சரவணன் கடத்தும் உணர்வுகள் ஆகச் சிறப்பு : ‘சட்டமும் நீதியும்’ விமர்சனம்!
சட்டம் என்பது அனைவருக்கும் சமமானது. எனினும் எளிய மனிதனுக்கு நீதி என்பது பெரும்பாலும் எட்டாக்கனியாக இருக்கிறது. அப்படியொரு சாமானியனுக்கு நியாயம் பெற்றுத்தர போராடும் ஒரு வழக்கறிஞரின் கதையே ‘சட்டமும் நீதியுமாக’ மலர்ந்துள்ளது.
சட்ட நுனுக்கங்கள் தெரிந்திருந்தாலும் வழக்குகள் எடுத்து நடத்தாமல் நோட்டரி பப்ளிக்காக இருப்பவர் சரவணன். வீட்டில், வெளி உலகில் தனக்கான அங்கீகாரம், மரியாதை கிடைக்காமல் அவ்வப்போது அவமானங்களை சந்திக்கும் சரவணனுக்கு கிடைக்கிறது ஒரு சந்தர்ப்பம்.
அது…
காணாமல் போன மகளை கண்டுபிடித்துதர காவல் நிலையத்திற்கு அலைந்தலைந்து சோர்ந்துபோகும் முதியவர் ஒருவர் நீதிமன்ற வாசலில் தீக்குளிக்க முயற்சிக்கிறார். தனக்கு வந்தால் ரத்தம் அடுத்தவனுக்கு தக்காளி சட்னி என நினைக்கும் மனிதர்கள் அதை கண்டுகொள்ளாமல் இருக்க, அந்த மனிதருக்காக களத்தில் குதிக்கிறார் சரவணன். பொதுநல வழக்கை தொடரும் சரவணன் அதில் வெல்கிறாரா இல்லையா என்பதற்கு விடை சொல்கிறது க்ளைமாக்ஸ்.
ஏழு அத்தியாயங்களை கொண்ட இணையத் தொடராக வெளியாகியிருக்கும் ‘சட்டமும் நீதியும்’ முழுநீள திரைப்படத்தின் திருப்தியை தருவதே அதன் வெற்றியாக அமைகிறது.
வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார் சரவணன். தன் குடும்பத்தாரிடமே அவமானத்தை சந்திக்கும் இடங்களில் அவர் கடத்தும் உணர்வுகள் ஆகச் சிறப்பு. சரவணனை இப்படியும் பயன்படுத்தலாம்; அவ்வளவு ஆற்றல் கொண்டவர் என்பதை நிருபிக்கும் கதாபாத்திரமாக அமைந்துள்ளது. பிரமாதம் சரவணன்! வாழ்த்துகள்.
சரவணனிடம் ஜூனியராக சேரும் நம்ரிதாவும் நடிப்பின் முகமே தெரியாத அளவுக்கு இயல்பாகவும் நேர்த்தியாகவும் நடித்துள்ளார். அதேபோல் சட்டப் போராட்டம் நடத்தும் பாத்திரத்தில் சண்முகம், எதிர்தரப்பு வழக்கறிஞராக வரும் ஆரோவில் டி.சங்கர் என படத்தில் பங்கேற்ற அனைத்து கலைஞர்களும் சிறப்பு சேர்த்துள்ளனர்.
கோகுல் கிருஷ்ணனின் ஒளிப்பதிவு, விபின் பாஸ்கரின் பின்னணி இசை உள்ளிட்ட தொழில் நுட்ப கலைஞர்களும் படத்திற்கு பலம் சேர்த்துள்ளனர்.
திரைக்கதையில் விழும் முடிச்சுக்கள்; அதை அவிழ்க்கும் நேர்த்தி, நீதிமன்ற காட்சிகள், உரையாடல்களில் இருக்கும் எதார்த்தம் என திரைமொழியின் வித்தை தெரிந்தவராக அடையாளப்படும் இயக்குநர் பாலாஜி செல்வராஜ் பாராட்டுக்குரியவர்.
தமிழ் ஜி5 ஒரிஜினலில் அவசியம் காணுங்கள் ’சட்டமும் நீதியும்’.