‘லெவன்’ – விமர்சனம்
சென்னையில் நடக்கும் தொடர் கொலைகளில் துப்பு கிடைக்காமல் திணறுகிறது காவல்துறை. வழக்கை விசாரித்து வந்த காவல்துறை அதிகாரியும் விபத்தில் சிக்கி சுய நினைவை இழக்க, மற்றொரு காவல்துறை அதிகாரியான நவீன் சந்திராவிடம் ஒப்படைக்கப்படுகிறது வழக்கு.
வழக்கை நவீன் சந்திரா தனது பாணியில் டீல் செய்ய, கொஞ்சம் கொஞ்சமாக கொலையாளியை நெருங்குகிறார். அந்த சைக்கோ கொலையாளி யார் என்ற ரகசியம் கிட்டத்தட்ட முடிவாகும் நேரத்தில் படம் பார்ப்பவர்களுக்கு காத்திருக்கிறது அதிர்ச்சி. கொலைக்கான காரணம் என்ன? கொலையாளி யார்? என்பது தெரியவரும்போது யாரும் எதிர்பாராத க்ளைமாக்ஸ் மிரட்டுகிறது.
கொலை வழக்கை விசாரிக்கும் காவல் அதிகாரியாக நவீன் சந்திரா, காவல்துறை அதிகாரிக்கென்று அளவு எடுத்து தைத்தது போல் கதாபாத்திரத்தில் ஒட்டிக்கொள்கிறார். தனது இலக்கை நோக்கி பயணிக்கும் ஒவ்வொரு காட்சியிலும், உடல் மொழி, வசன உச்சரிப்பு, சண்டைக்காட்சிகள் என அனைத்திலும் தான் ஒரு முழுமையான ஆக்ஷன் ஹீரோ என்பதை நிரூபிக்கிறார்.
பள்ளியின் தலைமை ஆசிரியையாக நடித்திருக்கும் அபிராமி, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் திலீபன், ரித்விகா, ரேயா ஹரி, ஆடுகளம் நரேன், அர்ஜை என மற்ற வேடங்களில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருப்பதோடு, அவர்களது கதாபாத்திரம் திரைக்கதையோடு பயணிக்கும் வகையில் அமைந்திருப்பதால், சிறிய வேடம் என்றாலும் பார்வையாளர்கள் மனதில் நின்று விடுகிறார்கள்.
முதல் முறையாக கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் ஜானர் படத்திற்கு இசையமைத்திருக்கும் டி.இமான், தனது பாணி எந்த இடத்திலும் தெரியக் கூடாது என்பதில் தெளிவாக இருந்திருக்கிறார். படத்தின் பாடல்களை கூட தனது வழக்கமான பாணியில் கொடுக்காமல், புதிய வடிவில் கொடுத்திருப்பவர் பின்னணி இசையை அளவாக கையாண்டு படத்திற்கு பலமாக பயணித்திருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் கார்த்திக் அசோகனின் கேமரா இரவு நேர காட்சிகளை நேர்த்தியாக படமாக்கியிருக்கிறது. கொலையாளி தொடர்பான சஸ்பென்ஸை யூகிக்க முடியாதபடி, காட்சிகளை கச்சிதமாக தொகுத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் ஸ்ரீகாந்த்.என்.பி.
இறுதிக்காட்சி வரை திருப்பங்களுக்குள் திருப்பம், என்று பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் திரைக்கதை பயணித்தாலும், கதை சொல்லல் மற்றும் காட்சியமைப்பில் இருக்கும் நிதானத்தின் மூலம் இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ், வித்தியாசமான கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் ஜானர் படத்தை பார்த்த உணர்வை கொடுத்திருக்கிறார்.
சுவாரஸ்யமான திரைக்கதை, எதிர்பார்க்காத திருப்பங்கள் என பரபரப்பின் உச்சத்திற்கு அழைத்துச் செல்கிறது ‘லெவன்’.