திரை விமர்சனம்

மனச் சாளரத்தில் நிம்மதியின் ரீங்காரம்… ‘பறந்து போ’ ஒரு பார்வை!

1000 கோடி வசூலை அள்ளும் சினிமாக்கள் வன்முறையை, வில்ல குணத்தை, மலிவான காட்சிகளை மட்டுமே பதிவு செய்து பெருமையடிக்கும் காலமிது. பல கோடி சம்பளம் வாங்கும் ஸ்டார்களெல்லாம் தனக்கான பில்டப்புகளை நெய்யும் கதைகளுக்கும், இயக்குநர்களுக்கும் மட்டுமே முதல் மரியாதை கொடுக்கும் காலமிது.

இந்த வணிக வட்டத்தில் சிக்கித் தவிக்கும் சினிமா சூழலில், மனிதர்களுக்குள் மனிதத்தை, நம்பிக்கையை, வாழ்வின் மகிழ்ச்சி சூட்சமத்தை படம் பார்ப்பவர்களிடம் மிக இயல்பாக கடத்தும் முயற்சியாக மலர்ந்திருக்கிறது ‘பறந்து போ’.

கதை என்ன?

பொருளாதார நெருக்கடியில் ஆளுக்கொரு பக்கம் வருமானத்திற்காக ஓடிக்கொண்டிருக்கும் தம்பதி, மிர்ச்சி சிவா – கிரேஸி ஆண்டனி. பெற்றோரின் வருமான தேடலில், அவர்களின் அரவணைப்பும், நேரமும் கிடைக்காமல் வீட்டுக்குள்ளேயே முடங்கும் சிறுவன் மிதுல் ரயான். வீட்டுச்சிறையிலிருந்து பறந்து போக துடிக்கும் மகனுக்காக  பைக் ரைடு போகிறார் மிர்ச்சி சிவா. சிறுவன் பார்க்கும் வெளி உலகம் அளவற்ற ஆனந்தத்தை பரிமாறுகிறது. சிவாவுக்குள்ளும் அந்தப் பயணம் புது அனுபவத்தை கொண்டு வந்து கொட்டுகிறது. அப்பா – மகனின் பயணத்தின் ஊடே.. வர்த்தக கண்காட்சியில் புடவை கடை போட்டிருக்கும் கிரேஸி ஆண்டனியின் ஏக்கம், எதிர்பார்ப்பு மறுபுறம் என ’பறந்து போ’ மனதின் ஆழம் வரை பயணிக்கிறது.

படம் முழுக்க வரும் கதை மாந்தர்கள் அனைவருமே தங்களது பங்களிப்பை ஆகச் சிறப்பென செய்திருக்கிறார்கள் என்பதால் படத்தின் சில காட்சிகளை சொல்வது சாலச்சிறந்ததாக இருக்கும் என நினைக்கின்றேன்…

காட்சி 1 :

சிறுவயதில் ஒன்றாக படித்த அஞ்சலியும் சிவாவும் ஓரிடத்தில் அருகருகே அமர்ந்து பேசிக்கொண்டிருக்கின்றனர். அப்போது அங்கு வரும் அஞ்சலியின் கணவர், ”நீங்க ரெண்டு பேரும் பேசிட்டு வாங்க. நான் கடைக்குப் போறேன்” எனச் சொல்லிவிட்டு நகரும்போது அஞ்சலிக்கும் சிவாவுக்கும் இடையே அமர்கிறது மனிதர்களுக்கான பரிசுத்தமான நம்பிக்கை .

காட்சி 2 :

பொதுவாக பணக்காரர்கள் என்றாலே பொருளாதார தன்னிறைவற்றவர்களிடம் இடைவெளி விட்டோ அல்லது செயற்கையாகவோதான் பேசுவார்கள் பழகுவார்கள் என்றொரு எண்ணம் பரவலாக இருக்கும். ஆனால் வசதிபடைத்தவர்கள் எல்லோருமே அப்படியானவர்கள் அல்ல என்பதை விஜய் ஜேசுதாஸின் வீட்டில் சிறுவனும், சிவாவும் தங்கும் காட்சி அழகாக உணர்த்துகிறது.

காட்சி 3 :

பயண வழியில் ஒரு பாழடைந்த மண்டபம். அதில் வறுமையின் முகம் தெரியும் ஒரு பெரியவர்.   “உங்க பேரு என்ன” என சிவா கேட்கும் நொடியில் ”எம்ப்பரர்” என அந்த பெரியவர் பெருமை பொங்க சொல்வது, வாழ்வின் நம்பிக்கை வழிந்தோடும் காட்சி.

காட்சி 3 :

கிரேஸி ஆண்டனி சேர்த்து வைத்த பணப் பை காணாமல் போன நொடியில் வந்துபோகும் சந்தேக குணம், சபல மனம் இரண்டையும் முடிச்சுப்போடும் ஒரு காட்சி.

காட்சி 4 :

ஸ்கேட்டிங் போர்டு – பம்பரம் இரண்டையும் சிறுவர்கள் பரிமாறிக்கொள்ளும் இடத்தில் எந்த பொருள் எவ்வளவு விலை என்பதை தாண்டி, யாருக்கு எதில் விருப்பம் என்பதிலேயே இருக்கிறது உண்மையான மகிழ்ச்சி என்பதை உணர்த்தும் காட்சி என படம் நெடுக இயக்குநர் ராமின் உலகம் நம் மண்டையில் செல்லமாக குட்டுகிறது.

பார்க்க, ரசிக்க, வாழ, மகிழ, நம்ப இந்த உலகம் மனிதர்களுக்காகவே மடி திறந்து வைத்திருக்கிறது என்பதான கதைக்களம், காட்சி அமைப்புகள், கவிதையென அமைந்த ஒளிப்பதிவு, பின்னணி ஒலி என படம் பார்த்து முடியும் வரைக்கும் அதன் பிறகும் மனச் சாளரத்தில் நிம்மதியின் ரீங்காரம் நிறைகிறது.

படத்தின் குறைகள்?.. இருக்கிறது. அதனால் என்ன? யாரையும் பாதிக்காத; காயப்படுத்தாத குறைகள் அப்பழுக்கற்ற பூரணம் என்பதால் குறைகள் மறந்து கொண்டாடலாம் இந்தப் படத்தை.

‘பறந்து போ’ ஒரு ட்ரிப் அடிக்கலாம்!

-தஞ்சை அமலன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE