படத்தின் ஒன்லைன் சூப்பர் சுவாரஸ்யம். ஆனால்… ‘அக்யூஸ்ட்’ விமர்சனம்
ஒரு கட்சித் தலைவரை கொன்றுவிட்டு சிறைக்குப் போகிறார் அக்யூஸ்ட் உதயா. அவரை சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்த கொண்டு செல்கிறார்கள். வழியிலேயே அவரை போட்டுத்தள்ள ப்ளான் போடுகிறது ஒரு கூட்டம். இன்னொரு பக்கம் போலீஸும் ஸ்கெட்ச் போடுகிறது. பாதுகாப்புக்காக செல்லும் காவலர் அஜ்மலுக்கு விஷயம் தெரிந்துவிட, உதயாவை காப்பாற்றி அழைத்துச் செல்கிறார். ஒரு பக்கம் போலீஸ், இன்னொரு பக்கம் கூலிப்படை துரத்தலில் உதயாவின் நிலை என்ன என்பதை கொஞ்சம் க்ரைம், கொஞ்சம் காதல், அங்கங்கே டிவிஸ்ட் வைத்து பொட்டலம் கட்டினால் ‘அக்யூஸ்ட்’ ரெடி.
படத்தின் நாயகன், தயாரிப்பாளர் என இரட்டை சவாரி செய்திருக்கும் உதயா, பல வருடங்களாக நடித்துக்கொண்டிருக்கிறார். ‘திருநெல்வேலி’ படத்தில் ஆரம்பித்த அவரது திரைப்பயணம் இந்தப்படத்தில்தான் சிறப்பான நடிப்பை தந்திருக்கிறார். காமெடியனா? ரவுடியா? இல்லை இரண்டும் சேர்ந்த சிரிப்பு ரவுடியா என தெளிவற்ற கேரக்டரில் டிரைவ் செய்வது குழப்பம். இடையிடையே காதலியுடன் ரொமான்ஸ் செய்யும் காட்சியெல்லாம் கதைக்கு தேவையற்ற எக்ஸ்ட்ரா ஃபிட்டிங். க்ளைமாக்ஸ் காட்சியில் ஒட்டுமொத்த நடிப்பையும் இறக்கி வைத்திருக்கிறார்.
சாதாரண கான்ஸ்டபிளாக வரும் அஜ்மல், உதயாவை காப்பாற்ற ஆக்ஸன் கோதாவில் குதித்து அடித்து நொறுக்குகிறார். ஆனால் அடுத்த சீனே சோனி போலீஸ் போல் நடந்துகொள்கிறார். பாவம் இயக்குநர் சொன்னதைதானே செய்ய முடியும்? இவருக்கும் ஒரு காதலி. அதுவும் கதைக்கு தேவையே இல்லாத ஆணி!
நாயகியாக ஜான்விகா. நடிப்பெல்லாம் நல்லா வந்தாலும் கமர்ஷியல் கதையின் ஹீரோயின் மெட்டீரியல் இல்லை.
இடைவேளைக்கு சற்று முன்பு எண்ட்ரி ஆகும் யோகிபாபு ஆடியன்ஸை அவ்வப்போது ரிலாக்ஸ் மோடுக்கு கொண்டுவருகிறார். லாட்ஜ் ஓனராக வருபவர், அன் வாண்டடாக அக்ஸ்யூஸ்டுடன் சுற்றுவது லாஜிக் எரர். காமெடியன் வேண்டும் என்பதற்காக தேவையில்லாமல் திணிக்கப்பட்ட கேரக்டர்.
செல்வராகவன் பட ரேஞ்சுக்கு பாடலை கொடுத்துவிட வேண்டும் என்ற வெறியோடு இசையமைப்பாளர் வேலை செய்திருப்பது தெரிகிறது. பின்னணி இசையிலும் கொடுத்த காசுக்கு மேல் நெஞ்சை தொட முயற்சித்து தோற்கிறார்.
ஒரு கைதி. அவனை கோர்ட்டுக்கு கொண்டு செல்லும் வழியில் கொலை முயற்சி நடக்கிறது. கைதி கோர்ட்டுக்கு போய் சேர்கிறானா இல்லையா ? வழியில் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன? என்று படத்தின் ஒன்லைன் சூப்பர் சுவாரஸ்யம். ஆனால் அதற்கு இயக்குநர் பிரபு ஸ்ரீநிவாஸ் நேர்த்தியான திரைக்கதையை பின்ன மிஸ் பண்ணி, கதை எங்கெங்கோ வட்டமடிப்பதும், எப்போதோ முடிந்துபோன க்ளைமாக்ஸை இழுத்தடிப்பதுமாக உள்ளதால் ஏமாற்றுகிறான் இந்த ‘அக்யூஸ்ட்’ பார்டரில் பாஸ் ஆகிறான்.