விரட்டும் அதர்வா ; மிரட்டும் பாட்டி : ‘DNA’ திரை விமர்சனம்
காதல் தோல்வியால் மதுவுக்கு அடிமையாகி வீட்டிற்கு உருப்படாத பிள்ளையென பெயர் வாங்கிய அதர்வா. மன நல பிரச்சனையில் கல்யாணம் தடையாகிக்கொண்டே இருக்கும் நிமிஷா சஜயன். இருவரையும் இல்லறத்தில் இணைத்து வைக்கிறது சூழல். கல்யாணத்திற்கு பிறகு நிம்மதி, மகிழ்ச்சி என வாழ்க்கை அமைதியான நதியாய் ஓடிக்கொண்டிருக்கிறது. குழந்தையும் பிறக்கிறது. இந்த நிமிடத்தில் அதர்வா – நிமிஷா நிம்மதியை சீர்குலைப்பது போல் அவர்களின் குழந்தை காணாமல் போகிறது. குழந்தை எங்கே என்ற தேடலின் அடுத்தடுத்த திருப்பங்களே டிஎன்ஏ திரைக்கதையாகியுள்ளது.
குடிக்கு அடிமையான இளைஞனாக எண்ட்ரி ஆகும் அதர்வா, அதை செவ்வன செய்திருக்கிறார். திருமணத்திற்குப் பிறகு பெத்த தாயாலேயே (விஜி சந்திரசேகர்) புரிந்துகொள்ளப்படாத மனைவி நிமிஷாவை நேசத்தால் நிரப்புவது; அவரின் வெள்ளேந்தித் தனத்தை முழுமையாய் புரிந்துகொண்டு அன்பின் மிகுதியில் அரவணைப்பது என அதர்வா பொறுப்பான நடிப்பை தந்திருக்கிறார். குழந்தையை தேடி அலைந்து கடத்தல்காரர்களை விரட்டி பிடிக்கும் தருணத்தில் ஆக்ஷன் அவதாரம் எடுக்கும்போதும் திறம்பட செய்திருக்கிறார்.
பிபிடி என்ற குறைபாடுள்ள பெண்ணாய் நிமிஷா சஜயன் அட்டகாசம். இது நடிப்பல்ல நிஜம் என்பதை இன்னொரு முறை நிருபிக்கும் கேரக்டரில் வாழ்ந்திருக்கிறார். பெற்ற குழந்தையை பிரிந்த தவிப்பு, யாரோ பெற்ற குழந்தை என்றாலும் அதை பத்து நாள் வளர்த்த பாசத்தில் ஏங்கும் ஏக்கம் என நிமிஷா பிரமாதம். அவரைத் தவிர இந்த கதாபாத்திரத்தை யாராலும் இட்டு நிரப்பி இருக்க முடியாது.
அதர்வாவின் நண்பராக ரமேஷ் திலக், அப்பாவாக சேத்தன், நிமிஷாவின் அம்மாவாக விஜி, மனசாட்சி உள்ள சப் இன்ஸ்பெக்டராக பாலாஜி சக்திவேல் உள்ளிட்டவர்களும் தங்கள் பங்களிப்பை சரியாக செய்திருந்தாலும் குழந்தை கடத்தல் பாட்டியாக வரும் சாத்தூர் விஜயலட்சுமி மிரட்டுகிறார். அவருக்கு க்ளோசப் வைக்கும்போதெல்லாம் நம்மை அறியாமலேயே ஒரு பயம் வருவதால் லப் டப் அதிகமாகிறது.
குழந்தை கடத்தல், நரபலி என்று அன்றாடம் ஊடகத்தில் அடிபடும் செய்தியை அடிப்படையாக கொண்ட க்ரைம் த்ரில்லர் டிராமா என்றாலும் நிறைய இடங்களில் பழைய படங்களின் காட்சி நெடி. குடியிருப்பு பகுதியில் நரபலி என்பதெல்லாம் நம்ப முடியாத லாஜிக் சறுக்கல். 5 இசையமைப்பாளர்கள் இருந்தும் ஒரு பாடல் கூட நெஞ்சை தொடவில்லை. க்ளைமாக்ஸ் காட்சி கிட்டத்தட்ட ராமநாராயணன் படம் பார்ப்பதுபோல் உள்ளது.
இந்த குறைகளை தவிர்த்திருந்தால் ‘டிஎன்ஏ’ சுக பிரசவமாகியிருக்கும்!