‘கஜானா’ – விமர்சனம்
நாகமலை. இங்கு இருக்கும் விலை மதிப்பற்ற பொக்கிஷத்தை எடுக்க முயற்சிப்பவர்களுக்கு பரலோகம்தான் கதி. ஆனாலும் ஆசை யாரை விடும்? நாயகன் இனிகோ பிரபாகரும் தனது பங்குக்கு நாகமலைக்கு செல்கிறார். அங்கு அவருடன் சென்றவர்கள் மர்மமாக கொல்லப்படுகின்றனர். இதில் மிஞ்சம் இனிகோ சந்திக்கும் பிரச்சனைகளே கதை.
தமிழ் சினிமாவின் அட்வெஞ்சர் படங்கள் வருவது என்பதே மிக அரிதானது, அதில் அட்வெஞ்சர் உடன் ஃபேண்டஸி மற்றும் பிரமாண்டமான வி.எப்.எக்ஸ் காட்சிகளுடன் வெளியாகியிருக்கும் ‘கஜானா’ புதிய அனுபவத்தை கொடுக்கிறது.
யானை, புலி, குரங்குகளுடனான சண்டைக்காட்சி, பாம்பு என பலவித விலங்குகளை வி.எப்.எக்ஸ் மூலம் மிரட்டலாக காட்சிப்படுத்தியிருப்பதோடு, இறுதியில் யாளி விலங்கை திரையில் தோன்ற வைத்து வியக்க வைத்திருக்கிறார்.
படத்தின் நாயகன் இனிகோ பிரபாகர் என்றாலும் ஏதோ வேண்டா வெறுப்பாக நடித்ததுபோல நடித்துள்ளார். கதையை விட்டு தனி டிராக்கில்யோகிபாபுவும், மொட்டை ராஜேந்திரனும் காமெடி பெயரில் வதைக்கின்றனர்.
வேதிகா மூலமாக கதை விரிவடைந்தாலும், அவருக்கு இதில் அட்வெஞ்சர் காட்சிகள் இல்லை. இருந்தாலும், இரண்டாம் பாதி முழுவதிலும் அவர் தான் அதிரடி காட்டப்போகிறார், என்பதை படத்தின் முடிவு தெளிவுப்படுத்துகிறது.
இதுவரை நடித்திராத வித்தியாசமான வேடத்தில் நடித்திருக்கும் சாந்தினி வில்லத்தனத்தையும் அழகாக வெளிக்காட்டி அசத்தியிருக்கிறார். கருட இனத்தைச் சார்ந்த அவரது கதாபாத்திரம் மற்றும் அதன் அனிமேஷன் காட்சிகள் நிச்சயம் சிறுவர்களை கவரும்.
ஒளிப்பதிவாளர்கள் கோபி துரைசாமி மற்றும் வினோத்.ஜே.பி அடர்ந்த வனப்பகுதியின் அபாயத்தை ரசிகர்களிடம் கடத்துவதோடு, கிராபிக்ஸ் காட்சிகளுக்கு ஏற்ப நேர்த்தியாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். இசையமைப்பாளர் அச்சு ராஜாமணியின் இசையில், “போலாம் போலாம் ரைட்…” பாடல் முனுமுனுக்க வைக்கிறது. படத்தில் பல கிளைக்கதைகள் இருந்தாலும், அனைத்தையும் தெளிவாக புரியும்படி காட்சிகளை தொகுத்திருப்பதோடு, தயாரிப்பாளரின் அத்தனை செலவுகளையும் திரையில் தெரியும்படி காட்சிகளை பயன்படுத்தியிருக்கிறார்.
கதை எழுதி இயக்கியிருக்கும் பிரபதீஸ் சாம்ஸ், ஃபேண்டஸி உலகத்தை தனது கற்பனை மூலம் உருவாக்கினாலும், அதற்கு வி.எப்.எக்ஸ் பணி மூலம் உயிரூட்டியிருக்கிறார் . ஃபேண்டஸி, அட்வெஞ்சர், அனிமேஷன் ஆகியவற்றின் மூலம் இந்த ‘கஜானா’-வை பிரமாண்ட படைப்பாக கொடுத்திருக்கும் இயக்குநர் பிரபதீஸ் சாம்ஸை பாராட்டலாம்.