’மனிதர்கள்’விமர்சனம்
ஐந்து நண்பர்கள்; ஓர் இரவு; அப்போது நிகழும் நண்பனின் இறப்பு. இதனால் நண்பர்களுக்குள் ஏற்படும் மோதல்; அதன்பின் தொடரும் திக் திக் சம்பவங்களே ‘மனிதர்கள்’.
திண்டுக்கல்லைச் சேர்ந்த கபில் வேலவன், தக்ஷா, குணவந்தன் தனபால், அர்ஜுன் தேவ், பிரேம் ஆகியோர் நள்ளிரவில் குடிக்கும்போது போதையில் சண்டை போடுகிறார்கள். எதிர்பாராதவிதமாக, பாட்டில் குத்தி ரத்த வெள்ளத்தில் கிடக்கிறார் பிரேம். இது விபத்தா, கொலையா என நண்பர்களுக்குள் நடக்கும் வாக்குவாதமும், உடலை மறைக்க அவர்கள் செய்யும் விபரீத முயற்சிகளும் காட்சிகளாக விரிகின்றன. இந்தச் சம்பவத்தையும், அதைத் தொடரும் நிகழ்வுகளையும் ராவான த்ரில்லராகத் தந்திருக்கிறார் அறிமுக இயக்குநர் இராம் இந்திரா.
நண்பர்களிடம் கட்-அண்டு-ரைட்டாக கண்டிப்பு காட்டி, முடிவுகள் எடுக்கும் கர்லி கேரக்டரில் கபில் வேலவன் சிறப்பு! பதற்றமும் நடுக்கமுமாய் ‘பாவா… பாவா…’ என தெக்கத்தி வட்டார வழக்கில் பேசிப் படமெங்கும் துன்பியல் நகைச்சுவைக்குப் பங்களிப்பு செய்திருக்கிறார் தக்ஷா. குணவந்தன் தனபால், சாம்பசிவம், அர்ஜுன் தேவ் ஆகியோர் கொடுத்த வேலையைச் செய்திருக்கிறார்கள்; சில இடங்களில் அதீதமாகவும் நடித்திருக்கிறார்கள்.
குறைவான பாத்திரங்களுடன் நேர்க்கோட்டில் சொல்லப்பட்ட கதை ஆரம்பத்தில் சுவாரஸ்யமாக இருந்தாலும், ஒரு கட்டத்தில் காருக்குள் சிக்கிக்கொண்ட உடலைப்போலத் திரைக்கதையும் தேங்கிவிடுகிறது. பதற்றத்தில் பேசும் வசனங்களிலேயே ஆறு நண்பர்களின் தனிப்பட்ட வாழ்க்கை, பாசம், அவர்களின் பிரச்னைகள், போன்றவற்றைக் காட்ட முயன்றது பாராட்டுக்குரியது. ஆனால், அதை இன்னும் தெளிவாகக் காட்டியிருக்கலாம். ஆங்காங்கே அவல நகைச்சுவையும், வசனங்களும் சிரிப்பைத் தருகின்றன.
பெட்ரோல் பங்க், கோயில் திருவிழா, சோளக்காடு என வேகமெடுக்கும் இடங்கள் நம்மை இருக்கையில் கட்டிப்போட்டாலும் ஒரே மாதிரி சம்பவங்களின் கோவையாக காட்சிகள் நகர்வது அயர்ச்சி! நண்பர்களுக்கிடையேயான நட்பையும் மென் உணர்வையும் தேடிக் களைப்படையச் செய்கிறது இரண்டாம் பாதித் திரைக்கதை. க்ளைமாக்ஸில் நம் மனதில் ஆழமாகத் தைத்திருக்க வேண்டிய வசனங்கள் அலறல் சத்தத்திலும் கூச்சலிலும் காணாமல்போவது மைனஸ்! இதனாலேயே மனதைக் கனக்கச் செய்திருக்க வேண்டிய அந்த இறுதிக்காட்சி, கடந்து மட்டுமே செல்கிறது.
தொழில்நுட்பத்தில் மெனக்கெட்ட `மனிதர்கள்’, திரைக்கதையையும் செப்பனிட்டிருந்தால் ‘மனிதர்கள்’ வென்றிருப்பார்கள்.