பயம் இல்ல சிரிப்புதான் வருது : ‘காட்டேரி’ விமர்சனம்
’காட்டேரி’யை காட்டி பயமுறுத்துகிறேன் என்று சிரிக்க வைப்பதும் காமெடியில் சிரிக்க வைக்கிறேன் என்று பயப்படவைப்பதுமாக படம் பார்ப்பவர்களுக்கு விநோத வித்தியாச ’அனுபவத்தை’ கொடுக்கிறது இந்த ‘காட்டேரி’.
தங்கப் புதையலை தேடி ஒரு கிராமத்திற்கு செல்கிறது நாயகன் வைபவ், காமெடியன்கள் கருணாகரன், ரவிமரியா உள்ளிட்ட கோஷ்டி. போன பிறகுதான் தெரிகிறது அது கிராமம் அல்ல கல்லறை தோட்டம் என்று. கண்ணுக்கு தெரிபவர்களெல்லாம் காட்டேரிகளாய் இருக்க, வந்த வழி போவதே சிறப்பு என ஓட்டமெடுக்கிறார்கள் வைபவ் கோஷ்டி. ஆனால் எந்தப் பக்கம் தப்பிக்க நினைத்தாலும் சுற்றி சுற்றி கிராமத்துக்கே வந்து நிற்கிறார்கள். இதில் ஒரு பேய்,” நான் சொல்லும் கதையில் பொய் எது? உண்மை எதுன்னு கரெக்டா சொல்லிட்டா உங்களை உயிரோட விட்டுடுறேன்” என்கிறது. அப்புறம் என்ன பேய் சொல்லும் கதையை படம் பார்ப்பவர்களும் சேர்ந்து கேட்க, க்ளைமாக்ஸில் படத்தில் நடிப்பவர்களும் படம் பார்ப்பவர்களும் தப்பிக்கிறோமா இல்லையா என்பதே மீதி கதை.
‘யாமிருக்க பயமேன்’ படத்தை இயக்கிய டிகேவா இந்தக் கதையை யோசித்தார் என்று சந்தேகிக்கும் வகையில் அழுத்தமே இல்லாத கதையை பண்ணி கடுப்பேத்தியிருக்கிறார். திரைக்கதை, நடிகர்களின் நடிப்பு, காட்சியமைப்புகள் எல்லாமே எழும்புக்கூடாய் நிற்கிறது.
காமெடி என்னும் பெயரில் கருணாகரன், ரவிமரியா, குட்டி கோபி மூவரும் போட்டி போட்டுக்கொண்டு கொல்கிறார்கள். அதிலும் இரட்டை அர்த்த வசனமெல்லாம் ஓவரோ ஓவர். பேயாக வரும் வரலட்சுமி, சோனம், ஆத்மிகா மூவருக்குமே ஸ்கோர் செய்ய வாய்ப்பில்லை.
ஒளிப்பதிவும், பின்னணி இசையும் மட்டுமே லேசான பீதியை கிளப்புகிறது. நள்ளிரவில் நடக்கும் ஸ்கூல், கிராமத்து திருவிழா நடப்பதுபோன்ற ஓபனிங் சீன் என ஒருசில இடங்கள் ரசிக்க வைக்கிறது. காட்டேரின்னு பெயர் வச்ச இயக்குனர் அதை காட்டும்போது மிரட்டியிருக்க வேண்டாமா? ஏதோ மாறுவேட போட்டிக்கு போகும் பள்ளி குழந்தை மாதிரி காட்டேரியை காட்டியிருப்பதால் சிரிப்பு சிரிப்பா வருது.
டேக் கேர் டிகே!