிர், தந்தையின் பாசம் என வெவ்வேறு அடுக்குகளைக் கொண்ட பாத்திரத்தில் சித்தார்த். ஆரம்பத்தில் பேட்டை காற்றில் சுழற்றுவது போலத் தோன்றினாலும், இறுதியில் உணர்ச்சிகளைச் சுழற்றும் இடத்தில் பவுண்டரி அடித்திருக்கிறார். குழந்தையின் மீது பாசத்தை வெளிப்படுத்தும் காட்சிகளிலும், ஆரம்பக் காட்சிகளிலும் சற்றே சாந்தமாக யதார்த்தமான நடிப்பைக் கொடுக்கிறார் நயன்தாரா. ஆனால், போகப்போக மிகை நடிப்பு மீட்டருக்குள் சென்றது ஏனோ?! பல இடங்களில் அவரது பாத்திரம் என்ன பேச வருகிறது என்பதும் முழுமையடையவில்லை.
சாதிக்க நினைக்கும் சாதாரண மனிதனுக்கு ஏற்படும் தொடர் சோதனைகள், அதனால் உருவாகும் ஆழமான மனப்பிறழ்வு எனச் சவாலானதொரு பாத்திரத்தில் மாதவன் மிரட்டல். மாஸ்டர் லிரிஷ் ராகவ், ஆதியாக தன் பங்கை உணர்ச்சிபூர்வமாகச் செய்திருக்கிறார். தாயாக சில காட்சிகளில் மட்டுமே வரும் மீரா ஜாஸ்மின், அங்கே தனது திறமையை நேர்த்தியாகப் பதிவு செய்கிறார். காளி வெங்கட், ஆடுகளம் முருகதாஸ் ஆகியோரும் தங்கள் பங்களிப்பைச் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள்.
மைதானத்தின் பரபரப்பையும், பாத்திரங்களின் உள்ளுணர்வையும் நன்கு படம்பிடித்திருக்கிறது ஒளிப்பதிவாளர் விராஜ் சிங் கோஹிலின் கேமரா. குறிப்பாக, ஒரு டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது என்ற நம்பகத்தன்மையை உறுதி செய்து படத்திற்குப் பலம் சேர்க்கிறது.
பதற்றத்தைக் கூட்டும் வசனக் காட்சிகளில் ஒலிக்கும் அந்த கரகர பின்னணி இசையில் கவனிக்க வைக்கும் இசையமைப்பாளர் சக்தி ஸ்ரீ கோபாலன், உணர்ச்சிபூர்வமான இடங்களில் அடிக்கடி ஒரே விதமான ‘ஹம்மிங்’கைக் கொடுத்து காட்சிகளை விட்டு விலக வைக்கிறார்.
கதாபாத்திரங்களின் கட்டமைப்பு, அவர்களின் உளவியல் ரீதியான போராட்டங்கள் ஆகியவற்றை அறிமுகம் செய்த விதம் சிறப்பான தொடக்கத்தைக் கொடுக்கிறது. தன்முனைப்பு ஒரு மனிதனை எந்த எல்லைக்கு இழுத்துச் செல்கிறது என்பதை ஒரு கிரிக்கெட் போட்டியை மையமாக வைத்து சொல்லியிருக்கிறார் இயக்குநர் சஷிகாந்த்.
கடத்தல் சம்பவத்திற்குப் பிறகு, திரைக்கதை தந்திருக்க வேண்டிய சுவாரஸ்யமான திருப்பங்களும் மிஸ்ஸிங்! நிஜமாகவே ஒரு டெஸ்ட் போட்டியைப் பார்க்கும் உணர்வு மட்டுமே மிஞ்சுகிறது.
வீட்டை விட்டு ஓடிவரும் சிறுவனைத் தன் வீட்டிற்குக் கூட்டி வரும் நயன்தாரா, ஏன் போனை சார்ஜ் செய்து குழந்தையின் தாயிடம் சொல்லவில்லை, குழந்தையின் தாய் புகார் கொடுக்காமலேயே நயன்தாரா ஏன் பள்ளியில் இடைநீக்கம் செய்யப்படுகிறார் எனப் பல லாஜிக் ஓட்டைகள் எட்டிப்பார்க்கின்றன.
சுவாரஸ்யமான திரைக்கதை, கதைக்குத் தேவையான நடிப்பு ஆகியவற்றையும் பெற்றிருந்தால், இந்த ‘டெஸ்ட்’ வெற்றி பெற்றிருக்கும்.