சினிமா செய்திகள்

அமீர்கானின் ‘லால்சிங் சத்தா’ : உதயநிதி வெளியிடுகிறார்

நடிகர் அமீர்கான் தயாரிப்பில் ஆகஸ்ட் 11ஆம் தேதி முதல் தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகும் திரைப்படம் ‘லால் சிங் சத்தா’. அமீர்கான் ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் வயாகம் 18 ஆகிய நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் இப்படத்தில் அமீர்கான் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கரீனா கபூர்  நடித்திருக்கிறார். இவர்களுடன் நாக சைதன்யா, மோனாசிங் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். சத்யஜித் பாண்டே ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ப்ரீதம் இசையமைத்திருக்கிறார். பாரஸ்ட் கெம்ப் எனும் ஆங்கில படத்தினைத் தழுவி அதுல் குல்கர்னி திரைக்கதை எழுத, அத்வைத் சந்தன் படத்தை இயக்கி இருக்கிறார். இந்தத் திரைப்படத்தை தமிழகம் முழுவதும், தமிழின் முன்னணி திரைப்பட வெளியிட்டு நிறுவனமான ரெட் ஜெயன்ட் மூவிஸ்  வெளியிடுகிறது. இதனைத் தொடர்ந்து  சென்னையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.

அப்போது உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது :-

” நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் வகுப்பை ‘கட்’டடித்துவிட்டு அமீர்கானின் ‘ரங்கீலா’ படத்தை பார்த்திருக்கிறேன். அந்த அளவிற்கு நான் அமீர் கானின் ரசிகன்.  மாதந்தோறும் இரண்டு திரைப்படங்களையாவது ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடுகிறது. இதனை தவிர்ப்பதற்கு பலமுறை முயற்சித்தாலும், திரையுலக நண்பர்களுக்காக தரமான படங்களைத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறோம். அந்தத் தருணத்தில் அமீர்கான் தயாரிப்பில் உருவாகி இருக்கும் “லால் சிங் சத்தா” படத்தினை தமிழில் வெளியிடுவதற்காக எங்களை தொடர்பு கொண்டார்கள். நாங்கள் அதை முதலில் வேண்டாம் என்று மறுக்க நினைத்தோம். தமிழ் திரைப்படங்களே போதும். இந்தி திரைப்படங்கள் வேண்டாம் என்றும் எண்ணினோம். திடீரென்று ஒரு நாள் அமீர் கான் வீடியோ காலில் தொடர்பு கொண்டு, ‘லால் சிங் சத்தா’ படத்தினை நீங்கள்  வெளியிட வேண்டும் என கோரிக்கை  வைத்தார். உடனே சரி என்று ஒப்புக் கொண்டேன். அதன் பிறகு படத்தை முழுவதும் பார்த்தோம். முன்னோட்டத்தில் பார்த்து ரசித்ததை விட, திரைப்படம் இன்னும் சிறப்பாக இருக்கிறது. அமீர்கான் அர்ப்பணிப்புடன் கூடிய ஒரு சிறந்த நடிகர் என்பதை மீண்டும் இந்த படத்தில் நிரூபித்திருக்கிறார். பான் இந்தியா என்ற வார்த்தையை தற்போது தான் நாம் பெருமளவில் பயன்படுத்தி வருகிறோம். ஆனால் அமீர்கான் இருபது ஆண்டுகளுக்கு முன்னரே இதனை  அறிமுகப்படுத்தி,  வெற்றி பெற்றிருக்கிறார். இந்தத் திரைப்படத்தை தமிழ் ரசிகர்களும் பெரிய அளவில் வரவேற்பார்கள்.” என்றார்.

இயக்குநர் அத்வைத் சந்தன் பேசுகையில், ”பாரஸ்ட் கேம்ப்” எனும் படைப்பு, லால் சிங் சத்தா என்ற பெயரில் உருமாற்றம் பெற்றிருப்பதும், அதனை இயக்குவதற்கான வாய்ப்பு எனக்கு கிடைத்திருப்பதும் அமீர்கான் எனக்கு அளித்த ஆசி. திரைக்கதை ஆசிரியர் அதுல் குல்கர்னியின் உழைப்பு எளிதானதல்ல. அமீர்கான், அஜித் ஆந்த்ரே, மோனோசிங், நாக சைதன்யா போன்றவர்களின் பங்களிப்பு இல்லாமல் இந்த படைப்பு நிறைவு பெற்றிருக்காது. சென்னைக்கு வருகை தந்து இந்தப் படத்தின் தமிழ் மொழியிலான முன்னோட்டத்தை பார்வையிடும் போது புதிய படம் போல், புது அனுபவத்தை அளித்தது.” என்றார்.

நாக சைதன்யா பேசுகையில்,” நான் சென்னை பையன்தான். சென்னைக்கு வருகை தந்து நீண்ட நாட்களாகிவிட்டது. இந்தத் திரைப்படம் என்னுடைய கரியரில் முக்கியமான திரைப்படம். ஒரு நடிகராக இந்த திரைப்படத்தில் நிறைய  கற்றுக் கொண்டேன். இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு அளித்ததற்காக இயக்குநர் அத்வைத் சந்தன், தயாரிப்பாளரும், நாயகனுமான அமீர்கான் உள்ளிட்ட அனைவருக்கும்  நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.  ” என்றார்.

அமீர்கான் பேசுகையில், ” லால் சிங் சத்தா படத்தை தமிழகம் முழுவதும் நீங்கள் வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டதும் மறுப்பு தெரிவிக்காமல் வெளியிடவிருக்கும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்திற்கும், உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் முதலில் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். படத்தில் ஒவ்வொரு குடிமகனும் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு எதனை பின்பற்ற வேண்டும் என்பதனை இயக்குநரும், திரைக்கதை ஆசிரியரும் நேர்மறையாக உணர்த்திருக்கிறார்கள். இந்தப் படைப்பினை உருவாக்கிய அனைவருக்கும், பங்களிப்பு செய்த அனைவருக்கும் நன்றி. அனைத்து தரப்பு ரசிகர்களுக்கு இந்த படைப்பு கவரும் என நினைக்கிறேன்.” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE