திரை விமர்சனம்

‘தலைவன் தலைவி’ – விமர்சனம்!

ஓபன் பண்ணினா ஒரு குல தெய்வ கோயில். இதில் ஒவ்வொரு கேரக்டராக உள்ளே வருகிறது. ஒரு குழந்தைக்கு மொட்டை போடும்போது கால்வாசி முடியை இறக்கிய நிலையில், களத்தில் இறங்குகிறார் விஜய்சேதுபதி.  “எனக்கு தெரியாமலேயே என் புள்ளைக்கு மொட்டை போடுறீங்களா” என்று சலம்புகிறார் விஜய்சேதுபதி. ஆமா. அந்தக் குழந்தை விஜய்சேதுபதி – நித்யாமேனன் குழந்தை.

கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்து வாழும் நிலையில்தான் இந்த சம்பவம் அரங்கேறுகிறது. ஓட்டல் தொழில் செய்துவரும் விஜய்சேதுபதியும் நித்யா மேனனும் ஆசை ஆசையாக விரும்பித்தான் கல்யாணம் செய்துகொள்கின்றனர். அப்படி இருக்கும்போது இருவரும் பிரியும் அளவுக்கு என்ன பிரச்சனை வந்தது? திரும்பவும் இல்லறத்தில் இணைகிறார்களா இல்லையா என்பதற்கு பாண்டிராஜ் எழுதியிருக்கும் திரைக்கதையே ‘தலைவன் தலைவி’யாக மலர்ந்துள்ளது.

நடிப்பு ராட்சசன் விஜய்சேதுபதியும் நடிப்பு ராட்சசி நித்யாமேனனும் போட்டி  போட்டு மிரடியுள்ளனர்.  தன் மனைவியிடம், `நான் பேசல மேடம், நான் பேசல மேடம்’ எனக் கத்துவதாகட்டும், கோபித்துக்கொண்டு செல்லும்போது கெஞ்சுவதாகட்டும், சண்டைக் காட்சிகளில் திமிறிக்கொண்டு நிற்பதாகட்டும் தனக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார்.

`நானா பாத்து கல்யாணம் பண்ணினேன். நீங்கதான கூட்டிட்டு வந்திங்க’ எனப் பெற்றோரிடம் மல்லுக்கட்டிவிட்டுக் கிளம்பிச் செல்வது தொடங்கி, கட்டை பையை எடுத்துக்கொண்டு அடிக்கடி கிளம்பிவருவது வரை ஆகாச வீரனின் பேரரசியாக இதுவரை தான் நடித்திடாத கதாபாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்திப் போகிறார் நித்யா மெனேன்.

இவர்கள் தவிர யோகி பாபு, சரவணன், செம்பன் வினோத், காளி வெங்கட், ஆர்.கே.சுரேஷ், மைனா நந்தினி, தீபா, ரோஷினி ஹரிப்ரியன், சென்றாயன் எனப் படம் முழுக்க அத்தனை கதாபாத்திரங்கள். அனைவரும் தங்களுக்குக் கொடுத்த பாத்திரத்தைச் செய்திருக்கிறார்கள்.

கருப்பசாமி கோயில், ஹோட்டல், மலை எனக் குறிப்பிட்ட இடங்களில் மட்டும் பயணிக்கும் கதையில், அனைத்து ஏரியாவிலும் தனது ஒளிப்பதிவைச் செவ்வனே செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் எம்.சுகுமார்.

கல்யாணம், சண்டை, குழந்தை என ஒவ்வொரு தளங்களில் நடக்கும் பிளாஷ்பேக் கதை சொல்லலுக்குத் தன்னால் இயன்ற ஒத்துழைப்பைக் கொடுத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் பிரதீப் இ.ராகவ்.

`ஆகாச வீரன்’, `பொட்டல மிட்டாய்’ பாடல்களில் ச.நாவின் முத்திரை தெரிகிறது.

லவ் – ஹேட் ரிலேசன்ஷிப்பை குடும்ப உறுப்பினர்களின் தலையீடு எப்படிப் பிரளயமாக மாற்றுகிறது என்பதை காமெடி ட்ரீட்மென்ட்டில் கலகலப்பாகத் தந்திருக்கிறார் இயக்குநர் பாண்டிராஜ்.

ஆனால், சதா சண்டையால் பிரிந்து செல்லும் மனைவி, அவரிடம் கெஞ்சும் கணவன் என மீண்டும் மீண்டும் ரிப்பீட் அடிப்பது ஒரு கட்டத்தில் அயர்ச்சியை ஏற்படுத்துகிறது.

அம்மாவாக வரும் தீபா திடீரென சேர்ந்து வாழச் சொல்வதும், பின் பிரியச் சொல்வதுமாக மாறி மாறிப் பேசுவதும் பல இடங்களில் குழப்பத்தைத் தருகிறது.

இடைவேளை வரை விஜய்சேதுபதி காட்டுக் கத்து கத்துவது கடுப்பேத்து மை லார்ட்!

‘தலைவன் தலைவி’ இரண்டாம் பாதி மட்டும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE