’மார்கன்’ விமர்சனம்
சென்னையில் உடல் முழுவதும் கறுப்பான நிலையில் ஓர் இளம்பெண்ணின் பிணம் கண்டெடுக்கப்படுகிறது. மும்பையில் காவல் அதிகாரியாக இருக்கும் விஜய் ஆண்டனி இதே பாணியில் ஒரு கொலையை டீல் செய்திருக்கிறார், அதன் மூலமாகத் தனிப்பட்ட இழப்பையும் சந்தித்திருக்கிறார் என்பதால், சீனியர் அதிகாரியான சமுத்திரக்கனி இந்த கேஸையும் அவரிடம் ஒப்படைக்கிறார். வழக்கு விசாரணையில் அஜய் திஷான் என்ற இளைஞர் உள்ளே வர, அவருக்கு அரிதான ‘மெமரி பவர்’ இருப்பது தெரியவருகிறது. சந்தேகம் அவர் மீதும் திரும்ப, இந்த வழக்கில் அடுத்தடுத்து நிகழும் திருப்பங்களே ‘மார்கன்’ கதை.
அஜய் திஷானின் தங்கையாக அர்ச்சனா, கடைசி அரை மணிநேரத்தில் எட்டிப் பார்க்கும் சவாலான வேடத்தில் கனிமொழி ஆகியோர் குறைகள் ஏதுமில்லாத நடிப்பினை வழங்கியிருக்கின்றனர். விஜய் ஆண்டனியின் பின்னணி இசையானது குற்றம் நடக்கும் இரவு காட்சிகளுக்கும், பேன்டஸி காட்சிகளுக்கும் அமானுஷ்ய உணர்வைக் கச்சிதமாகக் கடத்துகிறது. கதையோடு வரும் க்ளைமாக்ஸ் பாடல் ஆறுதல்!
குற்றப் பின்னணி கொண்ட கதைக்கு ஏற்றவாறு இசைந்திருக்கும் யுவா.எஸ்-ஸின் ஒளிப்பதிவும் படத்துக்குப் பக்கபலம். இயக்குநரே படத்தொகுப்பாளர் என்பதாலோ என்னவோ, ‘கட்’களில் கூடுதல் சுதந்திரம் எட்டிப் பார்க்கிறது. இருந்தும், சடாரென முடியும் க்ளைமாக்ஸைச் சற்றே நிறுத்தி நிதானமாகச் சொல்லியிருக்கலாம்.
வழக்கமான கொலை வழக்கை துப்பறியும் கதையில், ‘Eidetic Memory’, ‘சித்தர்களின் சக்தி’ என அறிவியலையும் அதீத பேன்டஸியையும் கலந்து சுவாரஸ்யமாக்கியிருக்கிறார் இயக்குநர் லியோ ஜான் பால். அதோடு அந்தக் கதாபாத்திரத்தின் பின்கதை, அவருக்கு நீச்சலிலிருக்கும் திறமை போன்றவற்றையும் இணைத்தது ஸ்மார்ட்டான ரைட்டிங்!
விஜய் ஆண்டனி குற்றம் சாட்டப்பட்டவரை விசாரிக்கும் முறை, ‘மெமரி ரிக்கவரி’ காட்சிகளைப் படமாக்கிய விதம், சிசிடிவி காட்சிகள் கிளப்பும் டென்ஷன் போன்றவை திரைக்கதையைச் சுவாரஸ்யப்படுத்தும் முயற்சிகள்!
அதே நேரம், சித்தர்கள் சூப்பர்பவர், அதை வைத்து ‘மெமரி’ தொடர்பான சக்திக்குக் காரணம் சொன்னது போன்றவை பேன்டஸியாக ஓகே என்றாலும் ஒரு கட்டத்தில் அதீத லாஜிக்கற்ற மோடுக்குச் சென்றுவிடுகிறது படம்.
‘ஃபேன்டஸினாலும் ஒரு நியாயம் வேணாமப்பா’ என்றும் கேள்வி கேட்க வைக்கின்றன அக்காட்சிகள். எனினும் அதை அறிவியல் என்று கம்பு சுற்றாமல் ‘Para Psychology’ என்றே சொன்னது ஆறுதலான விஷயம்! ட்விஸ்ட்கள் என்று வரும் சிலவற்றில் இன்னும் ஆழம் சேர்த்திருக்கலாம்.
மற்றொரு புறம், தமிழ் சினிமாவில் ‘வடசென்னை’ கதாபத்திரங்கள் மீதிருக்கும் பொதுப்படையான, அந்தச் சிக்கலான பார்வை இதில் தாராவி பக்கமும் வட இந்தியர்கள் பக்கமும் திரும்பியிருக்கிறது.
‘தாராவி தார்’ போன்ற வசனமெல்லாம் வில்லன் பேசுவதாகவே இருந்தாலும் தவிர்த்திருக்க வேண்டிய ஒன்றே! அதேபோல தூய்மைப் பணியாளர்களைக் காசுக்காக அலைபவர்களாகக் காட்டிய அபத்தக் காட்சியும் அநாவசியம்.
நன்றி : விகடன்