கடலை களமாக கொண்ட ‘மண்டாடி’ : கதையின் நாயகனாக மிரட்டும் சூரி
ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மெண்ட் 16வது தயாரிப்பாக உருவாகும் படம் ’மண்டாடி’. சூரி ஹீரோவாக நடிக்கும் இப்படத்தை மதிமாறன் புகழேந்தி இயக்குகிறார்.
உணர்வும் உறுதியும் கலந்த, ஆழமான கதையுடன் கூடிய இந்த விளையாட்டு ஆக்ஷன் டிராமாவாக உருவாகும் இப்படம், எதிர்பார்ப்புகளை தூண்டும் படமாக அமையவிருக்கிறது.
“செல்ஃபி” என்ற தனது முதல் படத்தின் மூலம் பாராட்டைப் பெற்ற இயக்குநர் மதிமாறன் புகழேந்தி, இப்படத்தை பெரிய களம் மற்றும் ஆழமான உணர்வுகளை மையமாகக் கொண்டு இந்த படத்தில் களம் இறங்கி இருக்கிறார்.
இப்படத்தில் கதாநாயகனாக சூரி நடிக்கவுள்ளார். கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் தனது நடிப்புத்திறனை நிரூபித்து வரும் அவர், இப்படத்தினால் மேலும் அடுத்த கட்டத்தை நோக்கிச் செல்வார். இப்படத்தின் மூலம் தெலுங்கு நடிகர் சுஹாஸ் தமிழ் திரையுலகில் அறிமுகமாகிறார், இதனால் படம் தெற்கிந்தியாவில் பரந்த வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.கதா நாயகியாக மஹிமா நம்பியார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
சத்யராஜ், ரவீந்திரா விஜய், அசுத் குமார், சாச்சனா நமிதாஸ் ஆகியோர் தங்களது திறமையான நடிப்பின் மூலம் உணர்வுப்பூர்வான இந்த கதைக்கு பலமளிக்க போகின்றனர்.
இயக்குநர் மதிமாறன் புகழேந்தி படத்தை பற்றி கூறியதாவது:
“ எனது கனவைப் புரிந்து கொண்டு, என் கதையை கேட்பதற்கு, இந்த வாய்ப்பை அளித்த எல்ரெட் சார் மற்றும் வெற்றிமாறன் சார்க்கு நான் மனமார்ந்த நன்றி தெரிவிக்கிறேன். சூரி sir ன் காமெடியன் to கதாநாயகன் நடிப்பு என்னை வெகுவாக கவர்ந்தது. அவருக்கென்று எழுதப்பட்ட இந்த கதாபாத்திரம் எனக்கே நெகிழ்ச்சியாக இருந்தது. சூரி சாரின் விஷன் மற்றும் அவர் கதை தேர்ந்தெடுக்கும் விதம் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ‘மண்டாடி’ திரைப்படம் அவருடைய நடிப்பு வாழ்க்கையில் ஒரு முக்கியமான படியாக அமையும். மேலும் இந்த கதையில் வரும் கதாபாத்திரத்திற்கு வெறும் நடிப்பு மட்டும் போதாது. கூடவே ஒரு நடிகரின் உடல் மற்றும் மன வலிமையும் அதிகம் தேவைப்பட்டது — அதை சூரி போன்றவர்களால் மட்டுமே பூர்த்தி செய்ய முடியும்.
வெற்றிமாறன் சார் படத்தின் கிரியேட்டிவ் புரொட்யூசராக இருக்கின்றது எனக்கு ஒரு ஊக்கமும் வழிகாட்டுதலுமாக இருக்கிறது. ஜி.வி. பிரகாஷ் இசையும், எஸ்.ஆர். கதிர் அவர்களின் ஒளிப்பதிவும் சேர்ந்து, உண்மையான உணர்வுகளைத் தரும் விளையாட்டு ஆக்ஷன் படமாக உருவாகிக்கொண்டு வருகிறது.” என்றார்