திரை விமர்சனம்

பிஞ்சு மனதில் நஞ்சை விதைக்கும் கரு ‘வல்லமை’ – விமர்சனம்

சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் செய்திகளை அன்றாடம் பார்த்துக்கொண்டும் கேட்டுக்கொண்டும்தான் இருக்கிறது இந்த உலகம். அந்த பாதகச் செயல்களை செய்பவர்களை அவ்வளவு எளிதாக விட்டுவிடக்கூடாது. அந்த மனித மிருகங்களை வேரறுப்பது ஒன்றே இதற்கான தீர்வு என்பதை சொல்ல வருகிறது ‘வல்லமை’.

கதை என்ன?

அம்மா இல்லாத மகளை நன்றாக வளர்த்து, படிக்கவைத்து ஆளாக்க வேண்டும் என்ற ஆசையில் கிராமத்திலிருந்து சென்னைக்கு வருகிறார் பிரேம்ஜி. அவரது மகள்தான் திவாதர்ஷினி. பணம் காசு இல்லாட்டியும் பாசம் -அன்பு என்று குட்டி உலகத்தையே சொர்க்கமாக நினைக்கும் அப்பா –மகளுக்கு இடியாய் இறங்குகிறது ஒரு சம்பவம். திவாதர்ஷினி அறியாமலேயே அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார். இது தெரிந்ததும் செய்வதறியாது திகைக்கிறார் பிரேம்ஜி. ”அந்த தப்ப செஞ்சவனை கொன்னுடுவோம் ப்பா” என்று மகளே பொங்கி எழ, குற்றவாளியை தேடுகிறார் பிரேம்ஜி. அந்த குற்றவாளி யார்? அவனுக்கு பிரேம்ஜி தரும் தண்டனை என்ன? என்பதே கதை.

கான்செப்ட் என்னவோ சரிதான். ஆனால் அதை திரைக்கதை ஆக்கிய விஷயத்திலும் திரைவடிவமாக்கிய விஷயத்திலும் கோட்டை விட்டிருக்கிறார் இயக்குநர் கருப்பையா முருகன்.

பிஞ்சு மனதில் நஞ்சை விதைக்கக்கூடிய கருவை யோசிக்க எப்படித்தான் மனது வந்ததோ?

கேரக்டரின் தன்மை உணர்ந்து நடிக்க தவறி இருக்கிறார் வெங்கட்பிரபு. சீரியஸ் இடங்களிலும் பிரேம்ஜியின் உடல்மொழி காமெடியாகத்தான் இருக்கிறது. சரி அவருக்கு வருவதை மட்டும்தானே அவரால் செய்ய முடியும். சண்டை காட்சிகளில் பிரேம்ஜியின் ஆக்‌ஷனை பார்க்க பார்க்க சிரிப்புதான் வருது. இயக்குநர் நடிப்பில் பெண்டு நிமிர்த்தியும் அது சாத்தியமாகவில்லை என்பதுபோல கூண் போட்டே இருக்கிறார்.

சிறுமி திவாதர்ஷினிக்கு வாழ்த்துகள்! மற்ற கதாபாத்திரங்கள் எல்லோருமே நாடகத்தில் வருவதுபோல் வந்து செல்கிறார்கள்.

டெக்னிக்கல் விஷயமெல்லாம் இருக்கட்டும் சார்… படமாக்க எடுத்துக்கொண்ட கருவே இடிக்குது என்பதால் தொழில்நுட்ப கலைஞர்களின் திறமையை கவனிக்க முடியவில்லை!

மொத்தத்தில் படத்தில் ’வல்லமை’ இல்லை என்ற வருத்தமே மிஞ்சுகிறது!

Casting : Premgi, Dhivadarshini, Deepa Shankar, Valakku en Muthuraman, CR Rajith, Supergood Subramani, Subramanian Madhavan, Vidhu, Poraali Dileepan

Directed By : Karuppaiya Murugan Music By : GKV    Produced By : Battlers Cinema – Karuppaiya Murugan

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE