தி வெர்டிக்ட்’ – விமர்சனம்
அமெரிக்காவில் பல கோடி மதிப்புள்ள சொத்துக்களுக்குச் சொந்தக்காரரான சுஹாசினியை கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்படுகிறார் ஸ்ருதி ஹரிஹரன். கணவரை இழந்து தனிமையில் வாழ்ந்து வரும் சுஹாசினி, ஸ்ருதியை தனது சொத்துக்கு வாரிசாக உயில் எழுதிவைத்த சில நாட்களிலே இந்த மரணம் நிகழ்ந்திருப்பதால் சந்தேகம் அவர் மேல் திரும்புகிறது.
இந்நிலையில் அவருக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் வாதாடுகிறார் வரலட்சுமி. எலிசாவுக்கும் ஸ்ருதிக்குமான தொடர்பு என்ன? ஸ்ருதி குற்றவாளியா, கொலை நடந்த தினத்தில் என்ன நடந்தது உள்ளிட்ட கேள்விகளுக்கான விடையை விசாரணையாகவும், விவரணையாகவும் தந்திருப்பதே இந்த ‘வெர்டிக்ட்’.
குறிப்பாக சுஹாசினியின் மரணத்தை அறிகின்ற இடத்தில் சிறப்பான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். கோபம், தந்திரம், காதல் என எல்லா உணர்வுக்கும் தட்டையான பாவனைகளைக் கொடுத்திருக்கும் பிரகாஷ் மோகன்தாஸின் நடிப்பு படத்தின் பெரிய மைனஸ்! கதாபாத்திர வடிவமைப்பில் இருக்கும் பிரச்னையே இந்த குழப்பத்துக்குக் காரணமா என்ற எண்ணமும் மேலெழும்புகிறது. வித்யுலேகா ராமனின் நடிப்பில் குறையேதுமில்லை.
வெவ்வேறு காட்சிகளின் தொகுப்பைக் காண்கிறோம் என்ற உணர்வைத் தராமல் இருக்க வேண்டிய படத்தொகுப்பு, அந்தப் பணியைத் திறம்படச் செய்யவில்லை. பல இடங்களில் காட்சிகள் முறையான ‘ட்ரான்ஸ்சிஷன்’ இல்லாமல் அப்படியே ஜம்ப் அடிப்பதும் துருத்தல்! ஆதித்யா ராவ் இசையில் பாடல்கள் பெரிதாக ஈர்க்கவில்லை. பின்னணி இசையும் காட்சிக்கும், கதாபாத்திரங்களின் உணர்ச்சிகளுக்கும் ஒட்டாத உணர்வையே ஏற்படுத்துகிறது.
கதை ஆரம்பித்த விதமும், ஒவ்வொரு கதாபாத்திரத்தின் தொடக்கப் பிம்பங்கள் விளக்கப்பட்ட விதமும் திரைக்கதையோடு விலகாமல் பயணிக்க வைக்கின்றன. கோர்ட்ரூம் டிராமாவுக்கு ஏற்றவாறு அமைக்கப்பட்ட வாதப் பிரதிவாதங்கள் குறைசொல்ல முடியாத அளவுக்கு நேர்த்தியாகவே எழுதப்பட்டிருக்கின்றன. ஸ்டேஜிங் அனைத்துமே கச்சிதமாக உருவாக்கப்பட்டிருந்தாலும் வசனங்களைக் கதாபாத்திரங்கள் ஆங்கிலத்திலேயே பேசுவது நெருடல். அதற்கான சப்டைட்டில்கள் போடப்பட்டாலும் பிரதான காட்சிகள் இத்தகைய சிக்கலில் தவிப்பது படத்தை அந்நியப்படுத்திவிடுகிறது.
முன்பின் தெரியாத ஒருவருக்கு உயில் எழுதும் அளவுக்கு இவருக்கும் அவருக்குமான பந்தம் என்ன என்பதும் கடைசிவரை விளங்காமல் தொக்கி நிற்கிறது. மிகவும் யூகிக்கக்கூடிய தீர்ப்பை நாமே மனக்கண்ணில் எழுதிவிட, அதுவே திரையிலும் வந்து போக, வந்த சுவாரஸ்யம் எல்லாம் ஜாமீன் வாங்கிக்கொள்கின்றன.
தொழில்நுட்பம், திரைக்கதை என இரண்டிலுமே வெற்றி, தோல்வி மாறி மாறி வருவதால் தீர்க்கமான தீர்ப்பை எட்டாமலே முடிந்துவிடுகிறது இந்த ‘தி வெர்டிக்ட்’.