திரை விமர்சனம்

‘ஃப்ரீடம்’ திரை விமர்சனம்!

“இதுதான் நாடு

இதுதான் எல்லையென்று

சுருங்காது பறக்கும்

பறவையை

அன்னாந்து

பார்த்துக்கொண்டிருக்கும்

நாடற்றவனின் கண்களில்

எல்லையற்றதாய்

பரவுகிறது ஆனந்தம்!”

என்றோ படித்த இந்தக் கவிதையை மீண்டொருமுறை நினைவூட்டியது ‘ஃப்ரீடம்’ படம்.

90களின் காலக் கட்டத்தில் வேலூர் சிறப்பு முகாமிலிருந்து 43 இலங்கை அகதிகள் தப்பிக்க முயன்ற சம்பவத்தை அடிபடையாக கொண்டு எழுதப்பட்ட திரைக்கதையே ‘ஃப்ரீடம்’.

இலங்கையிலிருந்து அகதிகளாக வந்த ஈழத்தமிழர்கள், மண்டபம் முகாமில் அடைக்கப்படுகிறார்கள். இந்தியாவின் முன்னாள் பிரதமர் ஒருவர் கொல்லப்பட, முகாமில் இருந்தவர்களில் பலர் வேலூர் சிறப்பு முகாமில் அடைத்துவைக்கப்பட்டு விசாரணை பெயரில் சித்திரவதை செய்யப்படுகின்றனர். அந்த கொடுமையிலிருந்து தப்பிக்க  அவர்கள் திட்டமிடுகின்றனர். அதற்கு மூளையாக இருந்து ஸ்கேட்ச் போட்டு தருகிறார் சசிகுமார். சுதந்திரத்தை சுவாசிக்க நினைக்கும் அவர்களின் திட்டத்தின் முடிவு, சுபமா இல்லையா என்பதற்கான அடுத்தடுத்து விரியும் காட்சிகள் நம்மை அந்த களத்திலேயே நிறுத்தி வைப்பதே ‘ஃப்ரீடத்தின்’ வெற்றி!

‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தை தொடர்ந்து இந்த படத்திலும் ஈழத்தமிழ் பேசி நடித்திருக்கிறார் சசி.  “நாம தப்பு செய்யல.. அதனால கண்டிப்பா நியாயம் கிடைக்கும்” என்று காத்திருப்பவரின் கண்களில் விடுதலை கனவு தெரிவது; அது நடக்காது என்று தெரிந்த பிறகு அடிமை விலங்கை உடைத்தெறியும் வேட்கையை உடல்மொழியில் காட்டுவது என சசியின் நடிப்பு சிறப்பு.

சசியின் மனைவியாக லிஜோ மோல். நீண்ட நாள்களுக்குப் பிறகு சிறப்பு முகாமில் இருக்கும் கணவரை மகளுடன் சென்று பார்க்கப்போகும் இடத்தில் அது நடக்காத ஏமாற்றமும் ஏக்கமும் கோபமும் வெளிப்படுத்தும் விதம் யதார்த்தம்.

இதுதவிர பேத்தியை பிரிந்து இருக்கும் மு.ராமசாமி, சசியை கொல்ல முயற்சிப்பவர்கள், இரக்கமற்ற முகாம் அதிகாரி, வக்கீலாக வரும் மாளவிகா என படத்தில் நடித்திருக்கும் அத்தனை கலைஞர்களும் அந்தந்த கதாபாத்திரமாகவே மாறியுள்ளனர்.

ஜிப்ரானின் இசை, அந்தந்த கேரக்டர்களின் உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் புரிந்துகொண்டு உயிரூட்டியுள்ளது. சம்பவம் நடக்கும் இடத்தில் இருப்பது போன்ற உணர்வை ஒளிப்பதிவில் கொண்டுவந்திருக்கும் ஒளிப்பதிவாளருக்கும் பாராட்டுகள்.

வேலூர் கோட்டை முகாமை தத்ரூபமாக வடிவமைத்து கவனிக்கவைக்கிறார் கலை இயக்குநர்.

கொஞ்சம் பிசகினாலும் சென்சார், தேவையற்ற சர்ச்சைகளில் சிக்கிவிடும் ஆபத்தான கதைக்கருவுக்கு புத்திசாலித்தனமான திரைக்கதை  வடிவம் கொடுத்து படத்தை தொய்வில்லாமல் இயக்கியிருக்கும் இயக்குநர் சத்யசிவாவுக்கு வாழ்த்து பூங்கொத்து!

ஆங்காங்கே குறைகள் தென்பட்டாலும் படம் பார்ப்பவர்களின் மனதுக்கு நெருக்கமாகிறது ‘ஃப்ரீடம்’.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE