தீயவர்களை சுட்டெரிக்கும் ‘போகி’ விமர்சனம்!
நமக்கு தெரியாமலேயே ரகசிய கேமராக்கள் மூன்றாவது கண்ணாய் நம்மை கண்கானிக்கும் காலமிது. எதுவும் அறியாத அப்பாவிகளை அவர்களது அந்தரங்கங்களைப் படமாக்கி மிரட்டுவது பாலியல் சுரண்டல் செய்வது பணம் பறிப்பது போன்ற குற்ற செயல்கள் அதிகரித்து வருகின்றன.இப்படிப்பட்ட கும்பலைத் தகுந்த ஆதாரங்களுடன் பிடிக்க காவல்துறை முயல்கிறது.
இன்னொரு பக்கம் குற்றவாளிகளைத் தேடிப்பிடித்து நாயகன் நபி நந்தியும், ஷரத்தும் கொலை செய்கிறார்கள்.படத்தில் இது ஒரு திசையின் கதை என்றால் இன்னொரு திசையில் பால்யவயதில் பிரிந்து சென்ற தோழியை பல ஆண்டுகளுக்குப் பிறகு நாயகன் மீண்டும் சந்திக்கிறார். காதலியிடம் மலர்ந்த காதலை வெளிப்படுத்த முடியாமல் தனது கொலை வெறிப் பயணத்தை,அதாவது அந்த கொடியவர்களை களை எடுக்கும் பயணத்தைத் தொடர்கிறார். நாயகன் நபி நந்திக்கும் இந்த கும்பலுக்கும் என்ன தொடர்பு ?அதில் நண்பனும் இணைந்து கொண்டது ஏன்? என்ற கேள்விகளுக்குப் சமகாலத்தில் நிகழும் பாலியல் குற்றங்கள் பின்னணியில் பின்னப்பட்ட கதையே ‘போகி’.
நாயகனாக அறிமுகமாகியிருக்கிறார் நபி நந்தி. முதல் படம் என்றாலும் பல படங்கள் நடித்தது போன்ற பக்குவம் அவரது நடிப்பில் தெரிகிறது. பாசக்கார அண்ணனாக தனது தங்கைக்கு நேர்ந்த கொடுமைக்கு எதிராகப் பழி தீர்க்கும் காட்சிகளில் ஆவேசம் .
நாயகனின் தங்கையாக ‘லப்பர் பந்து’ புகழ் சுவாசிகா. போக்குவரத்து வசதிகள் எட்டாத மலைக் கிராமத்தில் முதல் மதிப்பெண் பெற்று மருத்துவக் கனவோடு இருப்பவர்.அப்படிப்பட்டவர் கொடிய மிருகங்களால் சிதைக்கப்படும் போது கலங்க வைக்கிறார்.
நாயகனுடன் பயணிக்கும் ஷரத், ஒரு பாடலில் வந்து நடனமாடி ஈர்க்கும் பூனம் கவுர், காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் வேல ராமமூர்த்தி, வில்லன் கதாபாத்திரத்தில், கொடூர தோற்றத்தில் வரும் மொட்டை ராஜேந்திரன், ஒரு காட்சியில் வந்தாலும் சிரிக்க வைக்கும் எம்.எஸ்.பாஸ்கர், மூத்த நடிகர் சங்கிலி முருகன், ‘பிச்சைக்காரன்’ கார்த்தி போன்ற துணைப் பாத்திரங்களும் கவனிக்க வைக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் ராஜா சி.சேகரின் ஒளிப்பதிவும் மரியா மனோகரின் இசையும் ஓகே ரகம். சினேகனின் வரிகளில் பாடல்கள் அனைத்தும் பரவாயில்லை. எஸ்.டி.சுரேஷ்குமாரின் வசனம் படத்திற்கு பலம்.
சமூக பிரச்சினையை மையப்படுத்தி இந்தப் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் விஜயசேகரன்.எஸ். பழங்குடியின மக்களின் வலி மிகுந்த வாழ்க்கையைச் சமகால நாட்டு நடப்புகளோடு இணைத்துப் படமாக்கி இருக்கிறார்.
எனினும் தீயவர்களை சுட்டெரிக்கும் ‘போகி’யாக இருப்பதால் வரவேற்கலாம்!