ரீல்ஸ் பேய்களை மிரட்டும் ‘ட்ரெண்டிங்’ : விமர்சனம்!
VIEWS வெறிக்காக தனிப்பட்ட மனிதரின் அந்தரங்கத்தையும் வெளியுலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டும் ரீல்ஸ் பேய்கள் அதிகரித்துவிட்ட காலமிது. தனது ரீல்ஸ் லைக்குகளை குவிக்கவேண்டும் என்பதற்காகவே சாவின் வாசலை மிதிக்கும் கிறுக்கு கோமாளிகள் முளைத்துக்கொண்டிருக்கும் காலமிது. இதைச் சொல்லவரும் படம்தான் ‘ட்ரெண்டிங்’.
கதை என்ன?..
சிறந்த தம்பதி என்ற விருதை வாங்கியவர்கள் கலையரசன் – ப்ரியலயா ஜோடி. அதிக சந்தாதாரர்களை கொண்ட இவர்களது யூ டியூப் சேனலிலிருந்து வருமானம் கொட்டுகிறது. இதை நம்பி சொகுசு பங்களா வாங்குகிறார்கள். திடீரென இவர்களது சேனல் துண்டிக்கப்பட்டு வருமானத்திற்கு கேள்விக்குறி ஆகிறது. கடன் கொடுத்த கூட்டமும் தொந்தரவை தொடங்க, ரியாலிட்டி ஷோ ஒன்றில் பங்கேற்கிறார்கள். அதில் ஜெயித்தால் 2 கோடி பணம் கிடைக்கும், பிரச்சனைகள் தீரும் என்று நினைப்பவர்கள் சந்திக்கும் டாஸ்க்குகள் அடுத்தடுத்த சோதனையில் சிக்க வைக்கிறது. கலையரசன் – ப்ரியலயாவின் இல்லறத்தில் அடிக்கும் புயல் ஓய்கிறதா? இல்லையா? என்பதற்கு விடை சொல்கிறது க்ளைமாக்ஸ்.
காதல் மனைவியிடம் பொங்க பொங்க அன்பை அள்ளித்தருவது; ஒருக்கட்டத்தில் உள்ளுக்குள் இருக்கும் சந்தேக பேயால் டார்ச்சர் தருவது என காட்சிகளுக்கு தகுந்த நடிப்பை கொடுத்திருக்கும் கலையரசனுக்கு சபாஷ்.
பதற்றம், அதிர்ச்சி என்று நகர்ந்துகொண்டிருக்கும் கதையில் அவ்வப்போது ரிலாக்ஸ் மூடுக்கு நகர்த்தி ஈர்க்கிறார் ப்ரியா லயா. க்ளாமர் பொம்மையாக மட்டும் இல்லாமல் நடிப்பிலும் ஸ்கோர் செய்து கவனம் பெறுகிறார்.
க்ளைமாக்ஸில் வந்தாலும் பிரேமும் தனது கேரக்டருக்கு சிறப்பு சேர்த்திருக்கிறார். முக்கியமாக முகமே காட்டாமல் டாஸ்க் கொடுக்கும் அந்த நடிகருக்கும் பாராட்டுகள்.
கதையின் போக்கையும் மூடையும் கெடுக்காத ஒளிப்பதிவும் பின்னணி இசையும் படத்தின் பலம்.
ட்ரெண்டிங் மோகத்தில் வீழ்ந்து கிடக்கும் சமூகம் பற்றிய கான்செப்ட். செமையா திங் பண்ணியிருக்கிறார் இயக்குநர் சிவராஜ். ஆனால் ஒரு கட்டத்தில் அடுத்தடுத்த டாஸ்க்.. அது கொடுக்கும் அதிர்ச்சி என ஒரே மாதிரியான காட்சி நகர்தல் சற்று அலுப்பை தருகிறது.
ஒரு வீடு, இரண்டு பிரதான கதாபாத்திரங்கள் சொற்ப துணை கதாபாத்திரங்கள் என்ற புத்திசாலித்தனமான திரைக்கதை, தயாரிப்பாளரின் பட்ஜெட்டை பதம் பார்க்காமல் இருக்க உதவி இருக்கிறது.
கதையின் முடிவு விழிப்புணர்வை தருவதுபோன்று அமையாதது ஏமாற்றம். இருப்பினும் ரீல்ஸ் பேய்களை கொஞ்சமாவது மிரட்டும் இந்த ‘ட்ரெண்டிங்’.