ஒரு நாள், சக்தியின் காதல் மனைவி பவ்யா டிரிகா ரத்தக் காயத்தில் கிடக்க, கொலை முயற்சிக்கு ஜின் காரணமென எல்லோரும் சந்தேகிக்கின்றனர்.
உண்மையில் என்ன நடந்தது, ஜின் குற்றவாளியா, அல்லது வேறு மர்மம் உள்ளதா என்பதைச் சொல்வதே இந்த ‘ஜின் தி பெட்’.
எமோஷன்களுக்குப் பொருந்தாத உடல்மொழியில் வலம் வருகிறார் முகேன் ராவ். ரீல்ஸ் மோடில் அவர் நடமாடுவது படத்திற்கு எந்தவித பலத்தையும் சேர்க்கவில்லை.
காதல், பாடல் என மற்றுமொரு வழக்கமான நாயகி பாத்திரத்தில் பவ்யா டிரிகா, பாஸ் மார்க் வாங்க முயல்கிறார்.
அபத்தமான காமெடிகளுக்கு நடுவே சொற்ப இடங்களில் மட்டுமே சிரிக்க வைக்க முயல்கிறார் பால சரவணன்; ஆனால், எழுத்தில் இல்லாத நகைச்சுவை பேச்சில் எப்படி வரும் என்ற கேள்வியும் எழவே செய்கிறது.
பேயைப் பார்த்துப் பயப்படும் காட்சிகளிலும், ஆங்காங்கே சில நடிப்புக் காட்சிகளிலும் வினோதினி மற்றவர்களிடமிருந்து சற்று தனித்து நிற்கிறார்.
வடிவுக்கரசிக்கு நடிப்புக்கு வாய்ப்பளிக்காத கதாபாத்திர வடிவமைப்பு ஏமாற்றமளிக்கிறது. கூடவே ஆங்காங்கே இமான் அண்ணாச்சி செய்யும் பழங்கால காமெடிகளும் முகத்தைச் சுளிக்க வைக்கின்றன.
இசையமைப்பாளர் விவேக்-மெர்வின் இசையில் பாடல்கள் பெரிதாக ஈர்க்கவில்லை. பின்னணி இசை சில இடங்களில் சுவாரஸ்யமாக இருந்தாலும், படம் முழுவதும் சைலன்ஸ் இல்லாமல் டெசிபல் மீட்டரை எகிறச் செய்கிறது.
கமர்ஷியல் படத்திற்கு உரிய வண்ணமயமான ஒளிப்பதிவை வழங்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் அர்ஜுன் ராஜா.
படத்தொகுப்பாளர் தீபக்குக்கு ஒரு கத்திரி மட்டும் போதாது என்பது போல எக்கச்சக்க காட்சிகள் உள்ளன.
ஒரு காட்சிக்கும் மற்றொரு காட்சிக்கும் தொடர்பு இல்லாத திரைக்கதையை இணைக்கப் போராடியிருக்கிறார்.
ஜின் பெட்டிக்குள் இருந்து வரும் கை, ஜின் உருவம் ஆகியவை சுமாரான கிராஃபிக்ஸில் வந்து போகின்றன.
ஆரம்பக் காட்சி பயமுறுத்தும் வகையில் சிறப்பாகவே தொடங்குகிறது. ஆனால், அதன் தாக்கத்தை அடுத்தடுத்த காட்சிகளுக்கு எடுத்துச் செல்லாமல் விட்டிருக்கிறார் இயக்குநர் டி.ஆர்.பாலா.
பெண்களைப் பாலியல் ரீதியாக அவமானப்படுத்தும் நகைச்சுவைகள் தேவையற்றவை. காதல் காட்சிகளுக்கு எந்த மெனக்கெடலும் இல்லாத எழுத்து மேலோங்குகிறது.
யூடியூப் காணொளி போலத் தனித்தனியாகத் தொங்கும் நிகழ்வுகள், சுவாரஸ்யமான திரைமொழியாக மாறவில்லை.
ஜின் பேசும் விதம், அதன் குறும்புகள் ஆகியவற்றை மெருகேற்றி, முழுமையான குழந்தைகளுக்கான படமாகவே கொடுத்திருக்கலாம். ஆனால், இரட்டை அர்த்த வசனங்கள், பாடல்கள் எனச் சேர்த்து அந்த வாய்ப்பையும் வீணடித்துவிட்டனர்.