“இத செஞ்சா ஹீரோயின்கள் ஜெயிக்கலாம்” : தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்க விழாவில் சிம்ரன் கொடுத்த டிப்ஸ்!!
தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா சென்னையில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினர்களாக நடிகை சிம்ரன் மற்றும் மூன்று தேசிய விருதுகளை வென்ற ‘பார்க்கிங்’ பட இயக்குநர் ராம்குமார் இருவரும் கலந்துகொண்டு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை மற்றும் ரெயின் கோட் வழங்கி விழாவை சிறப்பித்தனர்.
நிகழ்ச்சியின் துவக்கமாக செயலாளர் கோடங்கி ஆபிரகாம் வரவேற்புரை வழங்கினார். அடுத்து சங்கத்தின் செயல்பாடுகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து விரிவாக பேசிய சங்கத் தலைவர் கவிதா, சங்கத்திற்கு உதவிய திரை பிரபலங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
நிகழ்வில் இயக்குநர் ராம்குமார் பேசியதாவது:-
“இந்த மேடை எனக்கு மிகவும் சிறப்பான மேடை. மனதுக்கு நெருக்கமான மேடை. முதன்முதலில் ‘பார்க்கிங்’ திரைப்படத்தை இங்கே திரையிட்டு பத்திரிகையாளர்கள் முன்பு பாராட்டு பெற்றேன். அதே மேடையில் தற்போது தேசிய விருது பெற்று அந்த மகிழ்ச்சியுடன் பத்திரிகையாளர்கள் முன்பு அங்கீகாரம் பெரும்பொழுது இன்னும் சந்தோஷமாக இருக்கிறது. அன்று நீங்கள் கொடுத்த அங்கீகாரம் தான் இன்று என்னை தேசிய விருதுவரை உயர்த்தி இருக்கிறது. என் முதல் பார்வையாளர்கள் நீங்கள் தான். உங்கள் முன்பு இந்த இடத்தில் வந்து நிற்பது எனக்கு பெருமையாக இருக்கிறது” என்றார்.
தேசிய விருதுகள் அறிவிப்புக்கு பிறகு இயக்குநர் ராம்குமார் கலந்து கொண்ட முதல் நிகழ்ச்சி இது என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை சிம்ரன் பேசியதாவது:-
“30 வருடங்களாக இந்த சினிமாவில் நிலைத்து நிற்க நீங்கள் கொடுத்த ஆதரவு தான் காரணம். இன்று ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் நூறாவது நாள். இந்த நாளை இங்கே உங்களுடன் கொண்டாடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். எனக்கு எல்லா விதத்திலும் நீங்கள் ஆதரவாக இருந்திருக்கிறீர்கள் அதேபோல் என்னால் முடிந்த ஆதரவுகளையும் நான் எப்போதும் கொடுக்க தவற மாட்டேன்.” என்றார்.
தொடர்ந்து பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்த சிம்ரன், “எத்தனையோ நடிகைகள் என்னை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டாலும் எனக்கு ஸ்ரீதேவிதான் முன் மாதிரி. இப்போது வரும் நடிகைகள் கதைத்தேர்வில் கவனமாக இருந்தால் ஃபீல்டில் நீண்ட நாள்கள் இருக்கலாம். ரஜினி சாரின் ‘கூலி’ படத்தில் நான் நடிக்கவில்லை என்றாலும் அந்தப்படத்தை பார்க்க ஆவலாக உள்ளேன்” என்றார்.
‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படம் நூறாவது நாளை எட்டிய நிலையில் அதற்கும் சிறப்பு சேர்க்கும் வகையில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. மேலும் சிறப்பு விருந்தினர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது. தொடர்ந்து சங்க உறுப்பினர்களுக்கு அடையாள அட்டையும், மழைக்காலம் துவங்க இருப்பதால் உறுப்பினர்களுக்கு ரெயின் கோட் கொடுக்கப்பட்டு , சங்க உறுப்பினர்கள் சிறப்பு விருந்தினர்களுடன் குழுவாக நினைவு புகைப் படம் எடுத்துக் கொண்டு சங்க விழா இனிதே நிறைவடைந்தது.