‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ – விமர்சனம்
சினிமா விமர்சனம் என்ற பெயரில் ஒரு படத்தை பிரித்து மேயும் யூடியூப் விமர்சகர்கள் சினிமா பாரடைஸ் என்ற தியேட்டருக்கு அழைக்கப்பட்டு கொல்லப்படுகிறார்கள். ஒரு படத்தைகூட பாராட்டி பேசாத யுடியூபர் சந்தானத்திற்கும் அந்த அழைப்பு வருகிறது. அட நமக்கும் இவ்வளவு மரியாதையா? என்று அங்கு போகும் சந்தானத்திற்கு ஷாக். அந்த அமானுஷ்ய தியேட்டருக்கு வரும் சந்தானத்தின் குடும்பமும் மாட்டிக்கொள்கிறது. தியேட்டரில் ஓடும் சினிமாவுக்குள் சந்தானம் அவரது குடும்பம் மற்றும் சில கேரக்டர்கள் மாட்டிக்கொள்ள, அதிலிருந்து தப்பிக்க நினைக்கும் அவர்களது முயற்சியே கதை.
ஹாய் ப்ரோ.. சொல்லுங்க ப்ரோ என்று டக்கால்டி அடிக்கும் சந்தானத்தின் ஸ்டைல் மாடுலேஷன் செம ஃபிரஷ்! தெரியாத தீவில் மாட்டிக்கொள்வது அங்கு பேசும் புரியாத பாஷயை சப் டைட்டில் பார்த்து சொல்வது என படம் நெடுக சிரிக்க வைக்கிறார்.
ஓடும் படத்திற்குள் சென்றதும் குடும்ப குத்துவிளக்காக இருந்த சந்தானத்தின் அம்மா கஸ்தூரி க்ளாமர் உடையில் ஃபாரின் சரக்கு அடிப்பது , ஆட்டோ ஓட்டிய அப்பா கப்பல் கேப்டனாக அலப்பறை கொடுப்பது, தங்கச்சி யாஷிகா ஆனந்த் கெளதம் வாசுதேவனுடன் ரொமான்ஸ் செய்வது, தன்னை பித்து பிடிக்க வைத்த காதலி கீர்த்தனா செத்துப்போய் பேயாய் அலைவது என சந்தானத்தின் பாயிண்ட் ஆப்பில் அத்தனை கேரக்டர்களும் இண்ட்ரஸ்டிங் ஐடியா…
ஆனால் அதுவே சில இடங்களில் ஓவர் டோசேஜாகவும் அமைந்துவிடுகிறது.
சினிமா விமர்சகளை தேடி தேடி கொல்லும் ஹிட்ச்காக் இருதயராஜாக செல்வராகவன் கேரக்டர் ஒரு இடத்தில் இண்ட்ரஸ்டிங் இன்னொரு கட்டத்தில் இரிட்டேட்டிங் என்று அலை பாய்கிறது. கஸ்தூரியிடம் ஜொள்ளு வழியும் லொல்லுசபா மாறனும் மீட்டருக்கு மேல் நடித்திருக்கிறார்
மொட்டை ராஜேந்திரனுக்கு இதில் நல்ல வேட்டை. சந்தானமும் அவரும் கைகோர்த்த காமெடியில் கலகலப்பு!
அமானுஷ்ய தியேட்டர், மர்ம தீவு, சொகுசு கப்பல் என எந்த லொகேஷனாக இருந்தாலும் ஒளிப்பதிவாளர் தீபக் குமார் களத்திற்கேற்ற கலர் டோன் கொடுத்து பிரமாதப்படுத்தியுள்ளார். ஹாரர் படத்திற்கேற்ற பேக் ரவுண்ட் மியூசிக் மிரட்டல்.
படம் பார்க்க போனவர்கள் சினிமாக்குள் கேரக்டர்களாக மாறுவது போன்ற புது ஐடியாக்களில் கவனம் ஈர்க்கும் இயக்குநர் பிரேம் ஆனந்த், காட்சிகளின் நீளம், கத்திரி போட வேண்டிய இடங்களை கண்டுகொள்ளாதது மைனஸ்.
இருந்தாலும் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ உலகத்தை ஒரு முறை பார்க்கலாம்.