“வலிகளை மறைத்து வாழும் ஈழத்தமிழர்கள்” : ‘டூரிட் ஃபேமிலி’ சொல்லும் கதை
அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ (Tourist Family). குடும்பத் தலைவனாக சசிகுமார் நடிக்க, சிம்ரன், ‘ஆவேசம்’ படத்தில் நடித்த மிதுன் ஜெய் சங்கர் மற்றும் யோகி பாபு, கமலேஷ், எம். எஸ்.பாஸ்கர், ரமேஷ் திலக், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். மே 1-ம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது.
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியைச் சமாளிக்க முடியாமல் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இலங்கையின் வல்வெட்டித்துறையிலிருந்து சென்னையில் குடியேறுகிறது ஈழத் தமிழர்கள் குடும்பம். அந்த ஏரியாவே விரும்பும் ஓர் குடும்பமாக எப்படி மாறுகிறோம் என்பதுதான் கதை. ஈழத் தமிழர்கள் என்றால் அவர்கள் பட்ட கஷ்டத்தையும் வலியையும் பற்றித்தான் பேசுவார்கள். அவர்களின் கஷ்டத்தை எவ்வளவு தூரம் சந்தோஷமாக மாற்றிக்கொண்டு வாழ்கிறார்கள் என்பதைப் பற்றியாதாக இக்கதைக்களம் அமைந்திருக்கிறது.
இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. நிகழ்வில் நடிகர் சசிகுமார் பேசியதாவது:-
“இந்தக் கதையை எந்தவித மாற்றமும் செய்யாமல் அப்படியே எடுத்திருக்கிறோம். அந்த அளவிற்கு கதை சிறப்பாக, கச்சிதமாக எழுதப்பட்டிருந்தது. கதையை கேட்டு சிம்ரன் மேடம் உடனே ஓகே சொன்னார்.
ஈழத்தமிழர்கள் குடும்பம் இலங்கையிலிருந்து வந்து சென்னையில் எப்படி வலிகளை மறைத்து, சந்தோஷமாக வாழ்கிறார்கள் என்பதுதான் கதை. உலகத்தில் இருக்கும் எல்லா ஈழத் தமிழர்களுக்கும் இப்படத்தைப் பார்த்து ஆங்கிலம் கற்றுக் கொள்ளும் அதேநேரம் நம் குழந்தைகள் நம் தாய்மொழித் தமிழைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். ஜாலியாக, காமடியாக நிறைய நல்ல விஷயங்களைப் பற்றி பேசுகிறது இப்படம். அன்பைப் போதிக்கிறது இப்படம். சிரிச்சிட்டே, கருத்துள்ள இந்த நல்ல படத்தைப் பாருங்கள்.
இலங்கையிலிருந்து இங்கு வந்து அகதிகளாக வழும் ஈழத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்குவதில் நிறைய சிக்கல்கள் இருக்கின்றன. அவர்கள் நம் மக்கள், நம் நாட்டில் அகதிகளாக இருக்கும் அவர்களுக்கு குடியுரிமை வழங்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்படத்தில் அதையும் பேசியிருக்கிறோம். இப்படத்தைப் பார்த்த பிறகு அரசு முன்வந்து அவர்களுக்குக் குடியுரிமை வழங்கினால் அது மிகவும் சந்தோஷமாக இருக்கும். அதுவே இப்படத்தின் வெற்றியாகவும் இருக்கும்” என்று பேசியிருக்கிறார்.