‘சென்னை ஃபைல்ஸ் – முதல் பக்கம்’ விமர்சனம்!
வெற்றி ஹீரோவாக நடித்தாலே “அப்போ இந்தப்படம் பார்கலாம்ப்பா’என்ற நம்பிக்கையை தரும் வெற்றியின் கதை தேர்வு அப்படி இருக்கும். அந்த நம்பிகையை ‘சென்னை ஃபைல்ஸ் – முதல் பக்கம்’ காப்பாற்றுகிறதா?
பார்க்கலாம்?
கிரைம் நாவல் எழுத்தாளரின் மகன் வெற்றி. தனது தந்தையின் வாழ்க்கையை தொடராக எழுத சென்னை வருபவருக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் தம்பி ராமையாவுடன் நட்பு ஏற்படுகிறது. வெற்றியின் துப்பறியும் திறனால் ஈர்க்கப்படும் தம்பி ராமையா, தனக்கு உதவியாக வைத்துக் கொண்டு பயணிக்கிறார். அப்போது, பெண் நிருபர் ஒருவரும், சில பள்ளி மாணவர்களும் ஒரே மாதிரியாக கொடூரமாக கொலை செய்யப்படுகிறார்கள். இந்த தொடர் கொலைகளின் பின்னணியை கண்டுபிடிக்க களத்தில் இறங்கும் வெற்றிக்கு வெற்றிக் கிடைத்ததா இல்லையா என்பதே கதை.
த்ரில்லர் கதைக்கு செட்டாகக்கூடிய வெற்றிக்கு அவர் ஏற்கும் கேரக்டர் அல்வா சாப்பிடுவது மாதிரி. ஆனால் இந்தப் படத்தின் கேரக்டர் ஆடியன்ஸுக்கு அல்வா கொடுத்துள்ளது. அதிர்ச்சியான கட்டங்களில்கூட ஒரே மாதிரியான ரியாக்ஷன் கொடுத்து அலுப்பூட்டுகிறார். எதாவது ஒரு காட்சியிலாவது அசத்திவிடுவார் என்று நினைத்தால் கடைசிவரை ஏமாற்றுகிறார். போங்க சார்…
ரிப்போர்ட்டராக வரும் நாயகி சில்பா மஞ்சுநாத்தின் கதாபாத்திரமும் அலுத்தமானதாக இல்லை. திடீரென வருவதும் திடீரென காணாமல் போவதுமாக சில்பாவின் கேரக்டர் அந்தரத்தில் தொங்குகிறது.
இன்ஸ்பெக்டராக தம்பிராமையா ஓவர் ஆக்டிங். காவல் நிலையத்தில் சீரியஸான நேரங்களில்கூட சிரிப்பூட்ட முயற்சிப்பதெல்லாம் கடுப்பேற்றுகிறது.
வில்லனாக அறிமுகமாகியுள்ளா மகஷ் தாஸ். முரட்டு உருவம் மிரட்டும் பார்வையெல்லம் சரி சாரே! நடிப்பு எங்கே? அப்புறம் ரெடின் கிங்ஸ்லி. வழக்கம்போலவே காமெடி பெயரில் எரிச்சலூட்டுகிறார்.
இசை, ஒளிப்பதிவு, எடிட்டிங், இயக்கம் உள்ளிட்ட டெக்னிக்கல் ஏரியாவும் கதை – திரைக்கதையில் சத்து இல்லாததால் தரம் குறைவானதாக உள்ளது.
‘சென்னை ஃபைல்ஸ் – முதல் பக்கம்’ போரடிக்கிறது!