இதயத்தின் ஆழம் தொடும் ‘கெவி’ : விமர்சனம்
அரசின் அடிப்படை வசதிகள் கிடைக்காமல் கேட்பாரற்று வாழ்வை கடக்கும் மலைகிராமங்கள் இன்றும் நிறை இருக்கிறது. அதில் ஒன்றுதான் கொடைக்கானல் மலை உச்சியில் உள்ள கெவி. தேர்தல் நேரத்தில் மட்டும் எட்டிப்பார்க்கும் அரசியல்வாதிகள். அதன்பிறகு கண்டுகொள்ளாமல் போகிறார்கள்.
இந்நிலையில் நிலச்சரிவில் சிக்கியவர்களின் உயிரைக்கூடக் காப்பாற்ற முடியாத ஆதங்கத்தில் வாக்கு கேட்டு வரும் அரசியல்வாதியிடமும் போலீஸ் அதிகாரிகளிடமும் கடும் வாக்குவாதம் செய்கிறார் கெவியின் பூர்வக்குடியில் ஒருவரான மலையன். வார்த்தைகள் முற்றி கைகலப்பாகி அரசியல்வாதியும் போலீசும் அவமானப்படும் சூழல் ஏற்பட்டுவிடுகிறது.

இதற்கிடையே பிரசவ வலியில் துடிக்கும் மலையனின் மனைவி மந்தாரையை டோலி கட்டி மலைப்பாதையில் கிராமத்து மக்கள் தூக்கி வருகின்றனர். ஆறு மணி நேரம் நடந்தால் மட்டுமே மருத்துவமனையை அடைய முடியும் என்ற சூழ்நிலையில் பணிக்குடம் உடைந்து பிரசவ வலியில் துடிக்கிறார் மந்தாரை.
அதே நேரத்தில் மலையனை பிடிக்கும் போலீஸ் அவரை துன்புறுத்துகிறது. மலையன், மலையனின் மனைவி? மலைவாழ் மக்களின் நிலை என்ன? என்ற கேள்விகளுக்கு விடை தருகிறது க்ளைமாக்ஸ்!
மலை கிராமத்து மக்களின் வலியை, வேதனைகளை திரிபு இல்லாமல் காட்சிப்படுத்தியிருப்பதே படம் பார்ப்பவர்களை நிஜத்துக்கு நெருக்கமாய் அழைத்துச்செல்கிறது. அர்த்தமுள்ள வசனம் ஒரு கதாபாத்திரமாகவே பதிவாகிறது. கதையின் நாயகன் ஆதவன் மிக எதார்த்தமாக நடித்துள்ளார்! முகபாவனைகளில் உடல்மொழிகளில் கவனம் ஈர்க்கிறார் கதையின் நாயகி ஷீலா. ஆங்காங்கே கண்கலங்கவும் வைக்கிறார். வயிற்றில் குழந்தை அசைவதை பார்த்து மகிழ்ச்சியடையும் காட்சி நெகிழ்ச்சி.
உணர்வுபூர்வமான ஷீலாவின் நடிப்புக்கு விருது நிச்சயம். ஜெகன் ஜெயசூர்யாவின் ஒளிப்பதிவும், பாலசுப்ரமணியத்தின் பின்னணி இசையும் படத்தின் பலம்.
உண்மை சம்பவங்கள் அடிப்படையில் ஓர் உணர்ச்சிப் போராட்டத்தை நேர்மையாக பதிவு செய்திருக்கும் இயக்குநர் தமிழ் தயாளன் பாராட்டுக்குரியவர். பின் பாதியில் காட்சிகளின் நீளம் படத்தின் குறைகளில் ஒன்று.
இருப்பினும் உணர்வுமிக்க ஒரு படைப்பாக ‘கெவி’ இதயத்தின் ஆழம் தொடுகிறது.

