திரை விமர்சனம்

விஜய்சேதுபதி – ருக்மிணி காதல் கவிதை : எப்படி இருக்கு ‘ஏஸ்’?

ஆறுமுககுமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி – யோகிபாபு – ருக்மிணி வசந்த் நடித்து இன்று வெளியாகியிருக்கும் படம் ‘ஏஸ்’.

மலேசியா ஏர்போர்ட். யாருக்காகவோ காத்திருக்கும் யோகிபாபு, தான் தேடி வந்த ஆள் என்று நினைத்து சிறையிலிருந்து வெளிவந்த விஜய்சேதுபதியை அழைத்துச்செல்கிறார். ஒரு வேலை தேவை என்ற நிலையில் விஜய்சேதுபதியும் சைலண்டாக யோகிபாபு தங்கியிருக்கும் இடத்தில் அடைக்கலமாகிறார்.

ஒரு பயணத்தில் விஜய்சேதுபதி – நாயகி ருக்மிணி சந்திப்பு நிகழ்கிறது. தொடர் சந்திப்புகளில் இருவருக்குள்ளும் கோடை மழை போல கொட்டுகிறது காதல். இந்நிலையில் காதலியின் பொருளாதார சிக்கலை தீர்க்க ,40 கோடி வங்கி பணத்தை கொள்ளையடிக்கும் விஜய்சேதுபதியை ஒரு பக்கம் போலீஸ், இன்னொரு பக்கம் வில்லன் கூட்டம் துரத்துகிறது. எப்படி சமாளிப்பார் ஹீரோ என்பதற்கு விடை சொல்கிறது மிச்ச கதை!

காதலில் ரொமான்ஸ், ஆக்ஷனில் ருத்ரம், காமெடியில் கலகலப்பு என அந்தந்த ஏரியாவுக்கு பொருத்தமான நடிப்பை வழக்கம் போல வாரி வழங்கியிருக்கிறார் விஜய்சேதுபதி. நடுங்கவைக்கும் வில்லன் அவினாஷ் எதிரே அமர்ந்து தில்லாக பேசுவது, போலீஸ் விரிக்கும் வலையிலிருந்து தப்பிக்க போடும் பக்கா பிளான், உளறுவாய் யோகிபாபுவுக்கு அவ்வப்போது அதிர்ச்சி கொடுப்பது என அனைத்து பந்துகளையும் அடித்து ஆடி இருக்கிறார்.

சமீபகாலமாக யோகிபாபு நடித்து வெளிவந்த படங்களில் மருந்துக்குகூட காமெடியில்லை என்ற குறையை இந்த படத்தில் நீக்கி கம்பேக் கொடுத்திருக்கிறார் யோகிபாபு. இரண்டாம் பாதி படத்தில் யோகிபாபுவின் காமெடிக்கு தியேட்டர் குலுங்குகிறது.

நாயகியாக ருக்மிணி. பொங்கி வழியும் காதல், பொசுக்கென்று வரும் கோபம் என ருக்மிணியின் நடிப்புக்கு கொடுக்கலாம் மதிப்பெண் நூறு. அழகு, நடிப்பு இரண்டிலுமே ஈர்ப்பதால் கயாடு லோஹர்கள் ஜாக்கிரதை!
மிரட்டும் வில்லனாக அவினாஷ், எரிச்சல் ஊட்டும் ஸ்டெப் ஃபாதராக பிருத்விராஜ், யோகிபாபுவின் ஒன்சைட் லவ்வர் திவ்யா பிள்ளை என படத்தில் வரும் மற்ற கேரக்டர்களும் சிறப்பு.

ஒளிப்பதிவாளர் கரண் பி ராவத்தின் காமிரா வழியே படத்தின் ஒவ்வொரு ஃபிரேமும் அழகு! குறிப்பாக விஜய்சேதுபதி – ருக்மிணி உரையாடும் காட்சிகள் கவிதை. ஜஸ்டின் பிரபாகரன் இசையில் ”உருகுது உருகுது” பாடலை கேட்க கேட்க மனசெல்லாம் மைசூர் பாக்காய் இனிக்கிறது! சாம்.சிஎஸ்சின் பின்னணி இசையும் பாராட்டுகுரியது.

தயாரிப்பு, இயக்கம் என ஒரே நேரத்தில் இரட்டை சவாரி செய்திருக்கும் ஆறுமுககுமார் இரண்டிலுமே சிறப்பு. இருந்தாலும் படத்தின் முதல் பாதி திரைக்கதையில் இருக்கும் வேகமின்மை, நம்பகத்தன்மையற்ற வங்கி கொள்ளை, திணிக்கப்பட்ட மலேசியா கதைக்களம் என நிறைய இடங்களில் இருக்கும் நெளிசல்களுக்கு டிங்கரிங் பட்டி பார்த்திருந்தால், ‘ஏஸ்’ இதயம் முழுக்க நிறைந்திருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE