‘பொய்க்கால் குதிரை’ திரை விமர்சனம்
‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ போன்ற படங்களை இயக்கி ‘ஏ’டாகூட விமர்சனங்களை சந்தித்த சந்தோஷ் பி .ஜெயக்குமார், நான் திருந்திட்டேன் மக்களே என்று சொல்வதுபோல ஆபாசமற்ற ஒரு பாசத் தந்தையின் கதையை சொல்லியிருக்கிறார்.
விபத்தொன்றில் ஒரு காலையும் அன்பு மனைவியையும் இழக்கும் பிரபுதேவாவுக்கு உலகமே தனது மகள்தான். அப்படிப்பட்ட மகள் திடீரென இதய கோளாறினால் பாதிக்கப்படுவதும் ஆபரேஷனுக்கு 70 லட்சம் ஆகும் என மருத்துவமனை அடுத்த அதிர்ச்சியை தருவதும் பிரபுதேவவை நிலைகுழைய வைக்கிறது.
உயிருக்குப் போராடும் மகளை காப்பாற்ற தொழிலதிபரான வரலட்சுமியின் குழந்தையை கடத்தி பணம் பறிக்க திட்டமிடுகிறார். இதற்காக தனது நண்பன் ஜெகனுடன் சேர்ந்து கடத்தலுக்கு நாள் குறிக்கிறார். திட்டமிட்ட நாளில் கடத்தலுக்கு தயாராக, வரலட்சுமியின் குழந்தை வேறு யாராலோ கடத்தப்படுகிறார். அதே சமயத்தில் மருத்துவமனையில் இருந்த பிரபுதேவாவின் மகளும் கடத்தப்படுகிறார். அடுத்தடுத்த பிரச்சினைகளில் சிக்கும் பிரபுதேவா அதிலிருந்து மீள்கிறாரா? கடத்தப்பட்ட குழந்தைகளை மீட்கிறாரா என்பதே கதை.
படத்தில் முக்கால்வாசி நேரம் ஒற்றை காலிலேயே வரும் பிரபுதேவா நிறையவே சிரமப்பட்டிருக்கிறார். தனது கால் வலியை முகத்தில் கடத்தாமல் அந்தந்த சூழ்நிலைக்கு ஏற்ற பாவனைகளை வெளிப்படுத்தி வெல்டன் போட வைக்கிறார். பேருந்துக்குள் சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபடும் ரவுடிகளை ரண்டு கட்டி அடிப்பது, ஒற்றை காலிலேயே நடனமாடுவது என பிரபுதேவாவின் கடும் உழைப்பிற்காகவே அடிக்கலாம் ஒரு விசில்.
தொழிலதிபராக வரும் வரலட்சுமி, குழந்தை கடத்தப்பட்டதால் கொதித்தெழுந்து பிரபுதேவாவை கட்டி வைத்து உரித்தெடுக்கும்போது டெரர். அது இருக்கட்டும் தமிழ் பெண்ணான உங்களுக்கு இன்னும் தமிழ் தத்துபித்தாக இருப்பது ஏன்? நல்லா பேச முயற்சி பண்ணுங்கம்மா..
வருவின் கணவராக வரும் ஜான் கொக்கென் கொடுத்த சம்பளத்தைவிட அதிகமாகவே நடிக்கிறார். பிரபுதேவாவின் நண்பனாக வரும் ஜெகன் வழக்கம்போலவே ந(க)டித்திருக்கிறார். க்ளைமாக்ஸில் நெஞ்சில் துப்பாக்கி குண்டு துளைத்தும் பிரபுதேவா பத்து நிமிஷம் டயலாக் பேசுவதெல்லாம் ஓவர் சாரே..
ஆமா இயக்குனரே.. பிரபுதேவா காலை இழந்ததுபோல்தான் கதை இருக்கணும் என்று என்ன கட்டாயம் வந்தது? அப்புறம் அந்த சஸ்பென்செல்லாம் ஈஸியா ஓபன் ஆகிடுது பாஸ்.
டி. இமான் இசையில் ‘செல்லமே..’ பாட்டு சித் ஸ்ரீராம் குரலில் திரும்ப திரும்ப கேட்கத்தூண்டுகிறது. குறைகள் இருந்தாலும் ஆபாச டிராக்கிலிருந்து மாறுபட்ட தளத்தில் கதை செய்ய தொடங்கியிருக்கும் இயக்குனருக்கு பாராட்டுகள்.
‘பொய்க்கால் குதிரை’ வலுவற்ற திரைக்கதையால் கொஞ்சம் நொண்டுகிறது.