திரை விமர்சனம்

வன்முறையின் வால் பிடித்துச் செல்லும் இயக்குநர்களுக்கு மத்தியில்.. ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ – விமர்சனம்

சக மனிதனிடம் பரஸ்பரம் அன்பை பகிர்ந்தாலே வாழும் வாழ்க்கை சொர்க்கமாகும் என்ற சிந்தனையை  மனதின் ஆழம் தொட்டு விதைக்கும் படம் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’.

கதை என்ன?

ஈழத்தை பூர்வீகமாக கொண்ட சசிக்குமார், அங்கு ஏற்படும் பொருளாதார நெருக்கடியால் பிழைப்பதற்காக குடும்பத்துடன் அகதியாக ராமேஸ்வரம் வருகிறார். பிறகு சென்னைக்கு வந்து மைத்துனர் யோகிபாபு உதவியுடன் ஒரு வீடு எடுத்து தங்குகிறார்கள்.

கொஞ்ச நாளிலேயே அந்தப்பகுதி மக்களுடன் சசிக்குமார் குடும்பம் உறவாக மாறிப்போகிறது. வாழ்வின் வசந்தம் வீசும் நேரத்தில் ராமேஸ்வரம் குண்டுவெடிப்பு சம்பவம், சசிக்குமார் குடும்பத்துடன் முடிச்சுப் போடுகிறது. சசிக்குமார் குடும்பத்தின் அடுத்த அத்தியாயம் ஒளியா? இருளா? என்பதற்கு விடை சொல்கிறது கலங்கடிக்கும் க்ளைமாக்ஸ்.

குத்து வெட்டு, வன்முறை, கவர்ச்சி உள்ளிட்ட கன்றாவிகள் தலைவிரித்தாடும் நிகழ்கால சினிமா ஓட்டத்தில் அத்தி பூத்தாற்போல அன்பை போதிக்கும் ஒரு கதையை மலர்த்தியுள்ளதற்காக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்தின் கரம் குலுக்கி வாழ்த்துவது கட்டாயமாகிறது.

‘அயோத்தியா’ படத்திற்கு பிறகு மீண்டும் சசிக்குமாருக்கு இதயம் தொடும் கதாபாத்திரம். கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் இறக்கி வைக்கும் ஹீரோக்களுக்கு மத்தியில் சசிக்குமார் இதுபோன்ற கேரக்டரை தேர்வு செய்து நடிப்பதே சாலச்சிறந்தது.

முன்பின் தெரியாத ஜீவன்களுக்காக இரங்குவது, மனைவியின் தேவைகளை பூர்த்தி செய்யாத இயலாமையை வெளிப்படுத்துவது, எக்காரணம் கொண்டும் நேர்மையிலிருந்து நழுவிடக்கூடாது என்ற உறுதி, தன்னுடன் பேசாமல் இருக்கும் மூத்த மகனிடம் பேச ஏங்குவது என இயல்பான நடிப்பால் ஈர்க்கும் சசிக்குமாருக்கு சபாஷ்.

சசிக்குமார் மனைவியாக சிம்ரன். எளிய குடும்பத் தலைவி கேரக்டரில் அற்புதமாய் பொருத்திக்கொண்டதற்காகவே பாராட்டலாம். சசிக்குமாரின் மூத்த மகனாக வரும் மிதுன் ஜெய் சங்கர் அத்தனை இயல்பு. அப்பாவிடம் பேசாத பின்னணி சொல்லும் இடத்தில் கலங்கடிக்கிறார். அந்தக் காட்சியில் கைக்குட்டை நனைகிறது.

இளைய மகனாக கமலேஷ் கலக்கி இருக்கிறார். ஆசிரியரிடம் லிஃப்ட் கேட்டு போவது, அப்பா – அண்ணனுக்கு இடையேயான இறுக்கமான தருணத்தை ஆட்டம் போட்டு மாற்றுவது என கமலேஷ் நடிப்பு ஜாலிபாப்!

சிம்ரனின் அண்ணனாக யோகிபாபு வரும் காட்சிகள் குறைவென்றாலும் தனது இருப்பை கச்சிதமாகவே நிரப்பி இருக்கிறார்.

ஏமாளி இன்ஸ்பெக்டராக பக்த், காதலில் ஏமாறும் அவரது மகள், முதுமையிலும் காதலை பறிமாறிக்கொள்ளும் குமரவேல், ஸ்ரீஜாரவி, யாராக இருந்தாலும் சமமாக நடத்தவேண்டும் என்ற குணம் கொண்ட எம்.எஸ்.பாஸ்கர், நேர்மையும் நேர்மறை சிந்தனையும் கொண்ட போலீஸ் ஏட்டாக ரமேஷ் திலக், எரிச்சலை உமிழும் போலீஸ் கமிஷனர் என படம் நெடுக சந்திக்கும் கதாபாத்திரங்கள் அனைத்துமே சிறப்பு.

ஷான் ரோல்டனின் இசையில் மாண்டேஜ் பாடல்கள் மனசை பிசைகின்றன. பின்னணியிலும் அடக்கி வாசித்திருப்பது அருமை. அரவிந்த் விஸ்வநாதனின் ஒளிப்பதிவு நிஜத்துக்கு நெருக்கமாக இருந்து படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.

நிறைய இடங்களில் வசனம் ஒரு கதாபாத்திரமாகவே நின்று கம்பீரம் சேர்த்துள்ளது. உதாரணத்திற்கு…  “ஒருத்தன் பின்னாடி கூட்டம் கூடுதுன்னா ஒன்னு பணமா இருக்கணும் இல்ல பவரா இருக்கணும்..இது எதுவுமே இல்லாம கூடுதுன்னா!?”,  “ஏன்னா நீ ஏற்கனவே கடல் கடந்துதான் வந்திருக்க”,  “நாங்க அந்த தமிழ்ல பேசுறது தப்பா.. இல்ல தமிழ்ல பேசுறதே தப்பா?” இப்படி நிறைய சொல்லலாம்.

இந்த பூமியில் தொடர்ந்து துளிர்விட்டுக்கொண்டேதான் இருக்கிறது மனிதநேயம். என்பதை உணர்த்தும் அந்த தேவாலய உரையாடல் காட்சிகளில் கண்கள் நதியாகிறது.

மன முதிர்ச்சிக்கும் வயதிற்கும் தொடர்பே இல்லை என்பதை மீண்டும் நிருபித்திருக்கிறார் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த். வன்முறையின் வால் பிடித்துச் செல்லும் இயக்குநர்களுக்கு மத்தியில்   மனிதத்தின் நூல் பிடித்து நெய்துள்ள கதையை செய்திருக்கிறார்.

லாஜிக் சறுக்கல், முதல் பாதி படத்தில் கோர்வையற்ற காட்சி அமைப்புகள் என குறைகள் இருந்தாலும் படம் போதிக்கும் செய்திக்காகவே ‘டூரிஸ்ட் ஃபேமிலியை’ குடும்பங்கள் கொண்டாடும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE