‘ரெட்ரோ’ – விமர்சனம்
சிறுவனாக இருக்கும்போதே எதிரில் மல்லுக்கு நிற்பவர்களை உரித்து உப்புக்கண்டம் போடும் சூர்யா, பெரியவன் ஆனதும் எமனே வந்தாலும் அவனுக்கே சங்கு ஊதும் அளவிற்கு வளர்கிறார். பூஜா ஹெக்டேவுடன் பூக்கும் காதலால் ”இனி கத்தி இல்லை ரத்தம் இல்லை காதல் மட்டுமே” என்று சத்தியம் செய்யும் சூர்யாவுக்கும் பூஜாவுக்கும் ஒரு நல்ல நாளில் திருமண ஏற்பாடு நடக்கிறது.
அங்கதான் ஆரம்பமாகிறது ஏழரை… “ஆப்பிரிக்காவுக்கு கடத்தப்பட்ட தங்க மீன்கள் இருக்கும் இடத்தை சொல்லலைனா உன் பொண்டாட்டி உசுரு இருக்காது” என வளர்ப்பு தந்தையான ஜோஜு ஜார்ஜ் வம்பு செய்கிறார். காதலிக்காக மீண்டும் கத்தி எடுக்கிறார் சூர்யா. இதனால் சூர்யாவை விட்டு பிரிகிறார் பூஜா. காணாமல் போன காதலி அந்தமானில் இருக்கும் தகவல் கிடைக்க, அங்கே போகும் சூர்யா சந்திக்கும் புதிய சிக்கலே மிச்ச கதை.
ஆக்ஷன் – காதல் மிக்ஸிங்கில் மீண்டும் சூர்யா. 50 பேர் வந்தாலும் அவர்களை போட்டு பொளக்கும் புஜ பலம் கொண்டவராக சண்டை ப்ரியர்களுக்கு சரியான தீனி போடுகிறார். சிரிப்பே எட்டிப் பார்க்காத தனது முகத்தை கண்ணாடியில் பார்த்து சிரிப்பின் தடம் தேடும் இடத்தில் பிரமாதம். கதை அந்தமானுக்கு தாவும் காட்சிகளில் ஒரு பக்கம் பூஜாவை துரத்தி துரத்தி ”திருந்திட்டேன் ருக்கு” என்று ஏங்குவது; காதலியை டார்லிங் என்று சொன்ன வில்லனை வர்மத்தில் சூரணம் செய்வது; ‘கிளாடியேட்டர்’ ஸ்டைலில் இருக்கும் களத்தில் புலியென பாய்ந்து பந்தாடுவது என நிறையவே உழைத்திருக்கிறார் சூர்யா.
பூஜா ஹெக்டேவுக்கு வழக்கமான ஹீரோயின் வேலை. சில இடங்களில் மின்னும் பூஜாவின் அழகு சில இடங்களில் டல்லடிப்பது ஏனோ?..
வளர்த்த மகனிடமே தொழிற் சண்டை செய்யும் தந்தையாக ஜோஜு ஜார்ஜும் வழக்கமான வில்லனாக வந்து போகிறார். அந்தமான் தீவை அரசாட்சி செய்யும் வில்லன்களாக விது, நாசர், ஜோஜு ஜார்ஜஜையே நடுங்க வைக்கும் அரசியல் செல்வாக்குள்ள பிரகாஷ்ராஜ் என மற்ற பெரிய நடிகர்களுக்கான பங்கும் படத்தில் குறைவாகவே இருக்கிறது.
சிரிப்பு டாக்டராக வரும் ஜெயராம் ஓபனிங் சீனில் சிறப்பு சேர்த்தாலும் அதற்கு பிந்தைய காட்சிகளில் பெரிய வேலை எதுவுமின்றி பேசாமல் இருக்கிறார். பூஜாவின் தந்தையாக சிங்கம்புலி, அந்தமானில் சூர்யாவுடன் ஒன்றிரண்டு சீன் ஒட்டிக்கொண்டு காணாமல் போகும் கருணாகரன் ஆகிய கதாபாத்திரங்கள் ஏனென்றே புரியவில்லை. சூர்யாவின் வளர்ப்பு தாயாக ‘லப்பர் பந்து’ சுவாசிகாவும் சரியாக பயன்படுத்தப்படவில்லை.
ஏற்கனவே ஹிட்டடித்த ‘கனிமா’ பாடல் படத்தின் முக்கியத்துவமாகவும் அமைந்துள்ளது. பின்னணி இசையிலும் சந்தோஷ் நாராயணன் சிறப்பான பங்களிப்பை செய்திருக்கிறார்.
ஸ்ரேயாஸ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவில் அத்தனை உழைப்பு. குறிப்பாக திருமண மண்டப காட்சி, அந்தமான் சண்டை காட்சிகளை சொல்லலாம். அதேபோல் கலை இயக்குநர்களில் கைவண்ணமும் படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.
‘ஏழாம் அறிவு‘, ‘கங்குவா’, ‘கிளாடியேட்டர்’ காக்டெயிலில் அமைந்த கதையாக ‘ரெட்ரோ’வை இயக்கி இருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். காட்சி அமைப்புகளில் அதனை பிரமாண்டமாக பந்தி வைப்பதில் காட்டியிருக்கும் அக்கறையை திரைக்கதையிலும் தெளித்திருந்தால் ‘ரெட்ரோ’ கூடுதல் திருப்தியை கொடுத்திருக்கும்.