’ஆகக்கடவன’ விமர்சனம்
சுண்டு விரலை காட்டினாலே ரசிகனை ஆர்ப்பரிக்க வைக்கும் பெரிய ஸ்டார்கள், பணத்தை காகிதமாக நினைத்து செலவு செய்யும் தயாரிப்பு நிறுவனம், புகழ்பெற்ற டெக்னீஷியன்களை கொண்டு உருவாகி வெளியாகும் படங்களில்கூட பெரும்பாலும் கதையை தேடினலும் கிடைக்காது. ஆனால் எந்த பந்தாவும் பளபளப்பும் இல்லாமல் வெளிவரும் சில சின்ன படங்கள் அட சூப்பரான கான்செப்ட்யா என்று ஆனந்த அதிர்வை ஏற்படுத்தும். அப்படியொரு படமாக வெளிவந்து ஆச்சர்யமளிக்கிறது ‘ஆகக் கடவன’ படம்.
கதை என்ன?
ஒரு மெடிக்கல் ஷாப்பில் வேலை செய்யும் மூன்று நண்பர்கள். கடையின் உரிமையாளர் கடையை விற்க முடிவெடுக்க, நண்பர்கள் சேர்ந்து வாங்கிக்கொள்ள நினைக்கிறார்கள். அதற்காக அவர்கள் கஷ்டப்பட்டு பணம் சேமித்து வைக்க, அது திருடுபோகிறது. இந்த நிலையில், ஊருக்குச் சென்று சொத்தை விற்று பணத்தை புரட்டிவர நண்பர்கள் இருசக்கர வாகனத்தில் புறப்படுகிறார்கள். வழியில் வண்டி பஞ்சராகிறது. அதைச் சரிசெய்ய காட்டுக்குள் இருக்கும் ஒரு பஞ்சர் கடைக்குச் போகிறார்கள். அங்கே ஒரு ஆபத்தான சூழலில் சிக்குகிறார்கள். அந்த பிரச்சனை என்ன? அவர்களின் நிலை என்ன என்ற கேள்விகளுக்கு விடைசொல்கிறது அடுத்தடுத்த சம்பவங்கள்.
நாம் சொல்லும் ஒவ்வொரு வார்த்தைக்கும் சக்தி இருக்கிறது. நாம் நினைப்பதே நடக்கும், நாம் விதைப்பதே முளைக்கும் அல்லது விஜய் படத்து வசனம் போல் வாழ்க்கை ஒரு வட்டம்டா என்ற வாழ்வின் அடிப்படை கோட்பாட்டை பின்னி எழுதப்பட்ட வித்தியாசமான முயற்சிக்காகவே ‘ஆகக்கடவன’ இயக்குநரை பாராட்டலாம்.
கதையின் நாயகர்களான ஆதிரன் சுரேஷ், சி.ஆர்.ராகுல், சதீஷ் ராமதாஸ் என மூவரும் சினிமாவுக்கு புதியவர்கள். நடிப்பில் மோசமில்லை என்றாலும் இன்னும் கூடுதலான பயிற்சி எடுத்து நடித்திருந்தால் படத்திற்கு பலமூட்டியிருக்கும்.
ஒளிப்பதிவு, எடிட்டிங் போன்றவற்றில் பட்ஜெட் சமரசம் செய்யாமல் இருந்திருந்தால் தொழில்நுட்பமும் படத்தின் வெற்றியை உறுதி செய்திருக்கும். ஆரம்ப காட்சிகளில் எட்டிப்பார்க்கும் சிறு சிறு குழப்பங்கள் படத்தின் மைனஸ்.
முள்ளுக்காட்டுக்கு செல்லும் அந்த திக் திக் நிமிடங்கள் சுவாரஷ்யம். ‘பிரபஞ்ச விதி’, ‘வார்த்தைகளின் சக்தி’ என தொடரும் வசனங்கள், திரும்ப திரும்ப பேசுற என்ற காமெடிபோல அலுப்பை ஏற்படுத்துகிறது
வித்தியாசமான கான்செப்ட்டை யோசித்த இயக்குநர் தர்மா, திரைக்கதையிலும் மேக்கிங்லும் திறமையாக செயல்பட்டிருக்கலாம். இருப்பினும் ‘ஆகக்கடவனவுக்கு’ இந்த பிரபஞ்சம் பெரிய வெற்றியை கொடுக்கட்டும்.