‘படைத்தலைவன்’ திரை விமர்சனம்
பொள்ளாச்சி மாலை கிராமத்தில் மண்பாண்டம் செய்யும் தொழில் செய்பவர் கஸ்தூரி ராஜா. இவருடைய மகன் சண்முக பாண்டியன். தவிர மணியன் என்ற யானையையும் செல்லமாக வளர்த்துவருகிறார். சண்முக பாண்டியனுக்கு மணியன் என்றால் உயிர். அப்படிப்பட்ட யானை ஒரு பிரச்சனையில் சிக்கி வழக்கு, கோர்ட் வரை செல்கிறது. விசாரணை முடிவில் யானையை கேம்ப்பிற்கு கொண்டு செல்லச் சொல்கிறார் நீதிபதி. கேம்பிற்கு கொண்டு செல்லப்படும் யானை காணாமல் போகிறது. அதைத் தேடி சண்முக பாண்டியன் செல்லும் பயணத்தில் சந்திக்கும் பிரச்சனைகளே ‘படைத்தலைவன்’.
புரட்சிக்கலைஞரின் மகன் என்ற ஈர்ப்பும் எதிர்பார்ப்பும் படைத்தலைவனை பார்க்கத் தூண்டுகிறது. ஆனால் களம் தவிர, கதை, திரைக்கதை, கதாபாத்திர தேர்வு எல்லாவற்றிலும் சறுக்கல் இருப்பதால் ‘படைத்தலைவன்’மனசுக்கு நெருக்கமானவனாக அமையவில்லை.
ஆக்ஷன் ஏரியாவில் அடித்து நொறுக்குவதற்கான உடல்வாகுடன் இருக்கும் சண்முகபாண்டியின், சண்டை காட்சிகளில் அப்பா பெயரை காப்பாற்றுகிறார். அதேபோல் கண்களில் கோபம் கொப்பளிக்க பார்க்கும்போது கேப்டனை நினைவுப்படுத்துகிறார். ஆனால் உணர்ச்சிகரமான காட்சிகளில் உடல்மொழியில் எந்த சலனமும் காட்டாமல் ஏமாற்றுகிறார்.
சண்முக பாண்டியனின் தந்தையாக கஸ்தூரி ராஜாவும் வடமாநில வன கிராமத்தின் தலைவனாக வரும் முனிஷ்காந்த், வளர்க்கும் மாநாடுகளை தெய்வமாக நினைக்கும் அருள்தாஸ் ஆகியோருக்குள் ஓவர் ஆக்டிங்கில் யார் பெரியவர் என்று நீயா நான போட்டி நடக்கிறது. வில்லன்களாக வரும் கேரக்டர்களும் வாங்கிய சம்பளத்திற்கு மேல் நடித்துள்ளனர்.
மணியன் யானையாவது எல்லை தாண்டாத இயல்பான நடிப்பை தந்துள்ளது ஆறுதல். பொள்ளாச்சி, கேரள, வட மாநில வனப் பகுதிகள் மட்டும் காண்பதற்கு இதம். மற்றபடி செம சீன் என்று சொல்லும் அளவுக்கு ஒளிப்பதிவாளரின் திறமை வெளிப்படவில்லை.
ஏஐ தொழில்நுட்பத்தில் விஜயகாந்த் வரும் அந்த இரண்டு நிமிடங்களில் தியேட்டரே அலறுகிறது. ஆனாலும் ஏஐயிலும் சொத்தப்பல் நடந்துள்ளது.
படத்திற்கு இளையராஜா இசை. பழைய விஜயகாந்த் படங்களுக்கு போட்ட பிண்ணனி இசையை கோர்த்து சமாளித்திருக்கிறார்.
பொள்ளாச்சியில் நடக்கும் கதையை பரபரப்பை கூட்டுவதற்காக எங்கெங்கோ டிராவல் செய்ய வைக்கிறார் இயக்குநர். ஆனால் அது திரைக்கதையை பலவீனப்படுத்ததான் செய்கிறது. சொந்தமாக வளர்க்கும் யானைக்கு மதம் பிடித்தாலே யானை உரிமையாளரால் நெருங்க முடியாது. உண்மை இப்படி இருக்க ஓடிவரும் காட்டு யானை மேல் ஏறி உட்கார்ந்து சண்முகபாண்டியன் சவாரி செய்வதெல்லாம் டூமச் .
நடிகர்களிடம் சரியாக நடிப்பை கேட்டு வாங்காதது; அலுத்தமற்ற கதை, திரக்கதை, சப்பென்ற வசனம் என படத்தின் அனைத்து மைனஸ்களுக்குக்கும் இயக்குநர் அன்பு மட்டுமே காரணம்.
மொத்தத்தில் ‘படைத்தலைவன்’ பலவீனமானவன்!