‘ஹிட்3’ – விமர்சனம்
காவல் துறையில் சிறப்பு பிரிவு போலீஸ் அதிகாரிடான நானி, கொடூரமான கொலை வழக்கை விசாரிக்க காஷ்மீருக்குச் செல்கிறார். அது ஒரு கொலை மட்டுமல்ல, நாடு முழுவதும் ஒரே மாதிரியாக 13 கொலைகள் நடந்திருக்கின்றன என்பதைக் கண்டறிகிறார்.
அங்கிருந்து டார்க் வெப் என்கிற இருண்ட வலைப்பின்னல்களுக்குப் பின்னால் ஒரு குற்றக் கும்பல் இருப்பது தெரிகிறது. அர்ஜுன் இந்த மர்மத்தை எப்படி அவிழ்கிறார் என்பதே HIT 3 படத்தின் கதை.
ஆக்ஷன், காதல், உடல் மொழி, வசன உச்சரிப்பு என்று ஒரு பக்கா மாஸ் ஹீரோவாகப் படத்தின் தூணாக மாறியிருக்கிறார் நானி.ஆக்ஷன் காட்சிகளில் திரையில் கத்தி, துப்பாக்கி என்று பப்ஜி விளையாடியிருக்கிறார். ஆரம்பத்தில் காதல் நாயகியாக வரும் ஸ்ரீநிதி ஷெட்டி, இரண்டாம் பாதியில் சில ஆக்ஷன் காட்சிகளில் ஆச்சரியப்படுத்தினாலும், ஒட்டுமொத்த கதையில் அலங்காரப் பொருளாகவே இருக்கிறார்.
வில்லனாக வரும் பிரதீக் பப்பரின் கதாபாத்திரம் பின்னப்பட்ட அளவுக்கு அவரது நடிப்பு மிரட்டவில்லை.இதுதவிர, ராவ் ரமேஷ், சமுத்திரக்கனி ஆகியோர் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட திரைநேரத்தில் சிறப்பான பங்களிப்பைச் செய்கிறார்கள்.
காஷ்மீரின் இயற்கை அழகையும், ஆக்ஷனின் தீவிரத்தையும் அழகாகப் படம்பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சானு ஜான் வர்கீஸ். குறிப்பாக, பாழடைந்த பங்களாவுக்குள் கொலை விளையாட்டுகள் விளையாடும் பாணியிலான செட் டிசைன்கள் விஷுவலாக மிரட்டுகின்றன.
மிக்கி ஜே. மேயரின் பின்னணி இசை முதல் பாதியில் சுமாராக இருந்தாலும், இரண்டாம் பாதியில் ஆக்ஷன் காட்சிகளுக்கு உயிர் கொடுக்கிறது.
அதேபோல, பாடல்கள் நன்றாக இருந்தாலும், திரைக்கதைக்கு வேகத்தடைகளே.படத்தொகுப்பாளர் கார்த்திகா ஸ்ரீநிவாஸ் காதல் காட்சிகளையும், சில ஆக்ஷன் பகுதிகளையும் இன்னும் குறைத்திருக்கலாம்.
இருப்பினும், ஒளிப்பதிவு கோணங்களைச் சிறப்பாகவே தேர்வு செய்திருக்கிறார். அது ஆக்ஷன் காட்சிகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இருண்ட வலைகளில் பின்னப்பட்ட மர்மமான வழக்கின் பாதை நம்மைக் கட்டிப்போட்டே வைத்திருக்கிறது.நானிக்கு ஆங்காங்கே வைக்கப்பட்ட வசனங்கள் பட்டாசாகத் திரையரங்கில் வெடித்திருக்கின்றன. குறிப்பாக அவரது திரைத்துறை என்ட்ரி குறித்த ரெபரென்ஸ்களுக்கு விசில் பறக்கிறது.
ஹாலிவுட் படங்களான ஜான் விக், ஸ்க்விட் கேம், ராங் டர்ன் போன்ற படங்களின் தாக்கம் அதீத வன்முறைக் காட்சிகளில் வெளிப்படுகிறது.
கிளைமாக்ஸில் வரும் ஆக்ஷன் காட்சிகளும், கேமியோக்களும் ரசிகர்களுக்கு ஒரு உற்சாக மொமென்ட் கொடுத்து வழியனுப்புகின்றன.