திரை விமர்சனம்

சல்யூட் அடிக்க வைக்கும்  ‘சரண்டர்’ : விமர்சனம்!

திருவள்ளூர் மாவட்டம், திருமழிசை காவல் நிலையத்தில் காணாமல் போகும் ஒரு துப்பாக்கி. நேர்மையான காவலரான லாலும் பயிற்சி காவலராஅன தர்ஷனும் அதனை தேடி அலைகின்றனர்.

இன்னொரு பக்கம் வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா செய்ய ஐஸ் ஃபேக்ட்ரி நடத்தும் சுஜித்திடம் ஒப்படைக்கப்படும் பத்து கோடி ரூபாய் பணம், ஒரு விபத்தில் காணாமல் போகிறது. அடுத்த நான்கு நாள்களில் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், லாலும், தர்ஷனும் துப்பாக்கியைத் தேடி அலைய, தொலைந்து போன பணத்தைத் தேடி சுஜித்தும் அவரது கூட்டாளிகளும் அலைகிறார்கள்.இந்தத் தேடலில் நடக்கும் சம்பவங்களே ‘சரண்டர்’ படத்தின் கதை.

ஆக்ஷன், எமோஷன், பதற்றம், ஆக்ரோஷம் போன்றவற்றில், பாதி நடிப்பை மட்டுமே சரண்டர் செய்கிறார் தர்ஷன். அடக்க முடியாத கோபம், ஆற்றாமையில் உடைந்தழும் தருணம் போன்றவற்றில் தன் அனுபவ நடிப்பைக் காட்டி, எமோஷனல் ஏரியாவைத் தன் கட்டுப்பாட்டில் வைக்கிறார் லால்.

ஆங்காரம் கொண்ட வில்லனாக சுஜித், தேவையான வெறுப்பைச் சம்பாதிக்கிறார். தன் நுணுக்கமான முகபாவங்களாலும் உடல்மொழியாலும் டெம்ப்ளேட் வில்லன் வகையறாவிலிருந்து சுஜித் தனித்துத் தெரிகிறார்.

வில்லன் தம்பியாக கௌசிக், காவல்துறை அதிகாரிகளாக அருள், ரம்யா ராமகிருஷ்ணன், ரவுடியாக சுந்தரேஸ்வரன், பாவப்பட்ட பெண்ணாக செம்மலர் அன்னம், காமெடிக்கு முனீஸ்காந்த் எனப் பலரில் நடிப்பு பலம் சேர்கிறது.

இரவு நேரக் காட்சிகளில் த்ரில்லருக்கான ஒளியுணர்வைக் கடத்துவதோடு, பரபர காட்சிகளிலும் கவனிக்க வைக்கிறார் ஒளிப்பதிவாளர் மெய்யேந்திரன்.

விறுவிறுப்பான காட்சிகளையும், சண்டைக்காட்சிகளையும் கச்சிதமான கட்களால் நேர்த்தியாக்கியிருக்கும் படத்தொகுப்பாளர் ரேணு கோபால், வழித்தவறியோடும் இரண்டாம் பாதியில் பேரிகேடைப் போடத் தவறுகிறார்.

ஆக்ஷன், த்ரில்லர், எமோஷன் போன்ற துப்பாக்கிகளுக்குத் தேவையான தோட்டாக்களை நிறைத்திருக்கிறது விகாஸ் படிஸாவின் பின்னணி இசை. காவல் நிலையம், ஐஸ் ஃபேக்ட்ரி போன்றவற்றில் கலை இயக்குநர் ஆர்.கே. மனோஜ் குமாரின் உழைப்பு தெரிகிறது.

பயிற்சிக் காவலர் புகழேந்தி, பெரியசாமி, அவர்களின் காவல் நிலையம், அதற்குள் உள்ள அரசியல், கனகின் குற்றப்பின்னணி, அவரின் ராஜாங்கம் என அடுக்கடுக்காக, கடகடவென விரியும் திரைக்கதை, தேவையான ஆழத்தையும் கொடுக்கிறது.

துப்பாக்கியும், பணமும் காணாமல் போகும் இடத்திலிருந்து, இடைவேளை வரை பரபரப்பைத் தக்க வைக்கிறது திரைக்கதை. இரண்டு கதைகளும் இணையும் இடங்கள், இரண்டு கதையின் மாந்தர்கள் உரசிக்கொள்ளும் காட்சிகள் முதற்பாதியின் முதுகெலும்பாக நிற்கின்றன.

காவல் நிலையத்திற்குள் இருக்கும் அதிகார மோதல், காவல்துறை-அரசியல்வாதிகள்-ரவுடிகளுக்கிடையிலான உறவு போன்ற கிளைக்கதைகளும், மையக்கதைகளுக்கு வலுசேர்க்கின்றன. அதேநேரம், காமெடிக்காக வரும் முனீஸ்காந்த்தின் கிளைக்கதை சிரிப்பை வரவழைக்காமல், வேகத்தடையாக மட்டுமே துருத்திக்கொண்டு நிற்கிறது.

இடைவேளைக்குப் பிறகு மையக்கதையிலிருந்து விலகி, வெவ்வேறு பிரச்னைகளில் தடம்புரள்கிறது திரைக்கதை. ஒரு கட்டத்தில் கதையின் ஆரம்பப் புள்ளியே மறந்து போகும் அளவிற்குன்வெகு தூரம் செல்கிறது திரைக்கதை. ஆங்காங்கே, சில காட்சிகள் பதற்றத்தையும் கொடுத்தாலும், திடீரென்று வரும் எமோஷன், அதற்குத் துணை செய்யும் தேவையில்லாத ஆக்ஷன் என நீண்டு கொண்டே போகிறது திரைக்கதை.

முனீஸ்காந்த் கதையும் அதன் தேவையை மீறி, இறுதிவரை வருவது விறுவிறுப்பின் வேகத்தை மட்டுப்படுத்துகிறது. ஒருவழியாக இறுதிக்காட்சிக்கு முன் மையக்கதைக்கு யூடேர்ன் போடும் திரைக்கதை, வேகவேகமாக லாஜிக்குகளை மறந்து, வழக்கமான ஹீரோயிஸக் காட்சிகளோடு கிளைமாக்ஸை அடைகிறது. நடிகர்களின் நடிப்பால், இறுதியில் வரும் எமோஷன் காட்சிகள் பாஸ் ஆகின்றன.

சிறுசிறு குறைகள் இருந்தாலும் நேர்மை இழையோடும் இந்த  ‘சரண்டருக்காக’அடிக்கலாம் சல்யூட்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE